Thursday 14 March 2013

TAMIL KATHAIKAL

  1. சிறுகதைகள்


    நான்

    நான் யார்? இந்தப் பேரண்டத்திற்குள் நான் எங்கோ ஓரிடத்தில், சிறு உயிரியாக, வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தெரிகின்ற போதிலும், சில நாட்களாக இப்படி ஒரு எண்ணவோட்டம்: அண்டத்தினுள் நான் இல்லை. வேறெங்கோ இருக்கிறேன். ஒரு சிறு உயிரியாக பேரண்டத்திற்குள் நான் வாழ்வதாக எனக்குத் தோன்றுவதெல்லாம், வேறொன்றுமல்ல, நான் காணும் கனவு. இந்தக் கனவுதான் வாழ்க்கையென்று நம்பிக் கொண்டு இதுநாள் வரை இருந்துவிட்டேன். இந்தக் கனவை உருவாக்கியவை என் ஆறு அறிவுகள். நான் யார் என்பது கனவைத் துறக்கும்போதுதான் தெரியும். கண்களைத் திறக்கும் போதல்ல; ஐம்புலன்களையும் மூடும்போதுதான் அந்தக் கனவு போகும். இது சுலபமில்லை. ஆனாலும்கூட அந்த நிலையை கற்பனை செய்து கொள்வது சுலபம். கற்பனையில் நான் செய்து கொள்ளும் இந்தப் பரிசோதனைகள், நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும். பரிசோதனை 1:
    கண்திறந்து அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னால் அண்டத்தின் பல்வேறு உருவங்கள். குழந்தை ஒன்றின் மனோபாவத்துடன் பார்க்கிறேன் அவற்றை. பல்வேறு வடிவங்களில், நிறங்களில், சிறியதாகவும், பெரியதாகவும் உருவங்கள் தெரிகின்றன. நான் நினைக்கும்போது நினைத்தபடி நகரக்கூடிய, எனக்குக் கீழேயுள்ள உருவம் ஒன்றை மட்டும் என்னுடையதென கருதி வருகிறேன். கைகளை தட்டி விளையாடப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு கைத்தட்டலையும் நான்கு விதமாக உணர்கிறேன். கைகள் இணையும் காட்சியாகவும், தட்டிக் கொள்ளும் சப்தமாகவும், கைகள் தொட்டுக் கொள்ளும் உணர்ச்சியாகவும், கைதட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியாகவும் என நான்கு விதமாக. முதல் பரிசோதனையை மேற்கொள்ளப் போகிறேன். என் கண்களை மூடிக் கொள்கிறேன். உருவங்கள் மறைந்துவிட்டன என நான் நினைத்தாலும் இல்லையென்கின்றன விழிதிரவத்திலுள்ள தூசிகள். அங்குமிங்கும் அசைந்தும், பல வண்ணங்களை உமிழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இதைவிட பெரிய காட்சியாக, அவற்றிற்கு அப்பால் பிரம்மாண்டமான இருட்டொன்று பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறது.
    இப்போது, தியானங்கள், தவங்கள் மூலம் ஞானிகள் பெறும் சக்தியை நான் பெற்றுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதாவது என் பார்வை என்கிற அறிவை இழந்து விடுகிறேன். இப்போது இருட்டு கூட எனக்குத் தெரிவதில்லை. இருப்பினும் என் மூளையில் கண்கள் மூலம் நான் கண்ட பழைய நினைவுகளின் காட்சிகள் அனைத்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ, என் நினைவுகளிலிருந்து காட்சிகளை மட்டும் அழித்துவிடுகிறேன். ஒரு பிறவிக்குருடன் மூலையிலிருப்பது போன்று என் நினைவுகள் இப்போது காட்சிகளற்றுக் கிடக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பு நான் கைத்தட்டிய நிகழ்ச்சியும் கூட.
    பரிசோதனை 2:
    பார்வையை இழந்த கையோடு அடுத்த பரிசோதனைக்கு உட்படுகிறேன். என் காதுகளால் இனி எந்த சப்தத்தையும் கேட்கப் போவதும் கிடையாது. கேட்டல் அறிவையும் இழந்து விடுவதாய் என் கற்பனைப் பரிசோதனை நீள்கிறது. இருப்பினும், ஒலியலைகளால் ஆகாத சப்தங்கள் என் மூளையில் ஒலிக்கிறது. நான் கற்ற மொழியால் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டிருந்தன என் நினைவுகள். என் தாய்மொழி வடிவில்தான் நான் இதுவரை சிந்தித்து வந்திருக்கின்றேன். இப்போது என் நினைவுகளிலிருந்து மொழியை நீக்கிவிடும் அதிசயத்தையும் செய்கிறேன்.
    இப்போது பிறந்ததிலிருந்து உள்ள என் நினைவுகள் அனைத்தும், மொழி அறியாத ஆதிவாசி மனிதனின் வார்த்தைகளற்ற மன பதிவுகள் போன்று இருக்கின்றன. நான் கைதட்டியது கூட அவ்வாறே பதிந்திருக்கிறது.
    பரிசோதனை 3:
    என் நுகர்தல், சுவைத்தல் அறிவுகளை அகற்றிவிட்டு, அடுத்த பரிசோதனைக்கு வரும்போது நான் நான்கு அறிவுகளற்று இருக்கிறேன். நான் எங்கோ அமர்ந்திருப்பதாக மட்டும் என்னால் உணரமுடிகிறது. அமர்ந்தபடியே இருக்கிறேனென்பதால் என் முட்டிகள் வலிக்கின்றன. இரத்த ஓட்டம் செல்லாத பாதப் பகுதி சோகை பிடித்து மந்தமாக இருக்கிறது. இதோ இப்போது உடலால் நான் உணரக்கூடிய தொடு உணர்வு, வலி, கூச்சம், சுகம் போன்ற அனைத்தையும் இழக்கிறேன். அதோடு, தொடு உணர்வு, சம்பந்தப்பட்ட என் மூளைப் பதிவுகளையும் கூட. இந்த வினாடி முதல் உடல் என்னுடையதல்லாததாக மாறுகிறது. ஆனாலும் நான் இருக்கிறேன். "ஏன் கைத்தட்டினேன்" என்பது உள்ளிட்ட பல வருட நினைவுகளோடு மட்டும்.
    பரிசோதனை 4:
    ஐம்புலன் அற்றவனாக இன்னும் "நான்" இருக்கிறேன். ஆனால் என் ஐந்து தூரிகைகளால் வரையப்பட்ட பிரபஞ்சம் என்ற ஓவியத்தின் அழகிற்குள் மயங்கிக் கிடக்கும் வேடிக்கை மனிதனாய் அன்று.
    இத்தனை பரிசோதனைக்குப் பின்பும், மனநிறைவில்லை. கேள்விகள் நச்சரித்துக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்கமுடியும். பல கேள்விகள். ஏன் இந்த பேரண்டம் இருந்தது? ஏன் இதை இல்லாமல் செய்ய வேண்டும்? ஏன் நான்? ஏன் பிறப்பு? ஏன் வாழ்க்கை? ஏன் இறப்பு? என்று நீண்டு கொண்டே வந்த பட்டியல் ஒரு கேள்வியோடு முற்றுப் பெற்றது. "ஏன்" ஏன்?
    ஏன் என்று நான் காரணங்களைத் தேடுவது ஏன்? என் ஆறாவது அறிவுதான் அதன் காரணம். இப்போது அதையும் நீக்க நான் முற்படுகிறேன். நீக்கினேன். கடைசிப் பரிசோதனையும் முற்றுப் பெற்றது-
    ஆறாவது அறிவை பயன்படுத்திதான் நான் இந்தக் கற்பனைப் பரிசோதனையை மேற்கொள்கிறேன். அதனால்தான், கடைசி நிலையை என்னால் முழுமையாக உணரமுடியவில்லை. ஆனால் இதுதான் அது ... "புத்தர், மாவீரர், இயேசு, நம் மண்ணில் சித்தர்கள் என அனைவரும் சொன்ன "அது" இதுதான். இதை நோக்கிதான் மனிதனின் பயணம் தொடங்க வேண்டும். இதுதான்....
    யாரோ என் தோளைப் பிடித்து ஆட்டியதால் ஒரு பள்ளத்திற்குள் விழுந்துவிட்ட நினைப்பு. கண்விழித்துப் பார்த்தபோது கட்டிலின் ஓரத்தில் அம்மா அமர்ந்திருக்கிறாள். மல்லாக்கில் படுத்திருந்த என் நெஞ்சில் கவிழ்த்தப்பட்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்த அம்மா முன் பக்கத்தைப் பார்க்கிறாள்.
    "ஏண்டா... இதுல இருந்துதான் இன்னக்கி கேள்வி கேக்கப் போறாங்களா... பாடுபட்டு இரத்தஞ் சொட்டிச் சம்பாதிச்சு உன்னப் படிக்க வக்கிறோம்... சும்மால்ல.... நீ... பெயிலாப்போயி... அரியர் வக்கிறப்ப எங்க மனசு எவ்வளவு கஷ்டப்படுது" அம்மாவின் குரல், "மனவலியை" தழுதழுத்தது வெளிக் காட்டியது. நான் எழுந்து அமர்கிறேன் படுக்கையில்.
    "நானும் ரெண்டு நாளாப் பாக்குறேன்... இதே புத்தகத்தத்தான் படிச்சிக்கிட்டிருக்க. இன்னக்கி மதியம் பரிச்சைய வைச்சுக்கிட்டு. இந்தத்தடவயாவது அந்தப் பேப்பர எழுதி முடிப்பேன்னு நெனச்சேன்"
    அம்மா அழுதே விட்டாள்.
    " அம்மா.... சரி..... படிக்கிறேன்... அழுகாத... ஈஸிதான்... ஏற்கனவே படிச்சுட்டேன்... சரி... இப்ப என்ன... இந்தாப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்."
    எழுந்து செல்கிறேன் என் அலமாரியை நோக்கி. பாடப்புத்தகங்கள், கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியின் நடு அரையில் தியானத்தின் முறைகள் பற்றிய அந்தப் புத்தகத்தை வைக்க மனம் ஒப்பவில்லை. காலியாக இருந்த மேல் அறையில் அதை வைத்து, அழகு பார்த்துவிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் அம்மா இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
    1. சிறுகதைகள்


      நிலவின் ஒளி

      சண்முகனின் முகத்திற்கு நேரே வந்து விழுந்தது நிலவின் ஒளி. அழகாய், நின்று நிதானித்து சிரிக்கும் வெள்ளை தேவதையாய் தெரிந்தது நிலவு அவனுக்கு. நிலவுக்கு மேலே உள்ள மேகக் கூட்டங்கள் தலையில் விறகுக் கட்டுகள் சுமந்து செல்லும் லட்சுமியை நினைவுபடுத்தின. வழக்கம் போலவே நிலவுக்கும் அவளுக்குமான ஒப்பிடுதலை ஆரம்பித்தான். பலத்த காற்றின் காரணமாக வீட்டு மேற்கூரையின் துளை பெரிதானதில் இப்போது நிலவு முழுவதுமாய் தெரிந்தது. அந்த நிலவின் கிரணத்தை கண்களில் வாங்கிக் கொண்டே மெல்லமாய் உறங்கிப்போனான்.
      "சண்முகா, சண்முகா" எந்திரிடா! குவாரிக்கு போகணுமில்ல. நேரமாச்சு எந்திரி! அம்மாவின் குரல் கேட்டு விறைத்தன காது மடல்கள். இன்று கொண்டு வரும் கூலியில்தான் அம்மாவை வைத்தியரிடம் கூட்டிப் போகணும் என்ற நினைப்புடனே காலைக் கடன்களை முடித்துவிட்டு குவாரிக்கு கிளம்பினான்.
      வழியெங்கும் லட்சுமியின் நினைவுகள். இன்றும் அவள் விறகொடிக்க வருவாளா? நான் கல்லுடைக்கும் குவாரிக்கு அருகிலேயே அவள் விறகொடிக்கும் கருவேலங்காடு. நான் உடைக்கும் கற்களின் சப்தத்திலும் அவள் தூக்கிச் செல்லும் விறகின் அசைவிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பரிமாறப்பட்டது எங்கள் காதல். கற்களின் சப்தமே தேசிய கீதமாகவும் விறகின் அசைவே ஏகாந்த நடனமாகவும் மாற்றம் செய்யப்பட்டது எங்கள் காதல் சாம்ராஜ்யத்தில்.
      "அன்று கொடுத்த நாற்பது ரூபாய் கூலியுடன் அம்மாவை அழைத்துக் கொண்டு வைத்தியரிடம் சென்றேன். "எப்பா சண்முகா! ஒங்கம்மாவுக்கு வந்திருக்கிறது ராச நோய்". பொத்துனாப்ல வச்சிருந்து வைத்தியம் பார்க்கணும்." குளிர் காத்து அண்டப்படாது" என்று சொல்லியனுப்பினார் வைத்தியர். இருந்த பணமும் வைத்தியருக்கு போய்விட, வைத்தியச் செலவுக்கு இனி என்ன செய்ய? தலைக்குமேல் ஆகாயம் சுழல்வது போலிருந்தது.
      வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றான். அம்மாவின் தம்பியும் அவர் மகளும் வந்திருந்தனர். அம்மாவின் வைத்தியச் செலவை அவர் ஏற்பதாகச் சொன்னார். வீட்டு மேற்கூரையும் அடைப்பதாக உடன்பாடாயிற்று, நான் அவர் வீட்டு மாப்பிள்ளையாக உடன் பட்டால் மட்டுமே!
      மறுநாள் குளிர்காற்று நுழையாமலிருக்க புதிதாய் வேயப்பட்டது மேற்கூரை. கூரையினுள் நுழைந்த நிலவின் ஒளி என்னுள் நுழைந்த லட்சுமியின் நினைவுகள் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கப்பட்டது.
      இனி குவாரியில் அமைதியாய் அழுது கொண்டிருக்கும் காதலுக்கு சாட்சியாய் நான் உடைத்தெறிந்த கற்கள். வழக்கம்போலவே விவரம் புரியாமல் உலாவரும் லட்சுமியின் விறகுக் கட்டுகள் சுமந்து நடைபோடும் பாதங்கள்!

        சிறுகதைகள்


        கடைசி மனுசன்

        சீமான் முதலாளி வீட்டு வேலைக்காரன் வந்து சொன்னதும், தலையில் இரும்புத்தடி விழுந்தது மாதிரி இருந்தது, அம்மாசிக்கிழவனுக்கு.
        விஷயத்தைத் தெரிந்ததுமே விழுந்தடித்து ஓடக் கூடியவன் தான்; ஆனால் முடியவில்லை.
        வாழ்க்கையில் முக்காலேயே மும்மாகாணிக் காலத்தை ஓட்டி விட்ட அந்தப் பழுத்த பழத்துக்கு இப்போ மேலுக்கு நல்ல சுகமில்லை. முகம் சுரைக்குடுக்கை மாதிரி வீங்கியிருக்கிறது. உடம்பிலுள்ள தோல் எல்லாம் காய்ந்த வாழை மட்டையாகத் தொங்குகின்றன. மார்பு எலும்புகள் கூடுபாய்ந்து மூங்கில் கூடை மாதிரி வரிவரியாகத் தெரிகின்றன. அடிவயிறு முட்டிக் கலயம் போல உருண்டு மினுமினுப்பாயிருக்கிறது.
        அன்னம், தண்ணி, ஆகாரம் என்று உள்ளேயிறக்கிப் பத்து நாட்களுக்கு மேலாச்சு.
        வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள பிரத்தியேகமாக யாரும் கிடையாது. அவன் தனிக் கட்டையாகி ரொம்பக் காலமாச்சு. பக்கத்துக் குடிசைகளிலிருக்கும் அண்ணன் மக்கள், தம்பி மக்கள் தான் தற்போது அவனைக் கவனித்துக் கொள்கிறார்கள்.
        முன்பு அவன் கெதியும் மதியுமாய் இருந்தபோது, ஊருக்குள்ளே போய் முதலாளிமார்கள் வீடுகளில் ஏதாவது அத்தம் தொத்தம், எடுபிடி வேலைகள் செய்து கஞ்சி வாங்கி வந்து குடிப்பான். இப்போ அதிகமாக அந்தப் பக்கம் நடமாட்டமில்லாததால் சீமான் முதலாளி வீட்டு நிலவரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது. ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கிற அந்தக் குடியிருப்புக்கு மெனக்கிட்டு யார் வந்து சொல்லப் போகிறார்கள்?
        சீமான் முதலாளி செத்துப் போனாராம்! அம்மாசிக்கிழவனின் ஆட்கள் உடனடியாக அங்கு போய் நிற்கணுமாம்! - பழைய கிராம முன்சீப் ஐயா தாக்கல் சொல்லிவிட்டிருக்கிறார். பெரிய வீட்டுத் துட்டி. எள் மூட்டை வந்ததும் எண்ணெய் டின்களாகப் போய் நிற்க முடியவில்லையே என்று கிழவனுக்கு ஒரே மன உளைச்சல், விசாரம்.
        காலை நேரம், பொழுது கிளம்பி மேலே ஒரு பாகம் உயரம் வந்திருக்கும்.
        சரி. கிழவனால்தான் போக முடியவில்லை. மற்றவர்களையாவது அவன் உடனே அங்கு அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் சாமிமார்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும். பொம்பளைகள் ஊர், ஊருக்குத் துட்டி சொல்லிப் போகணும்; ஆம்பிளைகள் கொட்டடிக்கணும்; தேர்க் கட்டக் கம்பு வெட்டி வரணும்; சுடுகாட்டுக்குப் பெரிய பெரிய மரக்கட்டைகளைக் கொண்டு சேர்க்கணும். மூடை, மூடையாக எருவும், தென்னங் கூந்தலங்களும் வேறு போய்ச் சேர வேண்டியதிருந்தன. இது போக அல்லறை சில்லறை வேலைகளும் அவர்களுக்காகவே இருக்கும். ராத்திரி சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிப்பது ஒரு முக்கியமான சோலி.
        அம்மாசிக் கிழவனின் அண்ணன் மகன் சடையனோடு சேர்ந்து அந்த ஆறு வீட்டு ஆணும், பொண்ணும் ராத்திரி செங்கல்லோடு வேலைக்குப் போய்விட்டு அப்போதுதான் அங்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் போய் நின்ற அம்மாசி, விஷயத்தைச் சொல்லி அப்படியே துட்டி வீட்டுக்கு ஓடும்படி விரட்டினான். அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் சங்கடம்தான். ராத்திரிப் பூராவும் தூங்காமல் வேலை செய்த அசதி. இருந்தாலும் பெரிய ஆள் சொல்வதை அவர்களால் தட்ட முடியவில்லை.
        அடுத்த கொஞ்ச நேரத்தில், ஆம்பிளைகள் அவரவர்கள் வைத்திருக்கும் கொட்டுகள் சகிதமாக வந்து விட்டார்கள். மூணு பெரிய கொட்டு, ஒரு பம்பைக் கொட்டு, ஒரு கிடுகட்டி, ஒரு ஜதை சிங்கி. பொம்பளைகள் அள்ளி முடிந்த கொண்டைகளோடு புறப்படலானார்கள். எப்போதும் அம்மாசிக் கிழவன் தான் சூழல் வாசிப்பது. அவன் தான் நடக்கக் கூட ஜீவனில்லாமல் கிடக்கிறானே! வெறும் கொட்டுகள் மட்டுமே போயின.
        துட்டி வீட்டுக்கு முன்னால் ஊரே திரண்டு கிடந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலுமாக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சீமான் முதலாளியின் மக்கள் மார்கள், வீட்டுக்கு முன்னாலுள்ள பெரிய ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து வந்தவர்களுக்குத் துட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
        பந்தல் போடும் வேலைகள் முடிந்திருந்தன.
        கொட்டுக்காரன் - சடையனின் கூட்டம், துட்டி வீட்டுக்கு முன்னால் போய்ப் பவ்யமாக நின்று அங்கிருந்த எல்லாரையும் பார்த்து கும்பிட்டுக் கொண்டார்கள்.
        சாவு ஓலைகள் தயாராக எழுதப் பட்டிருந்தன. பழைய கிராம முன்சீப் ஐயா, அவற்றைச் சடையன் ஏந்தி நின்ற துண்டில் எட்டயிருந்து போட்டு, "இன்னின்ன ஊர்க்கெல்லாம் போகணும்டா" என்றார். சடையன் அதைப் பொம்பளைகள் கையில் கொடுத்து, "இன்னின்னார் இன்னின்ன திசைக்குப் போங்க" என்றான்.
        கொஞ் நேரம் யாரும் எதுவும் பேசவில்லை... பொம்பளைகள் சற்று தயங்கியபடி நின்றார்கள். அதைப் புரிந்து கொண்ட சடையன், கி.மு.ஐயாவிடம், " இந்தப் பொம்பளைகளுக்குப் பஸ் சார்ஜ்க்கும், ஒரு நேரம் பசியாறுகிறதுக்கும் ஏதாவது குடுத்து அனுப்புங்க சாமி" என்றான்.
        "என்னடா சடையா? இது புதுசா இருக்கு? என்னைக்கு மில்லாத வழக்கமா?" - ஊர் மணியக்காரர் கேட்டார்.
        "அதெல்லாம் இங்கு ஒன்னும் நடக்காது; நீங்க ஆக வேண்டிய காரியத்தப் பாருங்க!" என்றார், அதே கி.மு.ஐயா.
        சிறிது நேரம் வளர்த்த நாய் முகத்தைப் பார்த்தது போல துட்டி வீட்டுக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பொம்பளைகள் போகலானார்கள்.
        சடையனோடு சேர்ந்த கொட்டுக்காரர்கள், ஒரே கலரில் அமைந்த உடைகளை எடுத்து மாட்டினார்கள். காலில் சதங்கையைக் கட்டிக் கொண்டார்கள். கொட்டுக்களை எடுத்து இடுப்பில் வரிந்து கொண்டார்கள். கொட்டைத் தொட்டு கும்பிட்டு விட்டுச் "சட், சட்" என்று தட்டிச் சுதி பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில், "கும்...கும்...கும்...கும்..." என்று வழக்கமாக அடிக்கும் அடியில் ஆரம்பித்துக் போகப் போக அடியை மாற்றிச் சாவு வீட்டிற்கே உரிய வர்ணத்தில், "சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங். "சட்..சட்... சும்பளங்குச் சும்பளங்குச் சும்பளங்..." என்று முழங்கினார்கள். கூட்டம் அவர்கள் அடிக்கும் அடியைப் பார்த்தும், அவர்கள் போடும் ஆட்டத்தைப் பார்த்தும் ரசித்துக் கொண்டிருந்தது.
        சீமான் முதலாளியின் மூத்த மகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சல்லிச் செல்லையா, திடீரென்று அந்தப் பெரிய திண்ணை யிலிருந்து குதித்து வந்து, கொட்டுக் காரர்களுக்கு அருகில் போய் நின்று, இடது கையை மேலே தூக்கிப் பிடித்து, "நிறுத்துங்கடா கொட்ட!" என்றார்.
        மறுநிமிசம் கொட்டுச் சத்தம் நின்றது.
        "என்னடா! சூழல் இல்லாமக் கொட்டடிச்சு ஒப்பேத்திட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கீளா? எங்கடா அந்த வாசிப்புக்காரன் அம்மாசிக் கிழவன்?" என்று பேயாக இரைந்தார், அந்த இடமே அதிரும்படியாக.
        "பெரிசுக்கு ஒடம்புக்குச் சொகமில்ல மொதலாளி" சடையன் சொன்னான்.
        "அவனுக்கு என்ன பேதியா எடுத்துருக்கு?"
        "சாப்பாடு, தண்ணி செல்லாமக் கெடக்காரு மொதலாளி"
        "என்னடா! இதுக்கு முன்னால என்னயச் சாமி, சாமியின்னு சொல்லுவ! இப்போ என்னல புதுசா மொதலாளிப் பட்டம் குடுக்கிற!... அஞ்சு ஏர்க்காட்டையும் அழிச்சுக் குடிச்சுட்டு, இப்ப, கையகல நெலமில்லாம இருக்கிற என்னய நக்கலா பண்ற? செருப்புப் பிஞ்சு போகும்!" என்று ஆவேசமாக எச்சரித்தார் அவர்.
        "அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சாமி"
        "கெழவன் என்ன சாகவா கெடக்கிறான்? அவனால முடியலையின்னா ஒங்கள்ல ஒருவன் எடுத்துக் குழல் ஊத வேண்டியதுதானடா!" கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.
        "அதுக்குக் கொஞ்சமாவது ராகம் தெரியணுமே சாமி!... மேல் உதடு இல்லாதவன் சீங்குழல் வாசிச்ச மாதிரி இருக்கும்"
        "வேற ஊருலயிருந்து ஒருவன கூட்டிக்கிட்டு வர வேண்டியது தானடா!" - இது இன்னொருவர்.
        "அவங்க, முன்னூறு, நானூறுன்னு சம்பளம் கேக்குறாங்களே!"
        "குடுத்துக் கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே?... குழல் இல்லாத கொட்டு, தலையில்லாத முண்டம் மாதிரியில்ல இருக்கு? சோறு போட்டா வெஞ்சனத்தோட போடணும்" கீழவீட்டுப் பண்ணை சொன்னார்.
        "துட்டி வீட்டுச்சாமிமார்க செலவ ஏத்துக்கிட்டாகன்னா, அஞ்சு நொடியில ஆளக்கொண்டுக்கிட்டு வந்துருவேன்"
        "நாங்க ஏண்டா அத ஏத்துக்கிறணும்? அது ஒங்களப் பொறுத்த விசயம் தானே?" சீமான் முதலாளியின் ரெண்டாவது மகன் கேட்டான்.
        "சாமி, நாங்க அன்றாடம் கூலி வேலைக்குப் போய்த்தான் கஞ்சி குடிக்கிறோம். இந்த நிலையில் முன்னூறு, நானூறுக்கு எங்க போவோம்?"
        "இப்டியே விட்டா கொட்டிக்கிறதுக்கும் கூலி கேப்பாங்க போலிருக்க" கி.மு.வின் மூணாவது மகன் அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான்.
        "டேய், ஊருக்குத் தொண்டூழியம் செய்யறதுக்குத் தானடா அந்தக் காலத்துல ஒங்களுக்கு மானியக்காடுக விட்டிருக்காக!" என்றார் பழைய கிராம முன்சீப் ஐயா.
        "ஒங்களுக்குத் தெரியாத விசயமில்ல சாமி. அது மூணு தலைமுறைக்கு முன்னாலயே எங்கள விட்டுப் போயிருச்சே!"
        "என்னல நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; பேச்சுக்குப் பேச்சுப் பேசி அடைச்சுக்கிட்டேயிருக்க!" - கோபாவேசத்தில் வந்த சல்லிச் செல்லையா, சடையனின் கன்னத்தில் ஒரு போடு போட்டார், காதோடு சேர்த்து.
        "என்ன சாமி, அண்ணனப் போட்டு இப்டி அடிக்கிறியே?" கிடுகட்டிக்காரன் கேட்டான்.
        "நீ ஞாயம் கேக்குறயாடா, சிரிக்கிபுள்ள!" - அவனுக்கும் ஒரு பூசை விழுந்தது. ரெண்டு பேரும் கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டு அங்கேயே நின்றார்கள்.
        "சரி, அது போகட்டும். அம்மாசிக் கிழவன் இன்னைக்கு வரல. வழக்கமாக அவன்தான் பிரேதங்கள் சுட்டுச் சாம்பலாக்கிக் குடுப்பான். இன்னைக்கு அவன் வேலய யார் பார்க்கப் போறா? அந்தச் சோலி ஒங்களுக்குத் தெரியுமா?" கி.மு. ஐயாதான் இதையும் கேட்டார்.
        "என்னமோ தெரிஞ்ச மட்டும் பாக்குறோம்... ஒங்க திருப்திக்கு வேணும்ன்னா நீங்களும் கூட மாடாயிருந்து கோளாறு சொல்லுங்க" என்றான் சடையன்.
        "என்னடா சொன்ன? அந்த ஈனத் தொழில நாங்களும் சேந்து செய்யணுங்கிறயாடா! நீங்க எதுக்குடா இருக்கியே!" சொல்லிக் கொண்டே வந்த ஒரு மீசைக்காரர், வந்த வெறியில் சடையனைக் கொட்டோடு சேர்த்துக் கீழே தள்ளி, "நளுக்கு, நளுக்" கென்று நாலு மிதித்தார்.
        "சிரிக்கி புள்ளயக் கொல்லாம விடக்கூடாது" - சல்லிச் செல்லையாவுக்கு வந்த கோபம் இன்ன மட்டுமென்றில்லை. இடையில் நின்ற ஒருவர் அவரைத் தடுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.
        "என்ன சாமிமார்களா? இந்த ஏழக்குடிகள இந்தப் பாடுபடுத்துறீயே" - கேட்ட சிங்கிக்காரனுக்கு விழுந்த பூசையும் காணும்.
        கீழே விழுந்து கிடந்த சடையன், மெதுவாக எழுந்து, இடுப்பைப் பிடித்துக் கொண்டே மற்றவர்களைப் பார்த்து, "வாங்கடா, போகலாம்" என்றான்.
        காலில் கட்டிய சதங்கைகளை அவிழ்த்துக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாருமாக வீட்டைப் பார்த்து நடக்கலானார்கள்.
        துட்டி வீட்டில் அவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் எத்தனையோ இருந்தன.
        "எங்கடா போறியே?" சல்லிச் செல்லையா கேட்டார்.
        அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தார்கள்.
        "ஒங்களையெல்லாம் வீட்டோட வச்சுக் கொளுத்தணும்டா!... போங்க! முக்குரோடு சிங்கம் மச்சான் கடைக்குப் போயிட்டு நேரே அங்கவாறேன்" என்றாரவர்.
        வீட்டுக்குப் போன அவர்கள், அம்மாசிக் கிழவனுக்கு முன்னால் போய் நின்றார்கள்.
        அவன் திடுக்கிட்டுப் போனான்.
        கடையன் துட்டி வீட்டில் நடந்ததையெல்லாம் சொன்னான்.
        கிழவனுக்கு இவர்கள் மேல்தான் கோபம்.
        "என்னடா வேல பண்ணிட்டு வந்திருக்கியே! சாமிமார்கள எதிர்த்துப் பேசலாமா? அவுக அடிக்க, அடிக்க நாம கையேந்துகிறவங்கதான்... முட்டாத்தனமா நடந்திருக்கேளேடா." பேசுவதற்கு ஜீவன் இல்லாவிட்டாலும் ஒரு வெறியில் ஓங்கிச் சத்தம் போட்டான் கிழவன்.
        கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்த சடையன், அப்புறம் கேட்டான்; " இப்போ நாங்க என்ன செய்யணும் சின்னையா?"
        "எல்லோரும் அங்க போகணும்; நாம செய்யக் கூடிய சாவுச் சடங்குள எல்லாம சாமிமார்க மனங்குளிரச் செய்யணும்"
        சடையனோடு சேர்ந்து அங்கு நின்ற எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
        திடீரென்று கிழவனுக்கு எங்கிருந்துதான் அந்தத் தெம்பு வந்ததோ, "விருட்"டென்று வீட்டுக்குள் போய் ஒரு போணி தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு அவன் ஊதுகின்ற குழலோடு வெளியே வந்தான்.
        அப்போது சடையன் கிழவனைப் பார்த்து சொன்னான்: "சின்னையா, இது ஒங்க காலத்தோடு சரி.. நாங்க இந்த ஊர்ல இருந்தாலும் சரி; அடியோடு போக்கழிஞ்சு போனாலும் சரி..."
        ".................."
        அந்த ஆறு வீட்டுக்காரன்களின் குழந்தை குட்டிகள் எல்லாம், வெள்ளங்காட்டி (காலை)க் கஞ்சி கூடக் குடிக்காமல் பரட்டைத் தலையோடு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தன.
        நாலா ஊர் ஜனங்களும் வந்து, செய்ய வேண்டிய சாஸ்திரங்கள் யாவும் செய்து முடித்தபின், கொட்டு முழக்கோடும், குழல் சத்தத்தோடும் சீமான் முதலாளி தேர் ஏறிப் போக, ராத்திரி ஊர் ஒடுங்கும் நேரத்திற்கு மேலாகிவிட்டது.
        இனி, சுடுகாட்டில் வைத்து நடத்தக் கூடிய காரியங்கள் மட்டுமே பாக்கி.
        - முதலாளியைக் கொண்டு கட்டையில் வைத்தார்கள்.
        மக்க(ள்)மார்கள் மொட்டையடித்துக் கொண்டார்கள். வாய்க்கரிசி போடப்பட்டன.
        பிரேதத்தின் மேல் எருவையும், தென்னங்கூந்தல்களையும் அழகாக அடுக்கினான் அம்மாசிக் கிழவன்.
        மூத்தமகன் கொள்ளி வைத்து முடித்ததும், கூட்டம் கலையலாயிற்று. அடுத்து நடக்க இருப்பது அம்மாசிக்கிழவன் வேலைதான்.
        யாரையுமே உதவிக்கு அங்கு நிற்கும்படி கிழவன் கேட்டுக் கொள்ளவில்லை, வழக்கம் போல.
        காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த சடையன், சின்னையாவுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு, ஊருக்குத் தெற்கே வெகுதூரத்திலிருக்கும் மயானத்திற்குப் போனான்.
        சுடலையில் சீமான் முதலாளி "தகதக" வென்று எரிந்து கொண்டிருந்தார்.
        அம்மாசிக் கிழவனைக் காணவில்லை.
        சுற்றும் முற்றும் பார்த்தான் சடையன், பரபரப்புடன்.
        ... முதலாளியின் கால்மாட்டிற்கு நாலுபாகம் வடக்கே தள்ளி ஒரு பள்ளத்தில் கிழவன் விழுந்து கிடப்பது, அந்தச் சுடலை வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.
          1. சிறுகதைகள்


            இதயத்தை சுட்டது

            அதிகாலை ஐந்து மணியிருக்கும். இராமாயி தன்னோட புருஷன் வேலனைத்தட்டி எழுப்பினாள். " ஏய்... ஏய்... எந்திரியா... இன்னும் தூங்கிட்டிருக்கிற. சட்டுபுட்டுன்னு எந்திரிச்சோம், காலவாசப் பக்கம் போயி, மண்ண கொலச்சுப் போட்டோமுன்னு இல்லாம... எந்திரியா" வேலன் முந்திய நாள் செஞ்ச வேலையினால உடம்பு கலச்சுப் போயிருந்தான். அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவன், இராமாயி போட்ட சத்தத்துல உடலை முறுக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான். பக்கத்துல உள்ள கொடத்துல தண்ணிய அள்ளி மூஞ்சியக் கழுவிக்கொண்டான். மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு காலவாசலுக்குப் புறப்பட்டான்.
            வேலன் மாங்கு மாங்குனு மண்ணை வெட்டி போட்டான். காலையில லேசாக குளிர் இருந்தாலும், அவனோட உடல் பூராவும் வியர்த்திருந்தது. அன்றைக்கு எவ்வளவு செங்கல் அறுக்க முடியுமோ அந்த அளவுக்கு மண்ணை வெட்டி, தண்ணி ஊற்றி கொலச்சுப் போட்டான். கிழக்கே சூரியன் உதித்துக் கொண்டிருந்தான். ஆனால் வேலவனுடைய வாழ்வில் புதிய உதயமே இல்லாததால், தினந்தோறும் உதிக்கும் சூரியன் அவனுக்கு எந்த அர்த்தத்தையும் தரவில்லை.
            இராமாயி வேகவேகமாய் சமயல் வேலையை முடித்துக்கொண்டிருந்தாள். அம்மியில் தொட்டுக் கொள்வதற்கு தொவயல் அரைத்துக் கொண்டே "டேய்... டேய்... முத்து சீக்கிரம் கிளம்பு. பள்ளிக்கூடம் போக நேரமாச்சுள்ள" அக்கறையோடு தன்னுடைய ஒரே மகனைக் கூப்பிட்டாள். முத்துவுக்கு படிப்பில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. இந்த வருடம் ஏழாம் வகுப்பு முடித்து எட்டாவதுக்குச் செல்கிறான். "அம்மா ஸ்கூல் தொடங்கி இரண்டு வாரம் ஆவுது. இன்னும் யூனிபார்ம், புஸ்தகமெல்லாம் வாங்கல... அப்பாக்கிட்ட சொல்லுமா" முத்து நச்சரித்தான். " சரி... சரி... இப்போ நீ பள்ளிக்கூடத்துக்கு போ, நான் கொப்பன்கிட்ட சொல்லி வழக்கம்போல் காலவாசல் முதலாளி கிட்ட கொஞ்சம் கடன் கேட்கச் சொல்றேன்" இராமாயி அவனை அனுப்பிவிட்டு, புருசனுக்கு கஞ்சி எடுத்துகிட்டு காலவாசலுக்கு புறப்பட்டாள்.
            மண்ணை கொலச்சுப் போட்டவுடன், வேலன் செங்கல் அறுக்க வேண்டிய இடத்தை சுத்தம் செய்தான். ஓர் இடத்துல கொலச்சுப் போட்டுக்கிடக்கிற மண்ணை, செங்கல் அறுக்கத் தோதுவா பக்கத்துல அள்ளிப்போட்டான். கட்டையை எடுத்து இரண்டு செங்கலா, வரிசையா அறுக்க ஆரம்பித்தான். ஒரு நாளைக்கு ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு செங்கல்தான் இரண்டு பேரும் சேர்ந்து அறுக்க முடியும். ஆயிரம் செங்கலுக்கு நூறு ரூபா கூலி.
            இராமாயி கஞ்சியைக் கொண்டுவந்து இறக்கி வைத்தாள். சூரியன் உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தான். " இந்தாய்யா... வந்து கஞ்சியக் குடிச்சிட்டுப் போயி வேலையைச் செய் " அவள் அக்கறையோடு புருசனைக் கூப்பிட்டாள். " கொஞ்சம் பொறுடி இன்னும் இரண்டு வரிசைக்கல் அறுத்துட்டு கஞ்சிக் குடிக்கிறேன் ", குனிந்துகொண்டே பேசினான்.
            இராமாயி, உடனே கஞ்சியை காக்கா வந்து கொத்தாம நல்லா மூடிவச்சுட்டு புருசனுக்கு இணையா அவளும் மண்ணை அள்ளி செங்கல் அறுக்க ஆரம்பித்தாள். இரண்டு வரிசை வேகவேகமாக கல்லு அறுத்த பிறகு". சரி வாடி, கஞ்சியக் குடிச்சிட்டு வரலாம்." வேலன் கூப்பிட்டான். கையை நல்லா கழுவிட்டு இரண்டுபேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
            "வெயிலு ஏறிக்கிட்டிருக்கு வா... வா... கல்ல அறுத்துப் போட்டுட்டு அப்புறம் சாவகாசமா உட்காரலாம்" என்றவாறே வேகமாகச் சாப்பிட்டு வேலன் கையைக் கழுவினான். மீண்டும் இருவரும் வேலை செய்ய ஆரம்பித்தனர். கடும் வெயில் அவர்களை வாட்டியது. வேலனின் உடம்பை வியர்வைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
            "ஏய்யா", "நம்ம முத்து புதுசா எட்டாவதுக்குப் போயி இரண்டு வாரம் ஆவுது. ஒரு புதுச்சட்டை வாங்கல... புஸ்தகம் வாங்கல...". புலம்பினாள். இராமாயி "ம்... புரியுது... புரியுது, இன்னைக்கு சாயந்தரம் முதலாளியப் பார்த்து ஐநூறு ரூபாய் கடன் கேட்கிறேன்" என்றான் வேலன். கொலச்சிப் போட்ட மண்ணையெல்லாம் செங்கல்லா அறுத்துப்போட மணி ஒன்னாகிவிட்டது, சரியா ஆயிரத்து ஐநூறு கல்லு அறுத்து முடித்தனர். கைகால் முகம் கழுவிக்கொண்டு புளியமரத்தடிக்கு வந்தனர். " பசிக்குதடி... சீக்கிரம் கஞ்சியிருந்தா ஊத்து " வேலன் பசியோடு பேசினான். இருவரும் அமர்ந்து கஞ்சி குடித்தார்கள்.
            புளியமரத்தடி நிழல் ரொம்ப அருமையாக இருந்தது. வேலை செய்து களைப்பில், அங்கேயே அசந்து தூங்கினர். வெயில் மூஞ்சியில் அடித்தவுடன் கண்விழித்துக் கொண்ட இராமாயி, "இந்தாய்யா பொழுது சாயப்போவுது எந்திரிய்யா... வேலனைத் தட்டி எழுப்பினாள்.
            அவசராமாக எழுந்து கண்ணைத் துடைத்தான். "சரி நான் முதலாளிகிட்ட போயி கடன் கேட்டுட்டு வாறேன், நீ போயி குடிசையில கஞ்சியக் காச்சு" சொல்லிக் கொண்டே அவன் நடக்க ஆரம்பித்தான்.
            "வாடா... வேலா என்னா விசயம்? இன்னைக்கு கல்லு அறுத்தாச்சா"? முதலாளி வேலனை விசாரித்தார். முதலாளியைப் பார்த்தவுடன் துண்டை எடுத்து கையில் போட்ட வேலன், "ஆமாயா காலவாசலேர்ந்துதான் வர்றேன்", பணிவுடன் பேசினான்.
            "ஐயா என்னுடைய பையனுக்கு புஸ்தகம், சட்டை துணிமணியெல்லாம் வாங்குறதுக்கு ஐநூறு ரூபா பணம் வேணும். "... வேலன் தயவுடன் கேட்டான். பணம் என்றவுடன் தன்னுடைய தொனியை மாற்றிக் கொண்ட முதலாளி, " இந்தா பாரு ஏற்கனவே நீ கட்ட வேண்டிய நாலாயிரத்துக்கு வட்டி ஏறிக்கிட்டே போவுது. அதவேற கட்டி முடிக்கல. அதுக்கு முன்னால இன்னும் கடனா கேக்குற, போயிட்டு நாளைக்கு வா பேசிக்கலாம்" என்று எரிச்சலுடன் பேசினார். மனதில் கோபத்துடனும் தன் வாடிய முகத்தோடும் வேலன் குடிசைக்குத் திரும்பி வந்தான்.
            சாயந்திரநேரம். வெளியே லேசாக இருட்டி இருந்தது. பிள்ளைகள் குடிசை ஓரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் மெதுவாகக் குனிந்து குடிசையில் நுழைந்தான். இராமாயி சமயல் வேலையை முடித்து விட்டு சாப்பிட தயாராய் இருந்தாள். அப்பா வந்ததைப் பார்த்து முத்து ஓடிவந்தான். கைகால் முகம் கழுவிக் கொண்டு அவனும் சாப்பிடத் தயாரானான். மூவரும் சாப்பிடும்போது, "நாளைக்கு புஸ்தகமெல்லாம் வாங்கித் தருவீங்களா"? முத்து ஏக்கத்தோடு கேட்டான். "டேய், முதல்ல சாப்பிட்டுப் போயி படு. எல்லாம் பிறகு பாத்துக்கலாம், " வேலன் அதட்டினான்.
            சாப்பிட்டு முடித்தவுடன் மூவரும் பாயை விரித்துப் படுத்தனர். வழக்கத்துக்கு மாறாக, வேலன் ஒன்றும் பேசாதிருந்தான். முதலாளி சொன்ன பதில் அவனை அமைதியாக்கிவிட்டது. இராமாயி வேலனுடைய முகத்தைப் பார்த்து பணம் கிடைக்கவில்லையென்று தெரிந்துகொண்டாள். "அப்பா, நாம வருசம், முழுவதும் செங்கல் அறுக்கிறோம். எத்தனையோ பேரு செங்கல் வாங்கிட்டுப்போயி வீடு கட்றாங்க. நம்ம வீடு மட்டும் ஏம்ப்பா வெறும் மண் குடிசையா நிக்குது?"
            பதில் சொல்லத் தெரியாத வேலன், "டேய் பேசாமப் படுத்துத் தூங்குடா, பெரிய மனுசன் மாதிரி பேசுற" முத்துவை அதட்டினான். கொஞ்ச நேரம் கழித்து முத்துவும் இராமாயியும் தூங்கி விட்டனர். வேலனால், தூங்க முடியவில்லை. முத்து கேட்ட கேள்வி அவனுடைய இதயத்தைக் குத்திக் கொண்டிருந்தது.
            வேலனுக்கு அடுத்த நாள் வழக்கமான செங்கல் அறுக்கும் வேலை கிடையாது. அறுத்த செங்கலை சூளையில் வைத்து தீப்போடுகிற வேலை. செங்கலுக்கு இடையே கட்டைகளை அடுக்கி விட்டு, தீப்போட ஆரம்பித்தான். அங்கே எரிந்த நெருப்பு செங்கலை மட்டுமல்ல, வேலனுடைய இதயத்தையும் சுட்டது.

              1. சிறுகதைகள்


                மனசு

                ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே கதைதான். இந்த நேரம் என்றில்லை, இன்ன பொழுது என்றில்லை. வந்துவிடுகிறான் தினகரன். யார் வெற்றிலை - பாக்கு வைத்து அழைத்தார்கள் இவனை. ராஜூவுக்கு எரிச்சலான எரிச்சல். அவனுக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்கவில்லை. இவனை யார் வரச்சொன்னது.
                போன ஞாயிற்றுக்கிழமை. சித்திரைவெயிலுக்கு பயந்து, கதவை ஒருச்சாத்திவிட்டுப் படுத்திருந்தான் ராஜூ. வீடோ ரொம்ப சின்னது. மத்தியானம், இரண்டு, இரண்டரை மணி இருக்கும். கடுமையான வெக்கை. புழுக்கம். மேஜைக் காற்றாடியை மூன்றில் வைத்திருந்தான். அப்படியிருந்தும் தூங்க முடியவில்லை. பக்கத்தில் அலமேலு ஒருக்களித்துப் படுத்தபடி, அதிசயமாக "குமுதம்" பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகன் ஐயப்பன்தான் வந்து சொன்னான், தினகரன் வந்திருப்பதை.
                இவர்கள் வளவில் மூன்று வீடுகள். எதிரே வடக்கு பார்த்த வீடு. தெற்கே பார்த்து இரண்டு வீடுகள். உள்ளபடியே, அது ஒரு வீடுதான். வாடகைக்காக இரண்டாக மறித்து, சுவர்வைத்துப் பிரித்திருந்தார்கள். இந்த வீடு ஒரு முடுக்கு மாதிரி. நீளமாய் இருக்கும். விசாலம் கிடையாது. முன்புறம் சின்ன தார்சா. நடுவில் சரியாக இரண்டு பேர் படுக்கிற மாதிரி பட்டாளை. பின்னால் அடுக்களை. பின்புழக்கம் உண்டு. மேல வீடுதான் உண்மையிலேயே வீடு. அதுவும் இவர்கள் புழக்கத்தில்தான் இருக்கிறது. அதாவது, இவன் மாமனார், மாமியார், மருமக்கள் - அலமேலுவின் அண்ணன் பிள்ளைகள். மூத்த தாரத்து மக்கள். பஞ்சபாண்டவர்கள் - மதினி, சகலர் எல்லோரும் இருக்கிறார்கள்.
                பெரிய வீடு அது. யாராவது வந்தால் அங்கேதான் இருக்க வைப்பது. சொந்தக்காரர்கள், ரொம்ப வேண்டியவர்களை மட்டும் தாம் இந்த வீட்டில் கூப்பிட்டுவைத்துப் பேசுவது. இருக்கச் சொல்வது. இடவசதி - இல்லை, இட நெருக்கடிதான் காரணம்.
                அந்த வீட்டுத் திண்மையில் தான் தினகரனை உட்காரச் சொல்லியிருந்தார்கள். அலமேலு போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அவள் வந்தவுடன் ராஜூ ஆத்திரமாய்க் கேட்டான். "இவனுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாதா ஒரு வீட்டுக்கு வர. பொண்டாட்டி, பிள்ளை இருக்கற மனுஷன் மாதிரியே தெரியலியே இவனப் பாத்தா. இந்த வேனா வெயில்ல ஒரு உடை உடுத்தி நடை நடந்து வந்திருக்கானே முட்டாப்..." ராஜூவுக்கு கோபம் வந்தால் கெட்ட வார்த்தைகள்தாம் வரும், தன்னியல்பையும் மீறி. "இல்ல. நாளைக்கிதான் பணம்கட்ட கடைசி நாளாம். அதச் சொல்லத்தான் வந்தாராம்" என்றவள், இவன் முகத்தைப் பார்த்துவிட்டு மேலவீட்டுக்குப் போய்ப் படுத்துக்கொண்டாள்.
                அதற்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. காலையில் பத்து மணி இருக்கும். கோடைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லையென்று, மேற்கே கொஞ்சம் தள்ளி ஊற்று இருக்கிற இடத்துக்குப் போய்க் குளித்து விட்டு வருகிறான். போக வர இரண்டு மைல் நடை. திரும்புகையில், எதிர்வெயில் வேறு. காலையிலே மனுஷன் குளிக்கிறதுக்கு இந்தப் பாடா. பசியும் எரிச்சலுமாய்த் தெரு வாசல்படி ஏறியவன் கண்ணில் முதலில் பட்டது தினகரனின் கட்டம்போட்ட சட்டைதான். பெரியவீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான். எதிரே தார்சாவில் ஸ்டீல் சேரில் உட்கார்ந்திருந்த அலமேலு இவனைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து கொண்டாள். "இட்லி எடுத்துட்டு வரட்டா" என்று கேட்டுக் கொண்டே வந்தாள். "குளிச்சிட்டு வர்றீங்களா" என்று கேட்டபடியே புறப்பட்டுப் போய் விட்டான் தினகரன்.
                துணிகைக்கூடக் காயப்போடாமல், தலைகூட சீவாமல், சாப்பிட உட்கார்ந்து விட்டான் ராஜூ. இட்லி எடுத்துவைத்துக் கொண்டிருந்த அலமேலுவிடம் கோபமாய்க் கேட்டான். "எங்கடி வந்தானாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரப்பிடாது இவனுக்கெல்லம். புறப்பட்டு வந்துர்றான் புடுங்கி மாதிரி. போவேண்டியதுதானே கொழுந்தியா வீட்டுக்கு. அடுத்த தடவ வரட்டும், கேட்டுர்றேன்."
                "ஏன் இப்டி வாயில வந்ததல்லாம் பேசுறீங்க. புது ஏ.சி.டி.ஓ. வந்திருக்காராம். "அக்கவுண்டயெல்லாம் சீக்கிரமா முடிச்சிக் கொண்டுட்டு வாங்க"ன்னு சொல்லிட்டுப் போறாரு. அவ் வீட்டுக்காரிக்குத் திரும்பவும் உடம்பு சரியில்லியாம். சொல்லிக்கிட்டிருக்கையிலியே அழுதிட்டாரு. பாவம்" என்ற அலமேலு எச்சில்தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். இவனுக்குத்தான் மனசு சமாதானமாக வில்லை.
                போன மாசம். புனித வெள்ளி. அரசு விடுமுறை. சாயங்காலம், அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, அடித்துப்போட்ட மாதிரி, தூங்கிக் கொண்டிருந்தாள் அலமேலு. வாரத்தில் ஆறுநாள் மாடு மாதிரி வேலை பார்க்கிற அசதி. அலைகிற அலைச்சல்.
                தினகரன் வந்திருப்பதை வந்து சொன்னான் - இரண்டாவது - மருமகன் - லட்சுமணன். யாராக இருந்தாலும் தூங்கும்போது எழுப்புவது எப்போதுமே இவனுக்கு சம்மதமில்லாத காரியம்.
                "அத்த தூங்குறா, நாளக்கி வந்து பாருங்க"ன்னு சொல்லு" என்று லட்சுமணனிடம் சொல்லி அனுப்பிவைத்தான் ராஜூ. ராஜூவுக்குத் தினகரனைப் போய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை. "வாங்க" என்று மரியாதைக்குக் கேட்கக்கூடத் தோன்றவில்லை. "இருங்க" என்று சொல்ல இஷ்டமில்லை. "சனியன், போய்த் தொலைந்தால் சரிதான்" என்றிருந்தான். ஆனால் தினகரன் போகவில்லை. இருந்து கொண்டிருந்தான். லட்சுமணனோடு பேசிக் கொண்டிருந்தான்.
                கால்மணி நேரம் கழிந்திருக்கும். இவன், "என்னப்பா" என்று கோபமாய்க் கேட்டான். லட்சுமணன் வந்து பைய, "அவரு இன்னும் போல. இருந்துட்டு இருக்காரு, அதான்" என்றதும், "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்த" என்று கடுப்போடு இரைந்தவனின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் அலமேலு. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். பின்வாசல் பக்கம் போய் முகம் கழுவிக்கொண்டு நிற்கிறாள். அதற்குள் அவனே திண்ணையில் வந்து நின்றான். முகம் துடைத்துக் கொண்டிருந்த அலமேலுவை ராஜூ சுட்டெரித்து விடுவது போலப் பார்க்க, அவள் இவனை பாவம் போலப் பார்த்தபடி நின்றாள். "எப்ப வந்தீங்க, எப்டி இருக்கீங்க" என்று இவனை விசாரித்த தினகரனிடம் ஒப்புக்காகப் பேசும்படியாய்த் தொலைந்தது.
                "என்ன, இந்த நேரத்துல தூங்குறீங்க" என்று அலமேலுவைக் கேட்டவன், "சின்னத்தம்பி" படத்துக்கு டிக்கெட் கிடைக்க மாட்டேங்கு"ன்னு சொன்னீங்கல்ல. தியேட்டர் பக்கம் - ஆபீஸ்லர்ந்து போயிருந்தம். நாலு டிக்கெட் கேட்டு வாங்கிட்டு வந்தேன். அதக் கொடுத்திட்டுப் போலாமேன்னுதான்" என்று பர்ஸிலிருந்து சினிமா டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தான். லட்சுமணனைக் கூப்பிட்டு "பூஸ்ட்" வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள் அலமேலு. காபி குடிக்க மாட்டானாம், மயிராண்டி.
                நாலு நாளைக்கு முன்தான் சொன்னாள் அலமேலு. அலுவலகத்தில் இவள் பொறுப்பில் - ஐயாயிரம் ரூபாய் - சார்ட்டேஜாம். எங்கேயாவது வட்டிக்கு வாங்க முடியுமா என்று அலைந்து பார்த்தாள். யார் யாரிடமெல்லாமோ கேட்டுப் பார்த்தாள். தினகரனிடமும் சொல்லியிருக்கிறாள். "சங்கிலிய வேணா தர்றேன். அடகுவச்சு எடுத்துக்குங்க" என்றானாம். மைனர் செயின். அஞ்சு பவுன். அலமேலு இவனிடமே வந்து கேட்டாள், என்ன செய்ய என்று. ராஜூ என்ன சொல்வான். "வேண்டாம், அப்டில்லாம் வாங்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டான். தனது கையாலாகத்தனம் நெருட, அன்றைக்கு ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை ராஜூவுக்கு.
                அலமேலு நல்ல பெண்தான். அவளை ஒன்றும் தப்புச் சொல்ல முடியாது. ஆனால், சில பெண்களுக்குப் பிற ஆண்களிடம் சகஜமாகப் பேசும் குணம் உண்டு. அலமேலுவிடமும் இந்த அம்சம் இருக்கிறது. அதுதான் இப்படி. இந்த வினை. இவள் வேலையும் அதற்கேற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வணிக வரி அலுவலகத்திற்குப் போக வேண்டும். எப்படித்தான் நல்லபடியாகக் கணக்கு வைத்திருந்தாலும் கண்டமேனிக்கு வரி தீட்டி விடுவார்கள். விசாரணை, அபராதம் இதெல்லாம் இல்லாமல் தப்பித்துவர வேண்டும். இதற்கெல்லாம் அங்கேயே ஒரு தெரிந்த ஆள் இருந்தால் நல்லது. அலமேலு கணக்குப் புஸ்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். தினகரன் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வான்.
                ராஜூவுக்கு நிலையான வேலையில்லை. நிலையான வேலையில்லாதவனுக்கு நிரந்தரமான வருமானம் எப்படி இருக்கும். வீட்டில் சும்மாதான் இருக்கிறான். இரண்டு பையன்கள் படிப்புச் செலவு, வீட்டு நிர்வாகம் எல்லாம் அலமேலுதான். இவள் வேலை பார்க்கப் போய்த்தான் குடும்பம் நடக்கிறது.
                உண்மையிலேயே, தினகரன் பாவம்தான். மனைவிக்குப் கர்ப்பப்பை ஆப்பரேஷன் ஆகிவிட்டது. அதுதான் இப்படி அலைகிறானோ, ஜொள்ளு கேஸீ. பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாலே போதும் என்கிற டைப்பு. சீச்சீ. இப்படியெல்லாம் தப்பாக நினைக்கக்கூடாது. அவனென்ன தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்காதவனா. பனிரண்டு வயதில் பையன் இருக்கிறான். அவனுடைய பழைய புஸ்தகங்கள்தாம் ஒவ்வொரு வருஷமும் இவன் பையனுக்கு. மெனக்கெட்டு எடுத்துக்கொண்ட வந்து கொடுத்துவிட்டுப் போவான் தினகரன். தெரிந்தவர்கள் என்று வருகிறான். இல்லையென்றால், வருவானா. ஆனாலும், ஒரு இங்கிதம் வேண்டாம். செத்த மூதி. கடன்காரன் மாதிரி வந்து விடுகிறான். புருஷன்காரன் என்ன நினைப்பான் என்று தோன்றாதா இவனுக்கு.
                இரண்டு மூன்று தடவை அலமேலுவிடம் எரிச்சல்பட்டே சொல்லிவிட்டான் ராஜூ. "இவன் இப்டி வீடு தேடி வர்றது எனக்குப் பிடிக்கல அலமேலு. இவன் ஏன் வர்றான். நீ சொல்லிரு. "என் புருஷன் ஒரு முசுடு. எதாவது சொல்லிருவாரு"ன்னு சொல்லிரு அலமேலு".
                "இதயெல்லாம் எப்படிங்க சொல்லமுடியும். அவருக்கே தெரியணும்" என்று அலமேலு சொல்வதும் சரிதான்.
                முந்தா நாள். சித்திரை விஷூ. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோமே, பிள்ளைகளோடு இவளோடு எதாவது சினிமாவுக்குப் போகலாமே என்று எல்லோருமாகப் போனார்கள். ஆறரை மணிக் காட்சி. படம் முடிந்து வெளியே வந்தார்கள். தியேட்டர் வாசலை விட்டு இறங்குகிறார்கள். கூட்டத்தை எதிர்த்து வந்து கொண்டிருக்கிறான் தினகரன். வீட்டுக்குப் போயிருந்தானாம். சொன்னார்களாம். வந்துவிட்டான். வழக்கமான நாகரிகம், மரியாதையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுவிட்டான் ராஜூ. அவனைப் பார்க்காததுபோல, விறுவிறுவென்று சரவணனையும் கோபியையும் இரண்டு கையில் பிடித்துக்கொண்டு முன்னே நடந்து போய்க்கொண்டே இருந்தான்.
                சம்பிரதாயத்திற்காக ஒரு நிமிஷம் நின்று விசாரித்துவிட்டு, வேக வேகமாக நடந்து வந்து இவனோடு சேர்ந்து கொண்ட அலமேலு கேட்டாள்; " என்னங்க, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறீங்க ".
                "என்னடி இது. தியேட்டருக்கே வந்துட்டான். பொண்டாட்டிய தேடிட்டு வர்ற மாதிரில்ல வர்றான். இவனையெல்லாம் என்னடி செய்றது" என்று வெடித்தான் ராஜூ.
                "சத்தம் போடாதீங்க. எல்லோரும் பாக்காங்க. வீட்ல வந்து பேசுங்க" என்று அமைதிப்படுத்தினாள் அவள்.
                வீட்டுக்கு வந்து சேர்ந்து, கைலியை மாற்றிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் ராஜூ. பிள்ளைகள் இரண்டு பேரும் ஒன்றும் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார்கள். அலமேலு பழையதை எடுத்து வைத்து மோர் ஊற்றிக் கொண்டிருந்தாள். சாதத்தைப் பிசைந்தபடியே ஆங்காரமாகச் சொன்னான் இவன். "ஏய், இந்த பாருடி. அவன் இன்னொரு தடவ இங்க வந்தா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவன்ட்ட சொல்லிரு. இல்ல, அசிங்கமா போயிடும்."
                "சரி, சரி. விடுங்க இழவு சனியனை. அவர்தான் மடையன்னா நாமளுமா" என்ற அலமேலு சாப்பிடாமலேயே போய்ப் படுத்துக் கொண்டாள்.
                "என்ன மனுஷங்க" என்ற நினைப்பே வேதனையாக இருந்தது. மாடக்குழியில் இருந்த "அவில்" மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அப்போது அலமேலுவின் பாவமான முகமே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே கடைசி ஞாபகமாக இருந்தது.

                    சிறுகதைகள்


                    யாதும் ஊரே...

                    அந்த இளைஞன் சங்கரனைப் பார்க்கிற போதெல்லாம் புதிராகத் தெரிந்தான் ராமசாமிக்கு. அவனது உள்மனசைக் கிளறி உண்மையை உதடுகளுக்கு வரவழைக்க வேண்டும் என வதைக்கிற சந்தேகச் சித்ரவதை. நல்ல உயரம், ஓரளவு நிறம் வளையாத பனைமரம் போல உறுதியுடன் சீரான தேகம். எந்த நேரமும் ஏதோ தேடலுடனான பார்வை. எதையோ பறிகொடுத்தவன் போல இயல்பின்றி இறுக்கமான முகம். வார்த்தை கொடுத்தாலன்றி வலிய வராது விலகியே செல்கிற சுபாவம். இது ஒரு பக்கமிருக்க, இதையெல்லாம் மிஞ்சுவது போலவும், அவனைப் பற்றிய அனுமானம் அடிவயிற்றைக் கலக்கி அஜீரணமாவது போலவும் "அந்தப் பயல் சங்கரன் எங்க ஊரு தான். பழக்கமில்ல; ஆனா நல்லாத் தெரியும். தேவையில்லாத பிரச்சினைகள்ல மூக்கை நுழைச்சு வீண் விவகாரம் பண்ணுவான். ஊர்ப்பிரச்சினை அது இதுன்னு கண்டவங்க கூட விவகாரம் பண்ற சண்டியர். எதுக்கும் அவன் மேல ஒரு கண்வையுங்க" என நேற்று சங்கரனின் சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்தில் தங்குவதற்காக வந்திருக்கிற அரசு ஊழியர் தேவதாஸ் சொல்லியிருந்த வார்த்தைகள் நெற்றியடியாய் கிறுகிறுக்கச் செய்கிறது. "அந்தப் பையன் ராத்திரி வரவும், "நீங்க இங்க தங்கினது; போதுமப்பா. இனி வேற எடம் பாரு" ன்னுச் சொல்லிற வேண்டியதுதா" என்று தீர்மானம் பண்ணியவாறு அலுவலகத்தில் அங்கிட்டும் இங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தார் அறுபது வயசு ராமசாமி. இந்தப் பொது அலுவலகத்தில் தங்கிக் கொள்வதற்காக தனது சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்திற்கு நெருக்கமான தொடர்புடைய ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த சிபாரிசுக் கடிதத்தைத் தவிர, சங்கரனுக்கும் இந்த அலுவலகத்திற்கும் வேறெந்த சம்பந்தமும் இல்லை.
                    அவன் இங்கு வந்து தங்க ஆரம்பித்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து முடித்து, ஆறு மணிக்கெல்லாம் வெளியில் கிளம்பிப் போகிற அவன், இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் திரும்ப வருகிறான். இடைப்பட்ட நேரத்தில் ஒருநாள் கூட வந்தது இல்லை. இரவு வந்ததும் படுப்பதும் இல்லை. ஏதேதோ சிந்தித்த வண்ணமிருக்கிறவன், நடுநிசிக்கு மேல் உறங்குவதுண்டு.
                    "இங்கு வந்த முதல்நாளே சென்னைக்கு வந்த நோக்கம், இங்கு பல தினங்கள் தங்கப் போவதின் அவசியம் பற்றித்துருவி விசாரிக்காமல் விட்டது தப்போ?" என்று தோன்றியது ராமசாமிக்கு. இந்த அலுவலகத்திற்கு அவன் இந்த கோலம் அப்படி. அந்தக் கணத்தில் அவனுக்கு உதவ வேண்டுமெனத்தான் தோன்றியதேயன்றி துருவி விசாரிக்க மனமில்லை.
                    அன்று - காலை ஏழரை மணி.
                    பெருத்த இரைச்சலுடன் பேய்மழை குமிறிக் கொட்டிக் கொண்டிருக்க, வேகமாய் வந்த ஆட்டோ ஒன்று அலுவலக வாசலில் நின்றது. முகமெங்கும் மழை நீர் சொட்டச் சொட்ட அந்த ஆட்டோவுக்குள்ளிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் சங்கரன் சிறிய தோள்பை ஒன்றைச் சுமந்தபடி அலுவலகத்திற்குள் வந்து நின்றான்.
                    ராமசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. "யாரப்பா நீ? என்ன விஷயம்?" எனக்கேட்டார்.
                    நெற்றியில் வழிந்தோடிய மழை நீரை ஆள் காட்டி விரலால் நீவி வழித்தபடி, " நா கூடலூருக்குப் பக்கத்திலிருந்து வாறேன். மெட்ராசுக்கு வேல விஷயமா வந்திருக்கேன். சில தினங்கள் இந்த ஆபிசுல தங்கணும்." என்றான், பின் தோள் பையைத் திறந்து பளுப்பு நிறக்கவர் ஒன்றை எடுத்தவன் "இதோ சிபாரிசுக் கடிதம்" என்றபடி அவரிடம் நீட்டினான்.
                    வானவிலை மனசில் உறுத்த, சேரிதம்பி.. ரெண்டாவது மாடியில போயித்தங்கிக்க" என்று அனுமதித்தார்.
                    சங்கரனின் மழை நீரால் கசங்கிய முகத்தில் மலர்ச்சி. பிளாட் பாரவாசிகள் பெருத்த நகரில் புகழிடம் கிடைத்தப் பூரிப்பு. மறு நொடியே மாடிப்படிகளில் தாவி ஏறியவாறு மேலே போனான். அப்புறம் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்து, உடை மாற்றி மழைத்தூறலில் நனைந்தவாறே வெளியில் போனான்.
                    "வந்ததும் வராததுமா இந்தத் தூரல்ல நனைஞ்சிட்டுப் போறளவுக்கு அப்படி அவனுக்கு என்ன தான் தலைபோற அவசரம்னு தெரியல" என்று முழித்தார் ராமசாமி.
                    நாட்டு நடப்பு அவரது உள்மனசை உலுக்குகிறது. அவனைப் பரிவுடன் தங்கிக் கொள்ள அனுமதித்தது, அவசரப் புத்தியோ?" என அங்கலாய்ப்பு, "நாட்ல எங்க பாத்தாலும் குண்டு வெடிப்புக் கதியா இருக்குது. முன்பின் தெரியாதவங்களயெல்லாம் இப்டி அனுதாபப்பட்டு தங்கிக்க அனுமதிச்சுடறோமே... ஏதாவது ஏடாகூடமாயிட்ட எனக் குழம்பிப் போயிருந்தவருக்கு, அவன் வந்த முதல் நாளே தூக்கம் துப்புரவாக இல்லை. விரித்திருந்த "பெட்ஷீட்"ட்டில் அங்கிட்டும் இங்கிட்டுமாக புரண்டு புரண்டு படுத்தார். தலைக்கு மேல் சுற்றுகிற காற்றாடியைப் போலவே, மூளைக்குள் ஆற்றாமை ராட்டினமாய் சுற்றியது. பின், "சரி... விடியட்டும் அந்தப் பையன்கிட்டத் தீரமா விசாரிச்சுடலாம்" என தனக்குள் சமாதானம் பண்ணிக் கொண்ட பிறகே உறக்கம் வந்திருந்தது.
                    மறுநாள் காலை சங்கரன் குளிப்பதற்காக சோப்பு டப்பா, டவல் சகிதமாய் கீழ்தளத்திற்கு வந்த போது, திடுமென்று விழித்துக் கொண்டபடி எழுந்து உட்கார்ந்தார். அவனைப் பற்றிய முழு விபரங்களையும் அலசிக் கேட்பதற்காக நாவில் ஆவல். கடுந்தவம் போலான விபரம் அறிவதற்கான இரவு விழிப்பினால் தூக்கக் கலக்கத்தில் இமைச் சொக்குதலையும் மீறி அகலக் கண் விரித்து அவனைப் பார்த்தார். விசாரிக்க இதயம் எத்தணிக்கிறது. ஆனால், உள்ளுக்குள் தயக்கம். சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஒருவரை விசாரிக்க, அவன் வெடித்து விட்டான். "நாந்தான் இந்த சங்க அலுவலகத்து முக்கியமான ஆளுகிட்டேயிருந்து கடிதம் வாங்கி வந்திருக்கேனே! அப்புறம் எதுக்கு, ஏதோ திருடனக் கண்டது கணக்கா இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறீங்க?" என்று.
                    ராமசாமிக்கும் கோபம் வந்துவிட்டது. "நாங் கேக்காமெ வேறெந்தப் பய கேப்பான்? இங்க நாந்தான பொறுப்பாளி?" என்று முதியவரானாலும் முறுக்கி நின்று கேட்டார்.
                    பக்கத்திலிருந்தவர்கள் சமாதானம் பண்ணிவிட்டிருந்தார்கள்.
                    - அந்தச் சம்பவம் மனசில் சலனமிட, "அந்த ஆளப் போல சங்கரணும் கோவிச்சிட்டா? தர்மசங்கிடமாயிருமே!" என்றெண்ணிப் பேசாமலிருந்து விட்டார்.
                    ஆனாலும், சங்கரன் மீதான சந்தேக மன அரிப்பு மட்டும் சன்னங்கூட மட்டுப்படாதிருந்தது. ஓயாது உள்ளுக்குள் புலுங்கினார். அவன் மீது தினமும் சந்தேக வலை பின்னியபடியே இருந்தது அவரது பார்வை. "முன்னூறு மைல்களுக்கப்பால் இந்தப் பெரிய நகரத்துல வந்து என்னத்தப் பண்ணப் போறானோ?" துவம்சம் செய்கிற புலப்படாத புதிர்க் கேள்விகள். "உள்ளூர் பயல்கள் படிச்சிட்டு ஆயிரமாயிரமா வீதியில அலையுறப்போ, எதுக்கு இப்டி இங்க வந்து அழுக்குச் சட்டை, வறண்ட தலையுமா அலையணும்? என்னதான் படிச்சவனாயிருந்தாலும் அவ்வளவு சுலபமா வேல கெடைச்சிருமா என்ன? இந்தப் பட்டிக்காட்டானுக்கு யார் வேல தருவாங்க?" புழுதியும், புகைச்சலுமாய் நெஞ்சு நிம்மதியின்றி அற்றலைந்து கொண்டிருந்தது.
                    "சங்கரன் வரவும் இனி இந்த ஆபீஸ்ல தங்க வேணாம்... வேற ஏதாவது எடம் பாத்துத் தங்கிக்கோனு தறாராச் சொல்லிறணும்" என்று மனசுக்குள் அசை போட்டபடி அவனது வருகைக்காக அவன் தங்கியிருக்கிற இரண்டாவது மாடியில் அவனை எதிர்பார்த்து, மரப்பெஞ்சில் பத்திரிகை ஒன்றைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்த ராமசாமி.
                    அந்த அலுவலகத்துக்குக் கீழ் வீதியில் திடீரென மனிதக் குரல்களின் மல்லுக்கட்டுகிற சலசலப்பு ஓசை செவிகளில் வந்தறைய, எதுவும் விளங்காது மாடிப்படியிறங்கி அப்படியே கீழே வந்து வாசலில் நின்று பார்த்தார்.
                    அலுவலகத்தின் முன்பிருக்கிற சுவரின் ஓரம் பெரிய கும்பல் நின்றிருக்க, அவரும் அந்தக் கும்பலுடன் வந்து நின்று கொண்டார்.
                    அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
                    ஆபாச சினிமா போஸ்டர் ஒட்டுகிற ஆசாமி ஒருத்தன், எதிரே உள்ள சுவரில் அந்தப் போஸ்டரை ஒட்டப் போக ஆயத்தப்படுவதும்,
                    சங்கரன், "டேய்... ஒனக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவிருக்குதா? நீ மனுஷன்தானா? பார்டா நல்ல. எதிர்த்தாப்ல இருக்குறது ஒரு பொது அலுவலகம். இந்த மாநிலம் பூராவிலிருந்தும் அந்தச் சங்கத்தச் சேர்ந்த பெண் ஊழியருங்க அடிக்கடி வந்து போறாங்க. அப்டி இருக்கையில், இந்த ஆபீஸ் முன்னால - பல குடும்பங்க பொழைக்கிற இந்த எடத்துல வந்து ஆபாச சினிமா போஸ்டர் ஒட்றியே" என்று அதிரும் குரலில் கூறியவாறு அவனை ஆபாச போஸ்டர் ஒட்ட விடாது இடை மறித்து நிற்பதும் தெரிகிறது.
                    அந்த ஆள், "நா போஸ்டர் ஒட்டாமப் போக மாட்டேன். நீ என்னடா பண்ணுவ?" என்று சங்கரனை முறைத்து எகிற,
                    "நீ ஒட்றதுக்கு நா விடவேமாட்டேன். அதனால என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்" கூறிக் கொண்டே மீண்டும் அவனை சுவரை நெருங்க விடாது மறித்து நிற்கிறான், சங்கரன்.
                    இப்படியாக இருவருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம்! போஸ்டர் ஒட்டப் போவதும்; ஒட்ட விடாததுமாய் அவரவர் குறிக்கோளில் எள்ளளவும் இறங்கி வராத உடும்பின் உறுதி.
                    இறுதியில், "என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்" என்ற சங்கரனின் வீர்யமான துணிச்சலில், ஆபாச போஸ்டர்காரனின் அற்ப முயற்சி அப்பளமாய் நொறுங்கிப் போனது. அவன் மீண்டும் பசை வாளியையும், போஸ்டரையும் சைக்கிளில் வைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகன்றான்.
                    கும்பலும் கலையத் துவங்கியது.
                    நடந்தவற்றையெல்லாம் நங்கூரப் பார்வையால் ஆழ்ந்து விழுங்கி நெகிழ்ந்து போனார் ராமசாமி. அவ்வளவு சீக்கிரமாய் மீள முடியாத ஆச்சர்யம். "நமக்கேன் வம்பு?" என இந்தத் தெரு வாசிகளே ஆபாசப் போஸ்டரை அனுசரித்துப் போயிருக்க, நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து வந்த சங்கரன், அதை மறுதலித்து மல்லுக்கு நிற்கிற தைரியம் அவரை நெஞ்சுருகச் செய்தது. வேகமாய் அவனுக்கு அருகில் போனவர், அவனைப் பற்றிய கலங்கலான எண்ணத்தைக் கழுவித் துடைத்தபடியும் நெஞ்செல்லாம் நிம்மதிவாசம் மணக்கவுமாய்,
                    அவனது கைகளை இருகப் பற்றினார். "என்னப்பா சங்கரா? பிரச்சினை முடிஞ்சதா? ஆபாசப் போஸ்டர்காரன் திரும்பிப் போயிட்டான் போல. சங்கரன், ரியலி யூ ஆர் அவுட் ஸ்டாண்டிங் யூத் ஆஃப் திஸ் கன்ட்ரி" என்றவர். "வா நம்ப ஆபீஸ்ல தங்கிக்கிறலாம். நான் அனுமதி வாங்கித் தாறேன்" என்றவாறு அவனை அரவணைத்தபடி அலுவலகம் நோக்கி நகர்ந்தார். "இதைத்தான் ஒங்க ஊர்ல சண்டியர்த்தனம்னு சொல்றாங்களா? இது மட்டுமில்ல தம்பி இதே ரோட்ல கேடிகளோட மாமூல் வசூல் அது இதுன்னு நிறையக் கோளாறு இருக்குது. நிறையக் கோளாறு இருக்குது. ஒன்னப் போல இளைஞர்களாலதான் அதுக்கெல்லாம் ஒரு விடிவு வரும்" - சொல்லிக் கொண்டே அவனுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த ராமசாமியின் கண்களில் சங்கரனைப் பற்றி புகார் கூறிய அரசு ஊழியர் தேவதாஸ்!
                    வெட்கிக் குனிந்திருந்த அந்த ஆள் முகத்தில் உயிரில்லை.

சிறுகதைகள்


இனி

செங்கல் சுமந்து
சாலையைக் கடந்தான் சிறுவன்
சுவற்றைப் பார்த்து சிரித்தான் - சுவற்றில்
"இளமையில் கல்" வாசகம்.
- கபிலன் வைரமுத்து
சிவந்த வானம் விடியலை கரைத்துக் கொண்டிருந்தது. பசுமை மறந்து போன கிராமத்தில் கழுவிய நீரில் முளைத்துப் போன புற்களின் பனித்துளிகள் லேசாய் சினுங்கி மறைந்தன. பரபரப்பில் ஆட்பட்டு கிடந்தது கிராமம். தினமும் உண்டாகிற பரபரப்புகள். வேலைக்குப் போகிற அவசரம். ஏழு மணிக்கெல்லாம் பட்டாசுத் தொழிற்சாலை பஸ் வந்துடுமாம்.
சுந்தரம் டேய்! சுந்தரம் எழுந்திருடா! மணி ஆறரை ஆகப்போகுது இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு. பாயில் புரண்டவனுக்கு போகிற போக்கில் ஒரு உதை விழுந்தது. அரக்கப் பரக்கப் எழுந்தவன் எப்போதும் போல முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு சாப்பாட்டுத் தட்டில் கண் விழித்தான். அரைகுறை கஞ்சியோடு, ஏழு மணி பஸ் வந்து நின்றதில் ஓடிப்போய் பஸ் பிடித்தான். இங்கிருந்து நாலு மைலாம் பட்டாசுத் தொழிற்சாலை, ஏழரை மணிக்கெல்லாம் பட்டாசு வாசனையை நுகர ஆரம்பித்தது பஸ்.
எப்போதும் சோர்வாய் இருப்பவனுக்குள் அன்று மட்டும் என்னவோ வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்பு. மனம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஒன்றும் தெரியாத வயசாக இருந்தாலும் ஏதோ தெரிந்து கொண்டது போல் சந்தோஷத்தால் திக்கு முக்காடியது. அன்று மட்டும் அரை நேரம் லீவு போட்டுவிட்டு ஜாலியாய் ஊர் சுற்றினான். பஸ்ஸிற்கு கூட காத்திருக்க மறுத்தவனுக்குள் புது வேகம். வீட்டிற்கு வர ஓட்டமும் நடையும் தான். கண்மாய் மேட்டுல மீன் பிடிச்சுகிட்டு இருந்த சக நண்பர்களோடு கொஞ்ச நேரம் கொண்டாட்டம். மகிழ்ச்சி தலைகால் புரியாமல் திரிஞ்சான் சுந்தரம். என்னடா! திடீர்னு இவ்வளவு கொண்டாட்டம். நண்பர்கள் சூழ்ந்து கொண்டு கேட்க. "அது ஒன்றுமில்லை போனவாரம் வந்து நம் ஊருக்கு "சிறுவர் சீர்திருத்த பள்ளி" கட்டிக் கொடுக்க வந்தாங்கல்ல அவுங்க இன்னிக்கு வந்து ஏதோ கம்பியெல்லாம் ஊனி அளவெடுத்துக்கிட்டு போனாங்க. நாளைல இருந்து வேலை ஆரம்பமாம். இன்னும் மூணு மாசத்துல வேலை முடிஞ்சிடும்னாங்க.
க்கூம்.... இதுதானா என்கிற முனுமுனுப்பும் சலிப்புமாய் எல்லோரும் திக்கு கண்ட பக்கம் ஓடினார்கள். ஒருவன் ஒளிந்து கொள்ள ஐஸ்1, ஐஸ்2 விளையாட தொடங்கினார்கள். சுந்தரம் நீ வரல? சுந்தரத்திற்கு மனம் லேசாய் கனத்தது. நான் விளையாட வரல. நீங்க வேணா விளையாடிட்டு வாங்க. மேட்டுலேயே உட்கார்ந்திருந்தான். தண்ணீர் என்னவோ வித்தியாசமாய் இருப்பதை போல அதையே உற்றுப் பார்த்தான். ஏன் இவங்களெல்லாம் ஆர்வமில்லாம இருக்காங்க என்பது போல மனம் கேள்வி கேட்க தோணியது.
நல்லா வயசுக்கேத்த உயரம். பன்னிரெண்டு வயசு. ஆறு வயசுல வேலைக்குப் போனவன் பனங்கொட்டை சூப்பிய தலை. எண்ணெய் செக்குல தலையை விட்டா எண்ணெய் மிச்சம் இருக்காது. வறண்ட முடி, பக்கத்து வீட்டு கோபியோட டவுசர், அரணாக் கயித்துல நிக்காம அடிக்கடி மீனைப்போல நழுவிக் கொண்டே இருக்கும். டவுசரில் தபால் பெட்டி வேற, நண்பர்களின் கேலிப் பேச்சுக்கு எப்போதும் தயாராய் காத்திருக்கும் டவுசர், சட்டை பட்டம் பார்த்து பல வருஷம் இருக்கும். உண்மை நிறமுன்னு எதையும் பார்க்க முடியாது.
ஆறு வயசுல இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் அம்மா சேர்த்து விட்டா, இன்னிக்கு வரைக்கும் அதே வேலைதான். வேலை மேல அவ்வளவு வெறுப்பு இருந்தாலும் விட முடியலையேங்கிற தவிப்பு. அம்மாவிடம் அடிக்கடி சொல்லி இருப்பான். அடி மட்டும் தான் மிஞ்சும். கை ஒருநாள் கூட வெள்ளையா இருந்ததே இல்ல. தினமும் ஜெலட்டினால் கருகிப் போன கை. கைல ஏதோ சின்ன காயம், போன வாரம் ஏதோ பெரிய பட்டாசு கட்டுறப்போ வெடிச்சதாம். இதெல்லாம் சகஜமா நடக்கும் வழக்கம் போல.
இந்த முறை உறுதியான தீர்மானம், எப்படியும் வேலைய விட்டுட்டு பள்ளிக்கூடம் போகப் போறோம்ங்கிற எண்ணம். அதுதான் பட்டாசுத் தொழிற்சாலையையே எடுக்கப் போறாங்கல்ல அப்புறம் எங்க வேலை இருக்கும் என்கிற நினைப்பு, மேலோங்கிய உயர்வோடு மனசுக்குள் என்னவோ புதுசு புதுசா கனவுக் கோட்டை. இதுவரைக்கும் ஜெலட்டின் குச்சி புடிச்ச கை இனி சிலேட்டுப் பென்சில பிடிக்கப் போகுதுங்கற சந்தோஷம்.
அப்பா விட்ட வேலையாம் ஐந்து வயசு இருக்கறப்போ ஒருநாள் இரத்தங் கக்கிக்கிட்டே வீட்டுக்கு வந்தாரு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாங்க. ஏதோ டி.பி. நோயாம். அடிக்கடி இருமுவாரு. பார்க்கவே பாவமா இருக்கும். சிலசமயம் நான்கூட கைத்தாங்கலா புடிச்சிருக்கேன். ஒருவாரம் ஆஸ்பத்திரி போனாரு சரியாய்ப் போச்சுனு சொல்லிட்டு மறுபடியும் வேலைக்குப் போனாரு வேலை நேரத்துல அடிக்கடி பீடி குடிப்பாறாம். இது வேற சைடுல பீடி தயாரிக்கிற தொழிற்சாலை. இலவசமா பீடி கிடைக்கும். மதியத்துக்கு சாப்பாடே கொண்டு போகமாட்டடாரு. ஒருநாள் திடீர்னு மறுபடியும் இரத்தம் கக்கினாராம். அப்படியே கண் சொருகி கீழே விழுந்தவரு "என் மகனை காப்பாத்தீருங்கன்னு" சொல்லிக்கிட்டே செத்துப் போயிட்டாராம். அம்மா அழுது புலம்பினா, பிஞ்ச கைல கொடுத்துட்டு மகராசனா போயிட்டியே! அடப்பாவி! மனசுக்குள்ள சோகம். அதைவிட அம்மா அழறதப் பார்க்கறப்போ அழனும்போல தோணிச்சு. லேசா ஊளை மூக்கை ஒழுக்கிக்கிட்டே அழுதவன்.
அப்பா செத்ததுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு என்னை அனுப்பிச்சா இந்த வேலைக்கு. இன்னிக்கு வரைக்கும் வேலை பிடிச்சுப் போகல. எப்படா விடுவோம்னு ஆகிப்போச்சு அப்பாடா! விட்டுடோம்குற அளவுக்கு நிம்மதி. குடும்ப வறுமைன்னு வேற வேலை பார்க்க வேண்டியதா இருந்தது. இனிமே நல்லா படிக்கலாம். நல்ல உத்தியோகத்துக்கும் போலாங்கிற கனவு. ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்த இந்த நிறைவேறா கனவு நிறைவேறுதேங்கிற சந்தோஷம்.
யார்க்கிட்டயும் சொல்லவே இல்லை. எழுந்து வேகமாய் ஓடினான் வீட்டிற்கு. ஓடினவன் வீட்டிற்குள் கேரளத்திலிருக்கும் மாமா வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாய் துள்ளினான். மாமா கொண்டு வந்த புதுச் சட்டையை மாட்டி மாட்டிப்பார்த்தான். மிட்டாய், கேக் எல்லாம் ஆவலாய் ஒரு பிடி பிடித்தான்.
எலே! சுந்தரம் நல்லா குளிச்சுக்கிட்டு ரெடியா இரு. இன்னிக்கு நைட்டு நீ கேரளாப் போற. அங்க ஒரு நாயர் கடையில் டீ டம்ளரு கழுவுற வேலையாம். மாசம் சாப்பாட்டோட ஆயிரம் ரூபா சம்பளமாம். போனவாரமே நம்ம பட்டாசு தொழிற்சாலைய எடுக்கறதா பேசிக்கிட்டாங்கல்ல இன்னும் மூணு மாசத்துல காலியாம். மனம் வெயில் பட்ட புழுபோல் துடித்தது. முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஏதோ! இடிவந்து விழுந்ததுபோல் சலனமில்லாமல் நிசப்தமானான். இதயம் சுக்கு நூறாய் சிதைந்தது. ஏலேய்! என்று அம்மா அதட்ட அவ்வளவுதான் சீக்கிரமாய் ஓடி புறப்பட்டான் கண்களில் கண்ணீரோடு. இனி, இந்த பிஞ்சுக் கண்கள் வெளிச்சத்தை தேடிக் கொண்டே இருக்கும். அது என்றுமே எட்டாத தூரத்தில்.

சிறுகதைகள்


வாசமற்ற மலர்கள்

மதியம் 12 மணி கத்தரி வெயிலு சுளீர்னு மண்டையப் பொளக்கறாப்ல அடிச்சுச்சு. மாயனுக்கு உடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருந்துச்சு. இருந்தாலும் என்ன செய்வது வயித்துப் பொழப்பைப் பார்க்கணுமே. இந்த வெயிலுக்கு தர்பூசணியும், வெள்ளரிக்காயும் போட்டா நல்லா லாபம் கிடைக்கும்னு டவுன்ல சொன்னத வச்சு தனக்குன்னு இருந்த 5 காணி நிலத்துல மாயன் வெள்ளரியும், தர்பூசணியும் விதைச்சான். எல்லாக் கிணத்துலயும் தண்ணிவத்திப் போனாலும் மாயன் கிணத்துல மட்டும் இந்த வெயில் காலத்துலயும் சும்மா வெள்ளியை உருக்கி விட்ட மாதிரி சலசலனு இருக்கும்.
மாயன் தண்ணியத் தொறந்து விட்டுகிட்டே இந்தக் காய்களைக் கொண்டுபோயி உழவர் சந்தைனு ஒண்ணு வந்திருக்கு அதுல போட்டா லாபம் கிடைக்கும்னு விவசாய ஆபிசரு சொன்னாக. அதமுதலச் செய்யணும்! இந்த புரோக்கர் வெடுவானிப்பயக்கிட்ட காச அழுவணும்னு தேவையில்ல மீதியை ரோட்ல கூறு போட்டு வித்தாக்கூட கைல நாலு காசு கிடைக்கும்னு நினைச்சுகிட்டு வேலையைப் பார்த்தான் மாயன். நெல்லைத் தவிர ஒண்ணும் போட மாட்டான். எப்பவாவது தக்காளி போட்டா போடுவான்.
மாயன் மடையை அடைச்சுட்டு தோட்டத்தப் பார்த்தான் "பிஞ்சும், பூவுமா, புதுசா கல்யாணமான பொண்ணு கணக்கா சும்மா தளதளனு இருந்துச்சு. சரி இந்தத் தடவையாச்சும் ஆண்டவன் வழிகாட்டட்டும்"னு வேண்டினான். கொஞ்சம் காசு கிடைக்கும். இதவச்சு வர்ற தைக்குள்ள இரண்டாவது புள்ள கல்யாணத்த முடிச்சுடணும்னு கணக்குப்போட்டான்.
மாயனுக்கு 2 பொம்பளப்புள்ளைக ஒரு பையன் மாயனோட பொண்டாட்டி சின்னாத்தா. மூத்த பொம்பளப்புள்ள செல்லத்த போன வைகாசியில தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான் இங்கதான் பக்கத்துல இருக்குற பழையனூர்ல. ஏதோ அவனால முடிஞ்ச சீர் சினத்தி செஞ்சு அவ வாழ்க்கை போயிட்டு இருக்கு. 2 வது புள்ள முருகாயி அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டுல தான் இருக்கா. மாயனோட கடைசிப்பையன் குமார். 12வது வரைக்கும் படிச்சுப்புட்டு வேலை வெட்டிக்குப்போகாம மைனரு மாதிரி ஊர் சுத்திகிட்டு திரியறான். அவனுக்கு வீட்டப்பத்தியும் கவல இல்ல. எதைப்பத்தியும் கவல இல்ல. டிப்டாப்பா டிரஸ் பண்ணிகிட்டு கலெக்டரு உத்தியோகத்துக்கு போற மாதிரி கிளம்பிடுவான். எங்க போறான் என்ன செய்யறான்னு தெரியாது. போன மாசந்தான் ஏதோ கட்சியில இளைஞரணியில சேர்ந்தன்னு சொல்லிகிட்டு திரிஞ்சான்.
மாயனுக்கு வயிறு பசித்தது காலையில நீராரத்தண்ணியக் குடிச்சுப்புட்டு கருக்கல்ல கிளம்பினவன் தான். வந்ததுல இருந்து களை எடுக்கிறது. தண்ணி பாய்ச்சறது, மருந்து அடிக்கிறதுன்னு வேலை இருந்துக்கிட்டேயிருக்கு.
தூரத்துல சின்னாத்தாவும் முருகாயியும் வருவது தெரிஞ்சுக்க சின்னாத்தாவோட கைப்பதம் யாருக்கும் வராது. ரெண்டு மொளகாயக்கிள்ளிப் போட்டு புளியக்கரைத்த ஊத்துனாக்கூட அவ்வளவு ருசியா இருக்கும். நினைக்கியிலேயே நாக்கில் எச்சி ஊறுச்சு. முருகாயிக்கு எப்பயும் வயல்ல சாப்பிடத்தான் பிடிக்கும் அதனால ஆத்தாவோட எப்பவும் வந்திருவா. மூணு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க.
கிணத்துத்தண்ணியில கை கால், முகம் எல்லாம் கழுவிட்டு துண்டுனால துடைச்சுகிட்டே, என்ன சின்னாத்தா என்ன சாப்பாடு வாசன மூக்கத்துளைக்குதே; அட ஒண்ணுமில்லைங்க, மேல்வீட்டு பெரியாத்தா கொஞ்சம் அயிரைமீன் கொடுத்தாக. அதைக் குழம்புவச்சி, கஞ்சி கொண்டு வந்துருக்கேன். அப்ப சீக்கிரம் போடு, இப்பவே நாக்குல எச்சி ஊறுது.
சின்னாத்தா கும்பாவுல கஞ்சிப்போட்டு பூசணி இலையில அயிரமீன் வச்சி மாயனுக்கு வெயிலுக்கு இதமா இருந்துச்சு. மூன்று பேரும் சேர்ந்து வயிறார சாப்புட்டாக சின்னாத்தாவும், முருகாயியும், பாத்திரத்தெல்லாம் கழுவிட்டு "அப்ப நாங்க போறோம் நீங்க சித்த நேரம் உறங்கிட்டு வாங்க"னு சொல்லிட்டுப் போனாக.
மாயனுக்கும் அசதியாத்தான் இருந்துச்சு. அப்படியே வேப்பமரத்து நிழல்ல படுத்து உறங்கிட்டான் திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா வெயிலு கொஞ்சம் இறங்கியிருந்துச்சு மாயன் மம்பட்டி, மத்த சாமானெல்லாம் மோட்டார் ரூம்ல வச்சுப்புட்டு வீட்டுக்குப் போனான். வர்ற வழியில ஊரணிப்பக்கம் பெரிய தேவர் பாத்துப்புட்டாரு" என்ன மாயா! நம்ம குமாரு கட்சியில சேர்ந்துட்டாம்போல ஒரே வெள்ளையும் சொள்ளையுமா திரியறான் கேட்டா செயலாளர், அது இதுங்கறான்." அடப்போங்கப்பே அவக்கிடக்கான் வௌரங் கெட்ட நாயி, அப்பு, கட்சியல்லாம் சோறுபோடாது தினம் உழைச்சாத்தான் வயிறு நியைற சாப்பிட முடியும். நானும் வீட்ல உட்கார்ந்துர்ரேனு வச்சுக்கங்க, இவனக் கொண்டாந்து காசு கொடுக்கச் சொல்லுங்க பாப்பம். அப்படியே கொண்டாந்தாலும் அது அடுத்தவனக் கொன்னு தாலியறுத்தக் காசாத்தான் இருக்கும். அப்பு, உங்ககால அரசியல் வேற. இந்தக்கால அரசியல் வேற, ஒருத்தன் ஆட்சிக்கு வந்தா மொத்தமா அடிக்கிறான் இன்னொருத்தன் கொஞ்சம் கொஞ்சமா அடிக்கிறான். போங்கப்பே! அவன் கெட்டுச் சீரழியப்போறான் நான் வர்றப்பே. என் பொழப்பப் பார்க்கணும் பெரியதேவர் சிரிச்சிகிட்டுப் போனாரு.
வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாயன். சின்னாத்தா ஏய் புள்ளே! உள்ள என்ன பண்ணிக்கிட்டிருக்க? குளிக்கத் தண்ணி எடுத்து வை. சின்னத்தா தொட்டியில தண்ணியக் கொண்டு வந்து ஊத்துனா. மாயன் குளிச்சுகிட்டிருக்கும் போது உள்ளாற ஏதோ சத்தம் கேட்டுச்சு. அவன் மகன் குமாரு தான். அவன் ஆத்தாகிட்ட சண்ட போட்டுகிட்டிருந்தான். "அம்மா காசு கொடுக்குறியா இல்லையா தலைவருக்கு பொறந்த நாளு சால்வை வாங்கணும் காசு கொடு".
"போடா வக்கத்த நாயே. இங்க கோவணத்துணிக்கே வழியக் காணமா இவன் எடுபட்ட நாய்க்கு சால்வை வாங்கறானாம் சால்வை. அந்த மனுசன் வெயில்லகிடந்து மாடா உழைக்கிறாரு இவன் இப்பத்தான் வெள்ளையும், சொள்ளையுமா அலையிறான். ஒரு சல்லிக்காசு கிடையாது போடா வெளிய. மாயன் திரும்பிக் கூட பார்க்காம குளிக்சுகிட்டு இருந்தான் போன வாரமே இவுக ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பேச்சுவார்த்தையில்லை.
பன மட்டையில மழை பெஞ்ச மாதிரி தொறுதொறுனு முனங்கிக்கிட்டே குமாரு வெளியே போனான். அவன் போனவுடன் தான் மாயன் உள்ளுக்குள்ள வந்தான். மனைவி சின்னாத்தா அழுதுகிட்டிருந்தா "ஆம்பளபுள்ள பொறந்துட்டான் கஞ்சி ஊத்திக் காப்பாத்துவான்னு பாத்தா இவன் ஏதோ அட்ரஸ் இல்லாத நாய் வேட்டியல்ல புடிச்சிகிட்டு திரியறான் இவன் வம்புனா என்னாகுறது. ஹீம் - என்னைக்குத்தா இந்த மாரியாத்தா கண்ணத் தொறப்பாளோ! இந்தப் பொட்டப்புள்ளையை கட்டிக் கொடுக்கிற வரைக்கும் பொழப்பு நாய்ப் பொழப்பாவுல்ல இருக்கு.
மாயன், "சரி விடுறி! விறைச்சுகிட்டு எங்க போகப் போறாரு, சோத்துக்கு இங்க தான் வரணும். நாளைக்கு அவன் தலைவருனு சொல்லிகிட்டு திரியற நாயை செயில்ல தூக்கி போடப் போறாக. இவன் என்ன பண்ணப்போறானாம். அவன் பொண்டாட்டிபுள்ள குட்டிக எல்லாம் நல்லா இருக்குது. இவன் தான் சீப்பட்டுச் சீரழியப் போறான். போகட்டும் விடுடி சோத்தப்பாரு.
ஒரு மாதம் சென்றிருக்கும். இப்பெல்லாம் குமாரு வீட்டுக்கே வர்றதில்ல டவுன்லயே இருக்கறதா செய்தி.
இப்ப தர்பூசணியும், வெள்ளரியும் நல்ல அறுவடை செய்யும் பதத்தில இருந்துச்சு. நல்ல தளதளனு பார்க்க நல்லா இருந்துச்சு. சனிக்கிழம உழவர்சந்தைக்கும் கொண்டுபோனா கூட்டம் நிறையவரும். பெரிய பெரிய ஆபிசருக எல்லாம் வந்து வாங்கிட்டுப்போயிருவாக. வியாபாரத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தான் மாயன்.
மாயனுக்கு இடி இறங்குனாப்ல இருந்துச்சு. புள்ள பொறந்து பேர்வைக்கப் போகையில செத்துப் போன கணக்கா இருந்துச்சு மாயனுக்கு, பெரியதேவருக்குன்ன அவருபாட்டுக்கு சொல்லிபுட்டாரு. அவுரு நல்ல வசதிவாய்ப்பா இருக்காரு ஹீம் எம்பொழப்பு நாய் பொழப்பு கழுதப் பொழப்பாவுல்ல இருக்கு. நாம் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது.
மாயனுக்கு 2 நாளா ஒண்ணுமே புரியல பாடுபட்டு பக்கப்பட்டு விளையவச்சத நல்ல விலைக்கு வித்தாத்தானே கையப்பிடிக்காம இருக்கும். கடன, உடன வாங்குனத அடைக்க முடியும். எப்படியோ அறுவடை முடிஞ்சுருச்சு.
மறுநாள் மாயன் மாட்டுவண்டியில தர்பூசணியும், வெள்ளரியையும், ஏத்திக்கிட்டு டவுனுக்குப் போனான் பஸ்சுல போனா லக்கேசுக்குன்னு தண்டம் அழுவணும் அதனால குறுக்கால போன சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சுகிட்டு வண்டிய விரசா விட்டான் கூட ஒத்தாசைக்கு சின்னாத்தா, முருகாயி ரெண்டு பேரும் வந்தாக கூட்டு ரோட்ட தாண்டி போகையிலேயே ஏதோசலசலனு சத்தம் போட்டுச்சு மாயனுக்கு கதக்குச்சு. தூரத்துல கட்சிக்கார பயலுக, சோடாப்பாட்டிலு கைச்செயினு அருவா கத்தினு வச்சுகிட்டு எல்லாரையும் வழிமறிச்சு அடிச்சிட்டிருந்தாணுக என்ன ஏதுனு ஓடிவந்தவன்கிட்ட மாயன் விசாரிச்சான் யாரோ அரசியல் தலைவர செயில்ல போட்டாங்களாம் அதுக்கு அந்த கட்சி ஆளுக மறியல் பண்றாக அங்கிட்டு போகாதிகன்னு சொல்லிட்டு அவுர்ற வேட்டிய கையில புடிச்சுகிட்டு ஓடினான்.
மாயன், "ஏய் பிள்ளைகளா அப்படியே படுத்துக்கிடுங்க. நான் வண்டிய அந்த நாய்க கண்ணுல படாம வரசா விட்டுறேன்.
ஒருத்தன் கருகருனு கருவாக்கட்டை மாதிரி இருந்தவன். "டேய் அங்கபார்றா ஒருத்தன் நமக்கு டிமிக்கி கொடுத்துட்டுப் போறான். புடிங்கடா டேய் அடிறா வண்டியச் சாயுடா ஒரே கூச்சலு. அழுரக 10 நிமிசத்துக்குள்ள அம்புட்டும் முடிச்சு போச்சு மாயன் பொம்ளப்பிள்ளைகளை அடிக்கவர்றாகளே தடுக்கப்போக அவனுக்கு நெஞ்சுல வெட்டு, புருஷனுக்கு ஏதாவது ஆயிரப் போவுதுனு சின்னாத்தா தடுக்கப்போக அவளுக்கும் வெட்டு முருகாயி மயக்கமாயிட்டா.
2 உசுரும் 1 நிமிசத்துல அடங்கிப்போச்சு கன்னஞ்செவந்தபுள்ள கட்டழகி பெத்தபுள்ள செய்யதறியாம திகைச்சுப் போயிநின்னா தர்பூசணியும், வெள்ளரியும் ரோடெல்லாம் கிடந்துச்சு. மாயன் ரத்தமும், தர்பூசணித் தண்ணியும் ஒண்ணாக் கலந்துச்சு.
அப்பத்தான் சீராட்டிப் பாராட்டி சீரு செய்யப் போற ஆத்தாளப்பறிகொடுத்து வகை செய்யப்போற அப்பனப்பறிகொடுத்த முருகாயி அண்ணணப் பாத்துப்புட்டா அவன் அங்கிட்டு முக்குல எவனையோ புடிச்சு அடிச்சுகிட்டு இருந்தாய் டேய்! எங்க தலவர செயில்ல போட்டாங்க நீங்க கவலையில்லாம திரியறியா உன்ன உரிச்சுப் பொலி போடறேன்பாரு. முருகாயிக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
அண்ணன நோக்கிப்போனா, "டேய்! இங்க பார்றா உங்க அப்பன் ஆத்தா செத்துச் சீரழிந்து கிடக்காக நீ இன்னொருத்தன அடிக்கிறயிடா. நீங்கள்ளாம் உருப்பட மாட்டியளா? நாசமாப்போவீக! அப்பன் ஆத்தாவுக்கு உதவவேணாம் இப்படி உயிரோ கொள்ளி வச்சுட்டியே பாவி நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ!....... முருகாயி ஒரு பாட்டம் பாடி முடிச்சா.
காரியமெல்லாம் முடிஞ்சு 1 வாரமாச்சு குமாரு வீட்டுப்பக்கமே வரல துக்கத்துக்கு வந்த சனங்கள்லாம் காக்கா, குருவி கணக்கா பறந்து போயிருச்சுக. அவ அக்காவையும் புருசன்காரன் வந்து சாக்கு போக்குச் சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டான்.
முருகாயி தனித்துப்போனா.... சொந்தமிருந்து சீண்டாதவளாயிட்டா அழகா இருந்தாலும் வாசமில்லா மலர யாரும் சீந்தமாட்டாக அப்படியாயிருச்சு முருகாயி நிலம இப்படி எத்தனையோ முருகாயிக தெருக்குத்தெரு, ஊருக்குஊரு இருக்காக.
அடுத்தநாள் செய்தியில் - "தலைவரின் கரம் கறைபடியாத கரம் எனவே விடுதலை" என்று பெரிய எழுத்தில் வந்தது. அரசியல் வாதிகள் அவர்களுக்கு வேண்டியதை சுருட்டிக் கொண்டு, நடித்துக் கொண்டு அமோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் வெறிபிடித்த ஓநாய் கூட்டமாய் தொண்டர் இனம் திரிகிறது. இவை நிற்கும் வரையில் நம் நாட்டில் வாசமற்ற மலர்களே அதிகமாய்?.......

சிறுகதைகள்


தொலைந்து போனவர்கள்

தூரத்தில் தெரிகின்ற
மேகங்களைப் போலவே
உன் நினைவுகளும்
கலைந்ததும்
மறைந்து விடுபவையாய்...!
கார்த்தி பஸ்ஸை விட்டு கிருஷ்ணாபுரம் காலனியில் இறங்கியபோது ஹேமா ஞாபகம் வராமல் இல்லை. மனதில் அழுத்திக் கிடந்த உணர்வுகள் தமிழ் மண்ணை மிதித்தும் பீறிட்டு வெளிக்கிளம்பிய போது அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பஸ் கிளம்பியபோது எழுந்த தூசி முகத்தில் படிந்ததைக் கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுத் திரும்பியபோது ஒரு டீக்கடை கண்ணில் பட்டது. மெதுவாய் டீக்கடைப்பக்கம் கொட்டகைத் தூணருகே சாய்ந்து நின்று தெருவை நோட்டமிட்டான். நினைவுகள் மின்சார வேகத்தில் முன்னோக்கிச் செல்ல மெதுவாய்க் கண்களை மூடிய கார்த்திக்கு மகாத்மா காந்தி நகர் மெல்லிய பாசியாய்க் கண்முன் படிந்தது.
மகாத்மாகாந்தி நகரில் தான் ஹேமாவின் வீடு இருந்தது. அங்கிருந்துதான் பெரியார் வந்து, பெரியாரிலிருந்து எஸ்.வி.என். காலேஜில் பி.பி.ஏ., படித்தாள். ஹேமா பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர். அவளுடைய தாய்மொழி கன்னடம். பிராமின் பேமிலி. அப்பரம்பரைக்கே உரிய வார்ப்பான மஞ்சள் தேகம். மின்மினிப்பூச்சியாய்க் கண்கள், துருதுருப்பாய் இயங்கும் இடை, நிலவு முகம் என்று சங்க இலக்கியத்தில் இருந்து உவமைகள் கடன் வாங்கும் அளவுக்குச் சந்தனத்தில் கடைந்தெடுத்த தங்கச் சிற்பம் என்றெல்லாம் சொல்லுமளவுக்கு அவளுடைய அழகு இருந்தது. கார்த்தியும் அங்குதான் பி.பி.ஏ., படித்தான். அவனுடைய வகுப்பில்தான் ஹேமாவும் வந்து சேர்ந்தாள். முதல் முதலாய் வேகமாய் வகுப்பறையில் நேருக்கு நேராய்ச் சந்தித்தபோது அவனது கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அப்படியே அசந்துபோய் நின்றுவிட்டான். அப்படியொரு அழகான, அமைதியான குளிர் வீசும் நிலவை, குட்டித்தேவதையை அவன் அதுவரை பார்த்ததில்லை. முதன் முதல் பார்த்த பார்வையிலே அவள் முகம் பளிச்சென நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. அன்று வகுப்பறையில் என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அதை அவன் ஆராய்ச்சி செய்யவும் விரும்பவில்லை. அவள் முகம் மட்டும் பட்டாம் பூச்சிபோல, அடிக்கடி கண்ணில் நின்று கண்ணாமூச்சி காட்டியது.
கண்டதும் காதல் என்கிற கணக்கில் உடனே நோட்டை எடுத்துப் படபடவென்று ஒரு ஹைக்கூ கவிதையை எழுதி வைத்தான்.
நான் பசையில்லை
இருந்தும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது
உன் முகம்
அப்புறமென்ன கவிதை ஊற்று தேனாய்ப் பாய்ந்தது. காதல் பறவை சிறகடித்து வானில் எழுந்து. கோடை குளிர்காலமாகியது. குளிர் கார்காலமாகியது, தென்றல் சுட்டது, தீ குளிர்ந்தது. மொத்தத்தில் உலகத்தின் இயல்பு நிலைகள் அனைத்தும் மாறி அவனது காதலுக்காகக் காமதேவனால் சிருஷ்டிக்கப் பட்டதுபோல் ஒரு திரிசங்கு சொர்க்கலோகம் உருவாகியது. அதில் அவனே இராஜா, அவனே காதல் மந்திரி, தந்திரி எல்லாம். ஹேமாதான் அவன் கனவுக் கன்னி என்று ஆயிற்று. இப்படியே நாட்கள் உருண்டன. படிப்பில் மனம் லயிக்கவில்லை. சதாசர்வமயமும் ஹேமா சுப்ரபாதமாகவே விடிந்தது. மழையடித்தால் ஹேமா, புயல் அடித்தால் ஹேமா, வெயிலடித்தால் ஹேமா என்று பார்க்குமிடமெல்லாம் ஹேமா உருவமே நின்றது. இளமை முறுக்கில், இன்பக் கிறுகிறுப்பில் எதிர்கால வாழ்க்கை ஒன்று இருப்பதே கார்த்திக்கு மறந்து போனது. அடுத்தடுத்து எழுதிய டெஸ்ட் பரீட்சைகள் செமஸ்டர் என்று எல்லாம் அரியர் விழுந்தது. (அதை இட்டு நிரப்புவதற்கு எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் ஆனது அடுத்த விஷயம்) ஹேமா ஞாபகத்திலேயே இது எல்லாம் நடந்து முடிந்தது. ஒருதலைக் காதலை வளர்த்தானே தவிர, அந்தக் காதலைப்போய் அவளிடம் மனம் விட்டுச் சொல்வதற்கு அவனுக்குத் தெம்பு வரவில்லை. இரண்டு மூன்று முறை சொல்ல முயற்சித்து அது பெரிய தோல்விகளிலேயே முடிந்தது. காரணம் அவனுக்கு முன்பே ஹேமாவை ஐந்து பேர் நான் முந்தி, நீ முந்தி என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணகுமார், கருணாகரன், ஆனந்த், சுரேஷ், நாச்சியப்பன் என்று மாதாமாதம் அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போனது. அவர்களோடு போட்டி போட்டு, இவன் காதலைச் சொல்லி வடிகால் தேடுவதற்கு ஒரு வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, கருணாகரனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் உள்ளூர் தாதாக்களின் செல்வாக்கு இருந்ததால் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று பாதியிலேயே முழுக்குப் போட்டுவிட்டான். அத்தோடு ஹேமா அத்தியாயமும் அவன் மனத்திலிருந்து முடிந்துபோனது. ஒரு வழியாய் இதயத்தில் படிந்த காதல் ரணங்களை ஆற்றி அரியர்ஸ் எல்லாம் முடித்து அடித்துப்பிடித்து சிபாரிசின் மூலம், மதுரைக் காமராஜ் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ., படிப்பதற்கு இடம் கிடைத்தபோது உண்மையில் கார்த்திக்கு தான் வாழ்வில் ஒரு இமாலயப் சாதனை செய்துவிட்டோம் என்று தோன்றியது.
ஆனால் விதி அத்தோடு அவனை விடவில்லை. அவன் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை அங்குதான் இது தொடங்கி வைத்தது. அவன் எதிர்பாராத அளவுக்கு இன்னொரு கவிதைப் பெண்ணாய், தாரிணி வந்தாள். அப்படியே அவன் பழைய காதல் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப்போட்டாள். ஒரு பெண்ணால் உண்டான காயத்தை இன்னொரு பெண்ணால்தான் ஆற்ற முடியும் என்பது மாதிரி, ஏற்கனவே ஹேமாவினால் அடிபட்டிருந்த இதயம் அவளைப் பார்த்ததும் அவளிடத்தில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது. அது என்ன மாயமோ தெரியவில்லை. காதலின் ரசவாத வித்தை இது என்று சொல்லவேண்டும். வள்ளுவன் உரைத்ததுபோல் ஹேமா விட்டுச் சென்ற தீக்காயங்களை இட்டு நிரப்புவதற்கென்றே தாரிணி வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே, ஏதோ ஒரு முன்ஜென்ம சாபல்யம்போல் அவளது உறவு அவனுக்கு வாய்த்து, தறிகெட்டுத் தடுமாறியது நெஞ்சம், அவள் அன்புப் பார்வையிலும், பேச்சிலும், மறுபடியும் ஒரு காதல் அரவணைப்பைத் தேடிக்கொண்டது. முதல் காதலைப்போலவே, மனசுக்குள்ளேயே இதையும் வளர்த்தான். முன்பிருந்த அதே பயம் இப்போதும் அவனை ஆட்டிப்படைத்தது. சகோதரி போல் சிரித்து பழகுகிறவளிடம் போய் எப்படி படக்கென்று, காதலைச் சொல்வது என்று மனம் தவியாய்த் தவித்தது. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. முதற்காதல் போல் இதுவும் ஒருதலையாய், கைக்கிளையாய் தவக்களையாய்ப் போய் விடும் என்ற பயத்தில், ஒருநாள் அதிக முயற்சி செய்து, ரொம்ப யோசித்து அவளைத் தனியே கேண்டீனுக்கு அழைத்து, டீ, கட்லெட், வடை எல்லாம் வாங்கிக் கொடுத்து காதலைச் சொல்லப்போகையில், தாரிணியின் அம்மாவுக்கு சீரியஸ் என்று போன் வர, தாரிணி அத்தோடு போனவள்தான்; திரும்பி யுனிவர்சிட்டிக்கு வந்தபோது, அவளது கல்யாணப் பத்திரிகையோடு உள்ளே நுழைந்தாள். தாரிணிக்குச் சொந்த ஊர் செக்காணூரணி. அவளது அம்மாவுக்கு முடியாமப் போன நேரத்திலேயே அவளது முறை மாமனை முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கல்யாணத்திற்கு முடிவெடுத்து விட்டார்கள். தாரிணி, அவள் கல்யாணப் பத்திரிகையைக் கார்த்தியிடம் நீட்டியபோது அவனது காதல் மாளிகை அன்றோடு தவிடு பொடியாகிப் போனது. அப்புறமென்ன கண்ணீரை மொய்யாக்கி எங்கிருந்தாலும் வாழ்க என்று நெஞ்சில் ஓர் ஆலயம் ஜெமினிபோல் பாடி வாழ்த்திவிட்டு வீடு வந்து விட்டான். இரண்டு நாள் காலேஜ் போகாமல் வீட்டிலேயே படுத்துக்கிடந்தான். அப்புறம் ஒருவழியாய் அவள் ஞாபகத்தை மறந்து எம்.பி.ஏ., முடித்துக் கஷ்டப்பட்டு, ஆந்திராவில் ஒரு கம்பெனியில் அஸிஸ்டன்ட் டைரக்டராய்ப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தாரிணி, ஹேமா என்ற பெண்கள் எல்லாம் மறந்து போனார்கள். நெஞ்சின் ஆழத்திலிருந்து, இதய வாசலிலிருந்து அவர்கள் எல்லாம் படிப்படியாய்த் தொலைந்து போனார்கள்.
இந்தப் பத்து வருடத் தனிமை வாழ்க்கையால் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. முன்பிருந்த இன்பேச்சுவேஷன் என்று சொல்லப்படுகிற இனக்கவர்ச்சி இப்போது இல்லை. இப்போதுகூட பழைய நினைவுகளை நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்படியெல்லாமா சிறு குழந்தைத்தனமாக நடந்து இருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது, ஒரு மெல்லிய புன்னகை மட்டும் இதழ்களில் இழையோடுகிறது. கார்த்தி திடீரென்று யாரோ திட்டுவதைக் கேட்டான். டீக்கடைக்காரர் இவனைப் பார்த்துச் சத்தம் போட்டார். "தம்பி எவ்ளோ நேரமா கத்தறது கொஞ்சம் தூணவிட்டு ஒதுங்கி நில்லப்பா, கழிவுத்தண்ணிய வெளியே ஊத்தணும்" என்று வொல்லிவிட்டு இவன் பதிலைக்கூட எதிர்பாராது ஊற்றினான். இன்னும் ஓரிரு கணங்களில் மறந்துபோய் விடும். காதல் என்பதே வாழ்க்கை அல்ல, ஆனால் பகுதி. காதலை விதைத்தவர்கள் தொலைந்து போனாலும், காதல் பாதிப்பு மட்டும் என்றும் இருக்கும் என்ற நினைப்பில் கார்த்தி வீடு நோக்கி நடந்தான்.

சிறுகதைகள்


அவன்

வானம் நீலமாய் தெளிந்திருக்க, திருதிருவென கீழ் இறங்கிய சித்திரை மாத வெயில் பூமியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அகன்றதொரு அத்தி மரத்தின் நிழலில் அந்த "அன்னை தெரஸா" என்கிற முதியோர்களுக்கான இல்லம் சற்றே குளிர்ந்திருந்தது. மரத்தடியிலிருந்த நீண்ட சிமெண்ட் இருக்கையில் சுந்தரமூர்த்தி உட்கார்ந்திருந்தார். மெலிந்த தேகம். நிறைய நரைத்திருந்தார். குறுக்கும், நெடுக்குமாக கீறல்கள் விழுந்த மூக்கு கண்ணாடிக்குள் அவருடைய பார்வை அமைதியாய் விழித்திருந்தது.
அருகாமையில் "தெரஸா" இல்லத்தின் மானேஜரான ஜோசப், கருணையோடு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
"என்னோட மனைவி இருந்திருந்தா, நான் இங்க வந்திருக்கவே மாட்டேன். ஆச்சு... அவ செத்துப் போயி மூணு வருஷமாச்சு, ஆனா நான் துளிகூட நினைச்சே பார்க்கலே. எனக்கு இந்தகதி வரும்னு. அவ இறந்த அடுத்த வருஷமே என்னோட மூத்த பையன் சண்டை போட்டுக்கிட்டு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான். கடைசி காலத்தில் என்னோட அவன் இருப்பான்னு ரொம்பவே எதிர்பார்த்தேன்.
சுந்தரமூர்த்தியின் கண்களில் நீர் கசிந்தது.
"ஏதோ எனக்கு கிடைச்சிட்டிருந்த பென்ஷன் பணத்தை வெச்சுகிட்டு இரண்டாவது பையனோட இருந்திட்டுருந்தேன். காலேஜ்ல படிச்சிட்டிருந்தான். அவனும் இப்ப என்னோட இல்ல."
"ஏன் சார்!" ஆதங்கத்தோடு ஜோசப் கேட்டார்.
"அவன் இப்ப இருக்கிற இடமே தெரியல. போதை பொருளுக்கு அடிமையாகி, புத்தி பேதலிச்சுப் போச்சு, ஆஸ்பிடல்ல சேர்த்து பார்த்தேன். எல்லா ட்ரீட்மென்ட்டும் கொடுத்தாங்க. திடீரென்று ஒரு நாள் அவன காணல. எங்க போனான்னு தெரியல. எல்லாமே திசை மாறிப்போச்சு. அதுக்கப்புறம், என்னால - தனியா..."
சுந்தரமூர்த்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார்.
"சார், உங்களோட கவல எனக்கு புரியறது. கடவுள் உங்கள கை விடமாட்டார் சார். காட் இஸ் கிரேட்."
ஜோசப் ஆறுதல் அளித்தார். சுந்தரமூர்த்தி கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன் பேச்சை தொடர்ந்தார்.
"ஆனா... ரொம்பப் பெரிய அதிசயம் என்னன்னா, நான் இங்க உள்ள நுழைஞ்ச உடனே கவனிச்சிட்டேன். என்னோட உயிர் நண்பன் பக்கத்தில இருக்கானேன்னு ரொம்ப சந்தோஷமா போச்சு. ஆச்சரியமாக் கூட இருந்துச்சி."
ஜோசப்பிற்கு ஒன்றும் புரியவில்லை.
"சார். நீங்க யாரை சொல்றீங்க?"
"வாங்க காட்றேன்." சுந்தரமூர்த்தி இருக்கையை விட்டு எழுந்தார். கூடவே ஜோசப்பும் எழுந்தார்.
நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவர் ஒன்று இல்லத்தைச் சுற்றி வளைத்திருந்தது. சுந்தரமூர்த்தி மெல்ல நடந்து அந்த சுவரருகே சென்றார். மதிலின் மறுபக்கம் ரயில் தண்டவாளங்கள் இருந்தன. தெற்கே செல்லும் டீசல் ரயில் ஒன்று பெருத்த இரைச்சலோடு வேகமாக கடந்துபோனது.
சற்று தொலைவில் உபயோகத்தில் இல்லாத நீராவி ரயில் இன்ஜின்கள் ஐந்தாறு ஓரங்கட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்தப் பழைய நீராவி ரயில் கூட்டத்தின் மீது சுந்தரமூர்த்தியின் பார்வை விழுந்தது.
"அதோ நிக்கறானே அவன்தான்!"
சுந்தரமூர்த்தி கைநீட்டி குறிப்பிட்ட இடத்தில் ரயில் இன்ஜின்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதையறிந்த ஜோசப், குழப்பத்தில், "யாருமே அங்க இல்லையே சார்" என்றார்.
"அதோ அங்கே நான்காவதா நிக்கறானே, அவன்தான், ரைட் சைட்ல பாருங்க"
ஜோசப்பில் கண்கள் சற்று சுருங்கி விரிந்தது.
"நான் சதர்ன் இரயில்வேயில் லோகோமோடிவ் டிரைவராயிருந்து ரிடயர்ட் ஆயிட்டேன். நாலு வருஷமாச்சு." சுந்தரமூர்த்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கூறியது ஜோசப்பின் நினைவுக்கு வந்தது.
அவர் அங்கே நின்று கொண்டிருந்த ரயில் இன்ஜின்களில் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார் என்பதும் புரிந்தது.
"அந்த லோகோதானா சார் நீங்க ஓட்டிட்டிருந்தது!" மிகுந்த ஆச்சரியத்தோடு ஜோசப்பின் கேள்வி எழுந்தது.
"ஆமாம். அவனேதான்".
"நீங்க ஓட்டின லோகோ அதுதான்னு எப்படி உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது?"
ஜோசப்பை மெல்ல ஏறிட்டு பார்த்தார் சுந்தரமூர்த்தி.
"ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல. முப்பத்தி நாலு வருஷம் அவனோட நான் பழகியிருக்கேன். அவன நீங்க ஒரு இயந்திரமா பாக்காதீங்க. அவனுக்கும் உணர்வுகள் இருக்கு. இன்ச் பை இன்ச் அவன எனக்கு தெரியும்"
ஆத்மார்த்த நட்பின் புரிதலோடு சுந்தரமூர்த்தி தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்.
"அவனோட உழைப்பு ரொம்பப் பெரிசுங்க ஜோசப். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைப்பு. அவன் கடுமையா உழைச்சான். கூலியேயில்லாம!"
ஒரு பழைய நீராவி ரயிலை... இத்துப்போன இரும்பு மிஷினை.... வெறும் இயந்திரமாக மட்டுமே பாராமல், உயிருள்ள மனிதனாகவே மனதிற்குள் பாவித்து நேசம் கொண்டிருக்கும் சுந்தரமூத்தியை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசப்.
"நான் ரிடயர்ட் ஆன இரண்டு மாசத்துல, அவனையும் டிபார்ட்மெண்ட் வயசாயிடுச்சுன்னு சொல்லி ஓய்வு கொடுத்துடுச்சி, டீசல், எலக்டிரிக் ட்ரெய்னெல்லாம் வந்திடுச்சில்ல. அதான் அவன ஒதுக்கிட்டாங்க. முதல்ல யார்டுக்குத்தான் அனுப்பிச்சாங்க. நானும் அப்பப்ப போயி பார்த்துட்டு வருவேன். தனியா... ஒரு மூலையில அனாதையா நின்னுட்டிருந்தான்."
சுந்தரமூத்தியின் குரல் கம்மியது.
ஜோசப்பின் முகத்தில் இறுக்கம்.
"அப்புறம் என்னாச்சு சார்!" என்றார்.
"அவனையும் ஒரு நாள் அங்க காணல. இட நெருக்கடியால யார்ட்ல இருந்து வேற எங்கேயோ கொண்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நெஞ்சு பதறிப்போச்சு. எல்லாமே என்னவிட்டு போன மாதிரி ஒரு வேதனை. அவன தேடி அலைஞ்சேன். எங்கேயும் காணல. இரண்டரை வருஷமா அவன பார்க்கவே முடியாமப் போச்சு."
சுந்தரமூர்த்தியின் தொண்டைக்குழி, விம்மி அடங்கியது.
"அதுக்குப்பிறகு இப்பதான் அவன பார்க்கறேன். இங்க அவன சந்திப்பேன்னு நினைக்கவேயில்ல."
எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடிய அரியதொரு புதையல் கிடைத்துவிட்டது போல் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. மழை வருவதையுணர்ந்த மயில் குதூகுலத்தோடு தோகை விரித்தாடுவதைப்போல் அவர் நெஞ்சு ஆனந்தக் கூத்தாடியது. தரை தவழ்ந்து, தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிட்ட குழந்தையின் தெம்பில் அவர் திளைத்திருந்தார்.

சிறுகதைகள்


முப்போகம்

பெரியவனே... ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான். அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்... அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்... புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள். கோபம் எழுந்தது.
வேகமாய் நடந்து வந்தவள் இவனை வெறித்துப் பார்த்தாள். இவன் முகம் கோபத்தில் இருப்பதை பார்த்தும் அவளுக்கும் கோபமாகியது. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் ஒனக்குப் புரியமாட்டங்குது, கல்யாணம் காட்சின்னு பண்ணி எப்படி குடும்பம் நடத்தப் போறேன்னு தெரியல போ... அந்த தாழைக்குடி செல்லியம்மன்தான் ஒன்னக் காப்பாத்தனும்
இவளுக்கு மேலும் கோபம் அதிகமாகியது.
சின்னவன் வயல் பக்கம் போய் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்திருந்தான்.
படிச்சிட்டா போதுமா? எல்லாமும் தான் கத்துக்கனும் ராசா? வயலப் போயிப் பாரு தண்ணியில்லாம? எல்லாம் கருக்கிட்டு இருக்கு சற்று அழுத்தமாகவே இதைச் சொன்னாள்... குரல் கம்மியிருந்தது. அந்தி குறைந்து கொண்டிருந்தது.
உங்கப்பனைப் பாரு ஒண்டியா கெடந்து தடுமாறுராரு... ஊருல்ல.. இரத்தத்தை மாத்தி தண்ணிய பாய்ச்சுறாங்க. நீங்க கொஞ்சம் அவருக்கு ஒத்தாசையா இருக்கலாம்முல்ல சமீப காலமாக அவள் பேச்சு இவனுக்கு கோபத்தைத் தவிர வேறெதுவும் தருவதில்லை. கொஞ்ச நாளாவே அவள் பேச்சு முற்றிலுமாக பிடிப்பதில்லை... அம்மாவை... சின்னவன் சத்தமிட்டு அழைத்தான்.
இவன் வயல் பக்கம் வேகமாக நடக்கத் தொடங்கினான். பயிரை காப்பாற்ற ஆற்றிலிருந்த இஞ்சின் வைத்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆற்று மடுவில் தேங்கி கிடக்கும் நீரை இப்படித்தான் கொண்டு வர முடியும். அதிகம் நிலம் உள்ளவர்கள் மட்டுமே இஞ்சின் வைத்திருக்க முடிந்தது. சிறு விவசாயிகள் இத்தனை காலமும் மழையையும், ஆற்று நீரையும் நம்பிதான் சாகுபடி செய்தார்கள். ஆனால் இன்று பருவம் தவறிவிட்டது. மழை காலங்களில், பெய்ய வேண்டிய மழை எங்கே போனது. மனிதர்கள் மழையை விரட்டினார்கள். இந்த பிரதேசம் எங்கும் காடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் இரண்டு பெரும் புயல்கள் அழித்தன... என்றால் மனிதர்கள் அவர்கள் பங்குக்கு வெட்டினார்கள். பெரும் மரங்களை வீழ்த்தினார்கள். அப்பா பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு மழை கால இரவில் இனிமே மழை தண்ணியெல்லாம் சரிபட்டு வராது என்றது இதை தானோ...?
அப்பா தெருமுனையில் இருக்கும் மதகில் அடிக்கடி உட்கார்ந்து வானத்தை பார்ப்பது ... சுருட்டு புகைக்குள் ஒளிந்து போவது... துளிர்விடும் மூங்கில் குருத்தை பார்த்துக் கொண்டிருப்பது... மாட்டின் கழுத்தை வருடி கொடுப்பது... எல்லாம் எதற்காக? என்று நினைத்துக் கொண்டான். சூரியனை பார்த்தாள் வட்டமாய் சுருங்கிக் கொண்டிருந்தது... வரப்பில் நடக்கையில் பொறுக்குகள் குத்தின... நடக்கையில் ஏற்பட்ட அந்த துள்ளல் எதனால்? சூரிய காட்சி ஏற்படுத்திய ஆனந்தமா? இல்லை எதிரே புல் அறுத்துக் கொண்டு வரும் அமுதா ஏற்படுத்திய கிளுகிளுப்பா...?
அமுதா இவனோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். இவனுக்கு அடிக்கடி வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பாள். நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைத்து இருந்தால் இவள் வாழ்க்கை மாறியிருக்கக் கூடும். இவள் அப்பா வேளாங்கன்னிக்கு போனவர் திரும்பி வரவில்லை. தொலைந்து போயிருக்க வேண்டும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். குடும்ப வறுமையை போக்க... அம்மாவோடு வயல் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்னும் இல்வாழ்க்கை குறித்து சிந்தித்து இருக்கவில்லை போலும். இவள் வயசுக்கு இளைய பெண்கள் எல்லாம் திருமணம் முடித்துப் போய் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவள் மட்டும் தன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டிருக்கிறாள்.
இவனோடு கொஞ்சம் கனிவாக பேசுவாள் மற்ற ஆம்பளைகளோடு அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை. இவனோடு சிநேகம் கொள்வதில் அவளுக்கும் விருப்பம் தான் என்பதை பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறாள்.
பெரிய புல் கட்டினை மிக அசாத்தியமாக தூக்கிக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவள் இன்று ... ந்தே... என்றாள்.
இவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கமுடியாத சிரிப்பு... ஹி... ஹி.... ஹி...
பல்லு மட்டும்தான் இளிக்க காத்தருக்கே
வேற என்னச் செய்ய சொல்றே அமுதா...
ம் என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள்.
நிறைய பேச ஆசைதான். போய்க் கொண்டிருக்கிறாளே என்ன செய்ய...? கொஞ்ச நேரம்... நடக்கும் பொழுது அவள் பின்னழகு அசைவதை ரசித்தான்.
சூரியன் மேலும் சுருங்கி சிறுவட்டமாய்... ஒளிர்ந்து கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் மறைந்து விடலாம். கடந்து சென்ற பின்பு அவள் குறித்தான சிலிர்ப்புக்களை மீண்டும் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்ற பிறகு வயல்வெளி மிகுந்த வெக்கையை எழுப்பியது.
இந்த கார்த்திகை மாதத்தை கால் கோடை என்பார்கள். அது எல்லாம் பொய் ஆகி முழு கோடை காலமாய ஆகிவிட்டிருக்கிறது.. பெய்ய வேண்டிய மழை யெல்லாம் எங்கே போயிற்று...? ஒரு மாபெரும் தோட்டம் தொடங்கப்பட்டு விட்டது... நட்ட பயிர் வளராமல்... இட்ட விதை முளைக்காமல்... வயல்வெளி பச்சை நிறத்தை இழந்து... மனிதர்கள் மகசூலை இழந்து... எவ்வளவு காலம் வாழ்வது? மனம் இறுக்கம் அடைந்து வரப்பில் உட்கார்ந்தான். மனம் எழுந்து பின்னோக்கி ஓடியது.
இரவில் தெரு பெரிசுகளும், அப்பாவும் கதை கதையாக சொல்வார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ஊரில் எப்படியெல்லாம் மழை பெய்தது. பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது இடைவிடாத மழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வயல்களில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் வயற்காடு முழுமையும் நீர்பரப்பு சூழ்ந்து கிடக்கிறது. தெருவில் வெள்ளம்... சாலையில் வெள்ளம்... மழை வலுக்கத் தொடங்கினால் மனிதர்கள் எல்லாருக்கும் நடுக்கம் எடுக்கத் தொடங்கி விடும். ஆற்றில் கூடி கரைகளை பலப்படுத்திக் கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பார்கள். காவல் தெய்வம் ஈட்டி மாணிக்கத்துக்கு முக்கால பூசையும், சிறப்பு பூசையும் செய்வார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பது என்பது இங்குள்ள தொன்மையான மரபு. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளம் எடுக்கும் காலங்களில் பறையடித்தே... வெள்ளம் குறைத்தோம்" என்பார்கள். ஆடி மாதம் வரை நீர் வற்றாது குளங்களில் ஊரிலிருக்கும் ஐந்து குளங்களும் வற்றாத ஜீவநதியாகவே கருதினார்கள்.
ஆற்றில் படுகையில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருப்பார்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். படுகையில் நிறைந்திருக்கும் வண்டலில் அப்படியொரு உரம்... வண்டி வண்டியாக வெட்டுவார்கள். வெளியூர் வியாபாரிகள் வந்து மலிவு விலைக்கு வாங்கிப் போவார்கள். இப்பொழுது ஆற்றுப் படுகையில் காரை செடிகளும் கருவையும் வளர்ந்து கிடக்கிறது. மக்கள் அதை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள்.
குறுவைக்கான வேலைகள் வைகாசியிலேயே தொடங்கினால்... ஆடியில் விதையிடல் புரட்டாசியில் அறுவடை... பிறகு சம்பா வேலைத் தொடங்கும்... தையில் அறுவடை தாளடிப் போட்டால் பங்குனியில் அறுவடை... "தாளடி" போட விரும்பாதவர்கள் உளுந்து பயிறு விதைப்பார்கள். இப்படியான தொடர் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரையில் தான் ஊர் கோவில் திருவிழா இந்த ஒரு மாதம் மட்டும் தான்... கூத்து கும்மாளம்... ஓய்வு என்றும் கழியும்... மற்ற நாட்கள் இடைவிடாத உழைப்பு....
சூரியன் மறைந்து விட்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் நிரம்பியது. பூச்சிகள் ஓசை காற்றில் கலந்தது. வானத்தைப் பார்த்தான் நிலவு கிழக்கே தெரிந்தது. பௌர்ணமி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இன்று நிச்சயம் முழு நிலவு வரும்.
பனைமரங்கள் பெரிய வாய்க்கால் கரையில் வரிசையாய் ஒழுங்கு குறையாமல் நிற்பது இவனுக்கு பிடிக்கும். காற்றில் லேசாக தலையை ஆட்டின. வயல்வெளிகளை பார்த்தான்... பச்சை நிறம் மங்கிய நிறத்தில் பழுப்பு நிறம்... படர்ந்து கொண்டிருந்தது. பயிர்கள் மிகுந்த துயரத்தோடு கதறிக் கொண்டிருப்பது போல தோன்றியது. மனசு வலிக்கத் தொடங்கியது. வரப்பிலிருந்து வயலில் இறங்கினான். பாளம் பாளமாய் வெடித்து பொறுக்குகள்.. உடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டே நாள் இது நீடிக்குமானால் சாம்பல் தான் மிஞ்சும் தங்களுடைய ஆறு "மா"வும்... கருகிவிடதான் காத்திருக்கிறதா? இது நாள்வரை வசதியானவர்கள் ஆற்றிலிருந்து நீர்க் கொண்டு வருகிறார்கள். நம்ம கதி?
பயிர்கள் மிகுந்த கவலையோடு வானத்தைப் பார்த்து நீயாவது கருணை செய் வேண்டுவது என்பது போல... தோன்றியது.... கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும் உள்ளேயிருந்து கதிர் வந்துவிடும். கதிர் விடும் பக்குவத்தோடு நிற்கிறது.
நடக்கத் தொடங்கினான் வயலுக்கு வரும் கண்ணியின் கரையில் நடந்தான். அது பெரிய வாக்காலில் கலந்தது. அதிலிருந்து பிரிந்து தான்... வயலுக்கு பாய்ச்சல். இதுதான் இந்த பக்கத்துல வயல்களுக்கு பாசன கண்ணி. பெரிய வாய்க்கால் வற்றி ஈரம் உலர்ந்து விட்டது... தலைக்கு மேலேயிருந்து ஏதோ ஒலி கேட்டதும் வானத்தைப் பார்த்தான். மடையான்மகள் அணிவகுத்து பறந்தன. பெரிய வாக்காலிலிருந்து பிரியும் இன்னொரு கண்ணி" பெரிய குளத்துக்கு நீர் விடவும். அதில் வழியில் இருக்கும் வயல்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது. இப்போது அவன் பெரிய குளத்துக்கு போகும் கன்னிக்கரையில் நடந்தான். குளத்தை மூன்று பக்கமும் சுற்றி நீண்ட திடல்... அதை சூழ்ந்துள்ள மரங்கள்.... மரத்தில் இரவை கழிக்க கொக்குகளும், மடையான்களும் உட்கார்ந்திருந்தன. ஒரு கொன்னை மரத்தில் கொக்குகள் அடர்த்தியாய் உட்கார்ந்து இருப்பது ஒரு விதமான லகிரியை ஏற்படுத்துகிறது. குளத்தினை பார்த்தான். சலனம் அடையாள நீர்பரப்பு. அல்லி செடிகள் படர்ந்து கிடக்கின்றன. அல்லி பூக்கள் இரவில்தான் பூக்கும் என்பார்கள். விண்மீன் ஒளியில் தாளைகள் மலரும் என்றும் சொல்வார்கள். வெய்யிலில் உலர்ந்திருந்த பூக்கள்... லேசாக இதழ் விரிக்கத் தொடங்கியிருந்து, கண்ணி குளத்தோடு நிறையும் இடத்தில் ஒதியன் மரம் நின்றது. இலைகள் உதிர்ந்து வெறும் உடம்பாய் காட்சியளித்தது.
மரத்தை பார்த்த அடுத்த கணமே சட்டென்று அவனுக்குள் வெளிச்ச புள்ளிகள் மின்னின. மீண்டும் ஒரு தடவை பார்த்தான். வேகமாக நடக்கத் தொடங்கினான். இருட்டு பூசினாற் போலிருந்தது. நிலவு கிழக்கில் லேசான வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. பூசினாற் போலிருந்த இருட்டில் வெளிச்சம் குறைவான நிலவின் ஒளி இணையும் போது ஒரு விதமான மங்கிய ஒளியும் அல்லாத இருட்டும் அல்லாத ஒரு விதமான வெளிச்சம் நிரம்பியது.
ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி வந்து விட்டது. ஏழெட்டு மாடுகள் பலியாகிவிட்டது. இருக்கின்ற மாட்டை காப்பாற்ற வேண்டும். மாடுகளை சிவன்கோவில் குளத்தில் வண்டல் கும்பியல் நிறுத்தியிருக்கிறார்கள். கால்களில் புண்களாகி அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஆடுகள் இந்த நோய் கண்ட அடுத்த மணி நேரத்துக்குள்ளே உயிரோடு கறிகடைக்காரனிடம் வந்து விட வேண்டும். இது போன்ற மாதத்தில் நோய் வருவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் போட்டிருந்தால் தடுத்து இருக்கலாம்.
தென்னந்தோப்பில் நுழைந்தான். நீர் பற்றாக்குறையால் மரங்கள் காய்ந்து வதங்கியிருக்கிறது. தேங்காய் மகசூல் மொத்தமும் காலி. ஆசையாக அம்மா போட்டிருந்த டிசம்பர் பூக்கள் செடிகள் இனி பூக்காமல் போகலாம். ஏற்றம் இறைக்க தேவையான மிதி மரம், பாலாடை மரம், சால், ஏற்ற மரம் போன்றவை. மூங்கில் கொட்டகையில் இருக்கிறது. அப்பா கொண்டு வந்து இங்க வைத்திருக்கிறார். இவையனைத்தையும் மிக சிரமத்தோடு,
இரண்டு தோளிலும் மிகுந்த நுட்பத்தோடு தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்... நிலவு அடர்த்தியான வெளிச்சத்தை பரப்பத் தொடங்கியது. அந்த பெரிய குளத்து ஒதியன் மரத்தில் இவற்றை பொருத்துவதற்கு கயிறு வேண்டும். கைக்கு ஒரு அரிவாள்... மண் எடுத்துப் போட மண்வெட்டி, இதைவிட வயிற்றுக்கு கொஞ்சம் சோறு....? குளத்தில் மரத்துக்கு கீழே போட்டான். நிலவு நிர்மல்யமான முறையில் ஒளிர்ந்தது.
மணி ஒன்பதாகியிருந்தது, கார குழம்பு வைத்திருந்தாள் அம்மா. சாப்பிட பிடிக்கவில்லை. கவனம் முழுவதும் சாப்பாட்டிலிருந்து சிதைந்திருந்தது. சமயலறையில் கிடந்த அரிவாளை எடுத்து கொல்லைப்புறத்தில் போட்டான். ஒரு முடித்துக் கயிறு மாட்டு கொட்டகையில் சொருகியிருந்தது.
அப்பா திண்ணையில் பேசிக் கொண்டிருக்கிறார். முகம் அதிகமான சோர்விலும், கவலையிலும் வாடியிருந்தன. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எந்த வருஷமும் சாகுபடியை நம்பி பயனில்லை. அம்மா கதவு ஓரத்தில் எதிர் வார்த்தை செய்கிறாள். வேற என்னதான் செய்யுறது.
வித்துப்புடலாம்...?
ஆமா ரோட்டோரமா இருந்தாலாவது மனை போடுறவங்க யாராவது வாங்கிட்டு பேயிடுவாங்க தண்ணியும் பாயுமா? வெள்ளமும் வழியுமா? இருக்கிற நிலத்தை யாரு வாங்குவா சொல்லு?
அப்பா மேலும் பேச விரும்பாமல் அமைதியானார். வெற்றிலை பொட்டலத்தை அப்பாவிடம் நீட்டினாள்.
இவற்றையெல்லாம் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்... சின்னவன் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தான்.
கயிறு, அரிவாள், மண்வெட்டியோடு பெரியகுளம் நோக்கி நடந்தான்.
அப்பாவும் அம்மாவும் மேலும் பேசத் தொடங்கினார்கள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருப்பது தவிர வேறு என்னதான் செய்வது.
முப்போகம் வெளைஞ்ச பூமி தரிசா போய்கிட்டு இருக்கிறதை நினைச்சா வயிறு எரியுது.
"என்ன பண்றது"
"யார்கிட்டேயாவது இஞ்சின் கேட்டிருக்கீங்களா"
"ம், கேட்காத ஆளில்லை. நாளைக்கு இன்னிக்கின்னு சொல்வாங்களே தவிர ஒருத்தரும் தரமாட்டேங்கறாங்க.
"ஒரு நாலு மணிநேரம் ஓடுனாப் போதும் கதிர் வந்துடும்."
"ஆமாண்டி... உயிர் இருந்தா போருமுன்னு நினைக்கிறேன். கதிர்பத்தி பேசுறே... கோபம் வந்தது அப்பாவுக்கு.
அம்மா பெரிய மகனைப் பற்றி குறைச் சொல்லத் தொடங்கினாள். சொல்லி முடித்த பிறகு... ஊர் கதைகள் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இடைவிடாது தொடர்ந்து பேசினார்கள். நீண்டு கொண்டே போயிற்று பேச்சு. சின்னவன் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு... படுத்துவிட்டான்.
"நேரமாயிடுச்சு" படுப்போம் என்றார் அப்பா.
"சீக்கிரம் எழுந்திருக்கனும் அம்மா சொல்லியபடி பாயி" - ல் சாய்ந்தாள்.
காலை விடிந்து விட்டிருந்தது. சின்னவன் எழுந்தான். அண்ணனை காணோம். திண்ணைக்கு வந்தான். அப்பாவும் அம்மாவும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். அம்மா என்று சத்தமிட்டான். அப்பாவும் அம்மாவும் துடித்து பிடித்து எழுந்தார்கள். அப்பா முகத்தை கழுவிக் கொண்டு வயல் பக்கம் நடந்தார்.
அம்மா பெரியவன் எங்கே காணோம் என்று சின்னவனிடம் கேட்டாள் தெரியல என்று கையை விரித்தான்.
அப்பா வரப்பில் நடந்து... தன் வயலின் தலைமேடு பக்கம் வந்தபோது காலை நேரத்து குளிர்ந்த காற்றில் மண் மனம் நாசியை தாக்கியது.
அப்பாவுக்குள் ஏதோ ஒளிர்ந்தது. திடீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. வயல்வெளியில் நிறைந்திருந்த குளிர் தன்மை நீர்வரத்தினை உணர்த்தியது. வயலில் இறங்கி பார்த்தவருக்குள் இன்ப அதிர்ச்சி... கண்ணியில் நீர் ஓடிவரும் சப்தம். காலை நேரத்தில் தவளைகள் சத்தமிட்டன. மகிழ்ச்சி பெருக்கெடுக்க... நீர் கண்ட ஆனந்தம்! கண்ணியை நோட்டமிட்டவர் எதேச்சையாக வடக்கே திரும்பினார். பெரிய குளத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருப்பது யார்?
நம்ப முடியவில்லை... பெரியவனே தான்... நிலத்தைப் போலவே அப்பாவுக்கும் "கண்கள் ஈரமாகியது".

சிறுகதைகள்


கல்யாணச் சோறு

விஷேசத்திற்கு முந்தின நாளே அந்த வீட்டில் ஒலிபெருக்கியின் சத்தம் ஒலித்தது. மாலை நேரமாகையால் சோகப்பாடலை போட்டிருந்தார்கள். தூங்கப்போன மூர்த்திக்கு "பேன்" காற்று வீசியதுபோல் இதமாயிருந்தது. "என்ன இனிமையான குரல் வளம்; அதற்கேற்ற இசை மெட்டு". "அம்மா ஊருக்குள்ளே என்ன விஷேசம். ரேடியாப் படிக்கிது".
"டேலே, ஊர்ப்பய புள்ளையெல்லாம் எலும்புக் கறியும், சோத்துக்கும் ஏமாந்து போயி எப்ப பந்தி வப்பானுகண்ணு ஏங்கிப் போய்க் கிடக்குது. ஊரே அந்தச்சாமி வீட்டுக் கல்யாணத்தப்பத்திதான். இந்த ஒரு மாசமா பேசிக்கிட்டிருக்கு. படிச்சும் வௌரம் தெரியாத மாதிரி பேசுறியே. நாளைக்கு காலைல கல்யாணம். ஆத்திலேயே குளிச்சிட்டு வந்திரு. எல்லாரும் கல்யாணத்திற்கு போயிட்டு வந்துருவம்".
"ஏம்மா இந்தக் காலத்திலே போயி, சாமி வீடு சும்மா வீடுன்னு. அவுகளும் நம்மள மாதிரி மனுஷதானம்மா. அவுக மட்டும் எப்படி சாமி ஆவாக".
"நீ எப்பவுமே தலைகீழாத்தாண்டா பேசுவே".
"அப்புறம் என்னம்மா. நம்ம மட்டும் கல்யாணத்துக்குப் போயி சாப்புட்டு வர்றோமே, அவங்க என்னிக்காவது வந்து, நம்ம வீட்டுக் கல்யாணத்திலே சாப்பிட்டுருக்காகளா. நம்ம மட்டும் போயி அங்க சாப்பிடணும். கிடக்கிற வேலையெல்லாம் நம்ம வூட்டு வேலை மாதிரி இழுத்துப் போட்டுச் செய்யணும். அவங்க மட்டும் காசு கொடுத்து, கலர் குடித்துவிட்டு, வெத்தலை, பாக்குகூடப் போடாமல் போயிறாங்க! நம்ம மேல நெசமாவே பாசம் இருந்தா பந்தியிலே வந்து சாப்பிடலாம்ல. எல்லாமே நடிப்பும்மா. அவனவன் இந்த ரேஞ்சோட இருந்துக்கிறான். நாம் தான் நாய் மாதிரி அவன் வாசப்படியிலேயே இன்னும் போய்கெடக்கிறோம்.
"உனக்கு என்னடா விவரம் தெரியாத பய. அந்தக் காலத்திலே அவுகளெல்லாம் எப்பிடி இருந்தாக தெரியுமா. கல்யாணப் பொண்ணையே வருஷக் கணக்காப் பார்க்க முடியாது. அவுகளும் பார்க்கவிடமாட்டாக. அவுங்க வூட்ல எல்லாம் நிறைஞ்சு கிடக்கும். அவ்வளவு வசதி அவுங்களுக்குன்னு தனியா எடம் ஒதுக்கி, எல்லா வசதியும் செஞ்சவச்சிருக்காங்க பாத்தியா. அந்தக் காலம் தொட்டு இப்ப வரைக்கும் அவங்க வச்சது தான் வேதமா இருக்கு. இப்பவும் பார்த்தியா ஏதாவது ஒண்ணுனா நானூறு வீடு இருக்கிற நம்மலெல்லாம் அந்த நாலு வீட்டுக்காரனத்தானே தேடிப்போறோம்".
"அம்மா அந்த நாலு வீட்டுக்காரனைத் தேடிப்போனது நம்ம தப்பு. நம்ம நானூறு வீட்ல இல்லாத கூட்டு அந்த நாலு வீட்ல இருக்கு. அப்பவே வசதியாயிருந்தாங்கன்னு சொல்றியே. நீங்க கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும். அவன் அப்பவே விவரமா இருந்து, நம்மளத் தொட்டா தோஷம்ன்னு சொல்லி, தனியாய்ப் போயி அவனுக்குத் தேவையானதை செஞ்சுக்கிட்டான். இப்ப அவன் நல்லாயிருக்காண்ணா இருக்கத்தான் செய்வான். தலையை விட்டுபுட்டு வாலைப் புடிச்சா வழுக்கத்தான் செய்யும்."
"அடப்போடா நீயும், உம் பேச்சும். அவங்க என்னமோ நம்ம வூட்ல சாப்புடலேங்கிறியே சாப்புடாட்டா போயிட்டுப் போறாக. அவுங்க வந்துட்டுப் போனா நம்ம வீட்டுக்கு ஒரு மரியாதைடா. உனக்கு அதெல்லாம் எங்க புரியப்போகுது".
"எதும்மா மரியாதைங்கிற. சாப்பிடாமப்போனா போயிட்டுப் போறாகங்கிறியே. கல்யாணம்னா என்னம்மா. அதுக்கு எதுக்குமா நாலுபேர் நாலு திசையிலிருந்து வர்றாக.
வாழ்த்துறதுக்குத்தானே. வர்றவகள உபசரிக்கிறது தாம்மா கல்யாணம். அவுங்க நல்லா சாப்புட்றாங்க பாரு அதுதான் திருப்தி. அத விட்டுட்டு, வருவாங்களாம். மொய் செய்வாங்களாம். உட்காரக்கூட செய்யாம போயிருவாகளாம். இதுக்கு எதுக்கு வரணும்".
"உனக்கு என்னடா என்னயென்னத்தையோ பேசுற. போயி பேசாமத் தூங்கு" என்று கோபமாய்ச் சொன்னாள்.
"நமக்குன்னு சுய மரியாதை கூட வேணாமா" ன்னு அண்ணனிடம் கூடக் கேட்டுப் பார்த்திட்டான்.
"நமக்குன்னு என்ன சுயமரியாதை வேண்டிக் கெடக்குது. நம்ம என்னதான் கூட்டமாயிருந்தாலும் அவனுக்கு இருக்கும் அடிமையாக்குற புத்தி நமக்கு இருக்காதுடா. நம்ம பயலுகளெல்லாம் முரட்டுக்காரங்க. எல்லாம் நாலு காசப் பாத்துட்டா கறித்துண்டமுனு சோயா மாவதின்னுற பயலுக. நம்ம சாதி எப்பவும் அடிமைதாண்டா. சாதிங்கறது அழிக்க முடியாத ஒண்ணா ஆகிப்போச்சு. உன்னாலேயோ என்னாலயோ மட்டும் அழிக்க முடியுமா? ஆனா, அது அதுக்குன்னு ஒரு நெறிமுறை வச்சுக்கணும். அவனவன் மனசாட்சிதான்டா அவனவன் ஜாதி".
முன்னாடி ஒருமுறை சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.
பாயை விரித்துப் படுத்தான்.
ராத்திரியில் பாதி நேரம் வரை தூங்காததால், காலை நேரத்தில் தூக்கம் அசத்தியது. அப்படியே தூங்கிப் போனான். கண் திறந்தபோது,
சாமி வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் விட்டு, வீடு திரும்பியிருந்தாள் அவன் அம்மா.
"என்னம்மா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து பழைய சோத்தை ஊத்திச் சாப்பிடுறே" சிரித்துக் கொண்டே கேட்டான்.
"அதுக்கு என்னடா இப்போ. சாமி வீட்டுச் சொந்தக்காரங்க எவ்வளவு பேரு வந்திருக்காங்க. அவங்களெல்லாம் முதல்ல சாப்புடட்டும். நம்ம போயி அவங்க மத்தியிலே சகுணம் புடிச்சாப்ல உக்கார முடியுமா. நாளைக்குப் போனா ஏதோ பழக பட்டை கெடந்தா ஊத்துவாக. சாவகாசமா உக்காந்து சாப்புட்டு வரலாம்" - சொல்லிக் கொண்டிருந்தவள், வீட்டிற்குள் நுழையும் இளைய மகன் பாண்டியைப் பார்த்து "என்னடாக் கண்ணு" என்றாள்.
"அம்மா நீ வந்தப்புறம் அங்க நடந்துச்சுல்ல பந்தி அதிலே சாப்பிடப்போனேம்மா. அப்போ அந்தச் சாமிவுக வந்து என்னைய எந்திரிக்கச் சொல்லி, போகச் சொல்லிட்டாரும்மா. ஆட்டுக்கறி ஒண்ணுகூட திங்கலமா". ஒழுகிய ஊழை மூக்கை "ம்ஹ்" என்ற உறிஞ்சிக் கொண்ட வண்ணம் ஏங்கி ஏங்கி அழுதான்.

சிறுகதைகள்


மர்ம வெளி

நண்பர் ஒருவர் கூறியதன் பொருட்டு அந்த மிகப் பாழடைந்த மண்டபத்தினைக் காணும் ஆவல் ஏற்பட்டது. பழைய மன்னர்கள் காலத்து அரண்மனை அல்லது பழைய மன்னர்கள் குடியிருந்த வீடு எனக் கூறலாம்.
தஞ்சாவூர்ல உள்ள மக்கள் வரலாறு குறித்த பல விஷயங்களை வாய்மொழிச் செய்தியாக அவ்வப்போது கூறிச் செல்கின்றனர். இது அவர்களின் இயல்பான வாழ்வுடன் ஒன்றியதொரு விஷயமாக உள்ளது. மேலும் வரலாற்றுச் கால எச்சங்கள் தஞ்சாவூரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், இப்பகுதியெங்கும் காணப்படுகின்றன. கோயில்கள், அரண்மனைகள், குளங்கள், மண்டபங்கள், இப்படி பல வரலாற்றுக் கால எச்சங்கள் காணப்படுகின்றன.
அப்படியொரு எச்சம்தான் அந்த பாழடைந்த மண்டபம். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் அந்த மண்டபம் உள்ளது.
அந்த மண்டபத்தில் புதையல் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆவிகள் உலவுகின்றன என கூறுகின்றனர். பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அந்த மண்டபம் யாராலும் தீண்டப்படாமல் கைவிடப்பட்ட சொந்தம் கொண்டாடப்படாமல் அமானுஷ்யத்தைச் சுமந்த வண்ணம் மர்மம் நிறைந்ததாக, இழப்பை ஆடை நழுவிப்போய் உலகுக்கு காட்டிய வண்ணம் நின்று கொண்டிருந்தது.
நான் அந்த மண்டபத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வங்கொண்டிருந்தேன். வரலாறு என்னுள் ஒரு தீய ஆவிபோல் இறங்கி பிடித்தாட்டுகிறது. அதனாலேயே நான் அங்கு செல்ல தீர்மானித்தேன்.
திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே ஒரு கிராமம் உள்ளது. அதன் பெயர் செந்தலை. தேனைத் தலைநகரமாகக் கொண்டு களப்பிரர்கள் ஆண்டதாக நான் படித்திருக்கிறேன். பல்லவர்களுக்கும் பிந்தய காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் எனக் கொள்ளலாம். முத்தரையர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டதாகவும் நான் படித்திருக்கிறேன். திருக்காட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு கணக்கர் சோழர் காலத்தில் தவறிழைத்ததற்காக தண்டிக்கப்பட்ட வரலாறும் நான் அறிவேன். அது காவிரியாறு பாய்ந்து செல்லும் வளமான பகுதி. எங்கும் பசுமையான வயல்கள்தான் காணப்படும்.
திருக்காட்டுப்பள்ளிக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் பூண்டி மாதா திருத்தலம் உள்ளது. அங்கு கிறிஸ்தவ மத பாதிரியார்கள் கி.பி.1700களில் சமயப் பணி ஆற்றியுள்ளனர். வீரமாமுனிவர் அங்கு ஒரு ஆலயம் கட்டியதாக வரலாறு உள்ளது.
கருங்கற்களாலும் மண்ணாலும் செங்கலாலும் கட்டி இடித்துபோன சிதிலமானதொரு பெரிய நிலப்பரப்பிலான மண்டபம் அது. வீழ்ந்துபோய் கிடந்தது. வீழ்ச்கியடைந்த ஒரு சாம்ராஜ்யத்தின் எச்சம்போல் காணப்பட்டது. இம்மண்டபத்தின் வீழ்ச்சி ஒரு அரசின் வீழ்ச்சியாகலாம் அல்லது ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியாகலாம் அல்லது ஒரு தனி மனிதனின் வீழ்ச்சியாகலாம். பல்லாயிரக் கணக்கான மக்களின் வீழ்ச்சிதானே வரலாறு என்பது!
இக்கட்டிடம் யாருடையது? யாருடைய காலத்தினது? ஏன் வீழ்ச்சி அடைந்தது? கறுப்படைந்த கவர்களில், மழையால் பாசி பிடித்து கிடந்தது. இரவு நேரங்களில் கூக்குரல்கள் இக்கட்டிடத்திலிருந்து எழும்புவதாக கூறுகின்றனர். ஆவிகள் எழும்புவதாக கூறுகின்றனர். ஆவிகள் எழுப்பும் ஓலம், பகலில் அமானுஷ்யத்தை போர்த்தியது. பழமையானது சற்று அச்சமூட்டுவதாகவே உள்ளது.
நாங்கள் உள்ளே சென்றோம். கிராமத்தின் முக்கியஸ்தர்களிடம் விஷயத்தைக் கூறியிருந்தோம். சிலர் வெளியே மர நிழலில் நின்றிருந்தனர். உடைந்துபோன சுவர்கள், மரத்துண்டுகள், கற்குவியல்கள் எனக் கிடந்தது. சில உயிரினங்கள் அங்கு குடிகொண்டிருந்தன. பாம்புகள் இருக்கக்கூடும். சிலந்தி வலை பின்னிக் கிடந்தது தூசி படிந்து இருந்தது. எங்களின் இருப்பு எங்களுக்கே அச்சமூட்டுவதாக இருந்தது.
மண்டபத்தின் உட்பிரிவுகளுக்காக தடயங்கள் ஏதுமின்றி சிதிலமாகிக் கிடந்தது. ஒரே ஒரு அறை இருந்ததற்கான சுவர்கள் தெரிந்தன. கருங்கள் சுவர்கள், சுவர் உடைந்து போயிருந்தது. அந்த அறையின் மூலையில் ஒரு பெட்டி இருந்தது. அது ஒரு இரும்புப் பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. துருப்பிடித்திருந்தன பெட்டியும் பூட்டும். பெட்டியை வெளியே எடுத்தோம். பலரும் அது புதையலாக இருக்கக்கூடும் எனக் கருதினர்.
ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அது உடைக்கப்பட்டது. தொல்லியல் துறைக்கும் சொல்லப்பட்டு ஒரு சிலர் வந்திருந்தனர். பெட்டியில் அனைவரும் ஏமாந்து போகும் படி அங்கு புதையலோ, வேறு ஏதுமோ இல்லாமலிருந்தது. ஆனால் ஒரு துணியால் கட்டி மூடப்பட்ட ஒன்றைக் கண்டோம். பட்டுத் துணி இற்றுப் போயிருந்தது. அதனுள் இருந்தவை பல ஓவியங்கள். பாதி அரிக்கப்பட்டும் வண்ணமிழந்தும் உள்ள நிறைய ஓவியங்கள் பல இருத்தன. இயற்கைக் காட்சி, பெண், முதியோ‘, வீடு, கட்டிடங்கள் இப்படி பல. யாவும் அக்கால தூரிகைளில் தீட்டப்பட்டிருந்தன. அவை பாய்க்குச்சி போன்றவைகளால் ஆனதாக இருந்தன.

தொல்லியல் துறையின் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இவற்றைக் காண்பிக்க வேண்டும். பின்பு அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றனர். ஊர் முக்கியஸ்தர்கள் ஊரில்தான் வைக்க வேண்டும் என்றனர். அவ்வோவியங்கள் புதையல் பற்றி குறிப்புகளைக் கொண்டுள்ளன என கருதியது தான் அதன் காரணம்.

எனக்கு இவ்வோவியங்கள் உணர்த்தும் ஏதோ ஒன்று உள்ளது எனப்பட்டது. நிச்சயமாய் புதையல் இருக்காது என மனதில் பட்டது. ஒரு தேர்ந்த கலைஞனின் கைவண்ணம் அவற்றில் தெரிகிறது. யார் அந்த ஓவியன்? அவன் யாரை, எதை வரைந்தான்? ஏன் அதை வரைந்தான்?

மேலும் அம்மண்டபத்தில் இதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை உணர்த்தும் பொருட்கள் இருக்கக்கூடும் எனப்பட்டது. மீண்டும் அம்மண்டபத்திற்குள் என் நண்பருடன் செல்ல எண்ணினேன். பிறர் வீண் காரியம் என ஒதுங்கிக் கொண்டனர். ஊரார் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். ஓவியங்களைத் தொல்பொருள் துறையினர் எடுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் அது பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள அல்லது ஆராய ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தேன்.

நண்பரும், நானும் மீண்டும் உள்ளே சென்றோம். கற்குவியல்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம். சில இடங்களைத் தோண்டியும் பா‘த்தோம். அப்படி தோண்டிய போது, அந்த இரும்புப் பெட்டிக்கு அருகில் அதாவது அந்த இரும்புப் பெட்டி வைக்கப்பட்ட அறையின் சுவருக்கு அருகில் சில எலும்புகள் கிடந்தன. நிச்சயமாக சொல்ல முடியும் அவை மனித எலும்புகள். நான் பயந்து போனேன். அதிர்ச்சியும் அடைந்தோம். மனித எலும்புக் கூடு, கற்குவியலுக்கு அடியே! இது மண்டபம் அல்லது பெரிய வீடு. இங்கு எப்படி மனித எலும்புகள். வீட்டிற்குள் யாரையும் புதைக்க மாட்டார்கள்!
பொதுவாக, இந்தப் பகுதியில் வாழ்ந்த மூதாதையர்கள் பிணங்களை எரிக்கக் கூடியவர்கள். எப்படிப் புதைத்தனர்? உண்மையில் இந்த மண்டபத்தில் மர்மம் இருப்பதாக எனக்குப்பட்டது. எலும்புகள் பற்றி தொல்லியல் துறையில் கூறினோம். அவர்கள் வேறு சில நிபுணர்களுடன் வந்தனா. கற்குவியல்களை முழுவதுமாக தோண்டி எடுத்தனர். மனித எலும்புக் கூட்டின் பல பகுதிகள் கிடைத்தன. ஒற்றை எலும்புக் கூடு. அதுவும் ஆண் எலும்புக்கூடு என பின்பு ஆய்வு செய்து கூறினர். மேலும் சாதாரண மரணமல்ல என்றும் இயற்கையான அடக்கமல்ல எனவும் கூறினர்.
தடயவியல் நிபுணர்களின் உதவி கொண்டு எலும்புகளைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கும் என முற்றிலும் நம்பினேன். மருத்துகக் கல்லூரியின் பாரன்சிக் துறையில் வேலை பார்ப்பவர் எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கியுள்ளார். அவரை அழைத்து வந்து காண்பித்தோம். சில நாள்கள் ஆராய்சி செய்தார். அவர் கூறிய விசயங்கள்
துர் மரணம் சம்பவித்திருக்கிறது. கல்லெறியப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கற் குவியல்களுக்கிடையே புதைக்கப்பட்டு இறந்திருக்கலாம். அதற்கு முன்பு இறந்துபோன ஆணினுடைய கை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. இறந்தபோது ஏறக்குறைய முப்பது வயதிருக்கலாம். மேலும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்திருக்கக் கூடும்.
உடனே சில விசயங்கள் பிடிபட்டன. இறந்தவன் ஒரு ஒவியன். அவனது ஒவியத்திற்கு எதிரிகள் அல்லது அவனது ஓவியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் ஓவியம் வரையும் கை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அவனது ஓவியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவனைக் கொன்றிருக்கக் கூடும். இது சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள், அதற்கு முந்திய காலங்களில் நடந்திருக்கக்கூடும். அவற்றின் இறுதியான முடிவுதான் இந்த மரணம். அந்த ஓவியங்களை மீண்டும் ஆராய வேண்டுமெனத் தோன்றியது.

காலம் ஏறக்குறைய 1700களின் முற்பகுதி அல்லது 1600களின் பிற்பகுதி. தஞ்சையில் மராட்டியர்களின் 1600களின் பிற்பகுதி. தஞ்சையில் மராட்டியர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கும்பினியாரின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருந்த காலம். தமிழகத்தில் வெள்ளைக்கார கிறித்துவ துறவிகள் சமயப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அவர்கள் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூக, சமயப் பணியாற்றியுள்ளனர்.

அப்போதைய காலகட்டத்தில் இத்தனை பெரிய வீட்டில் குடியிருப்பவர்கள் செல்வந்தர்களாக மட்டுமே இருக்க முடியும். அப்போது அரசுத் துறையைச் சார்ந்தவர்கள், இராணுவத் துறையைச் சார்ந்தவர்கள், வியாபாரிகள் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர். அந்தக் குடும்பம் இதில் ஏதேனும் ஓரு பிரிவில் இருந்திருக்க வேண்டும். செல்வமும் கூடவே பிரச்சனைகளும் கூடிய அம்மாளிகையில் வசித்த பெரிய குடும்பத்தினரின் ஒரு வாலிபனின் குரூர மரணம் அது. அவன் மட்டுமே மரணமடைந்திருந்தால் அவனது குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளால் அம்மரணம் ஏற்பட்டிருக்கக் கூடும். மேலும் அக்கால சடங்குகளின்படி எரிக்காமல் கற்குவியல்களுக்கிடையே புதைக்கப்பட்டுள்ளது. ஏன் வீட்டின் பெரியவர்கள் சடங்குகளின்படி எரிக்கவில்லை? அல்லது அதை தடுத்தது எது?
ஒரு வேளை குடும்பமே கூண்டோடு அழிந்ததா? அப்படியெனில் ஒரு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கக் கூடும். அந்த மண்டபமும் இடிந்து போயிருக்கக் கூடும். அச்த மண்டபமும் இடிந்து போயிருக்கக் கூடும். பிறரது எலும்புக் கூடுகள் எங்கே எலும்புகளின் மிச்சங்கள் எங்கே? மீண்டும் அந்த மண்டபத்திற்குச் சென்று ஆராய விரும்பினேன்.
இதற்கிடையே தொல்லியல் துறையின் உதவியுடன் அந்த ஓவியங்களை மீண்டும் ஏதாவது தடயம் கிடைக்குமா என ஆராய்ந்தேன். இயற்கைக் காட்சிகள், அவற்றின் கீழ் சில குறிப்புகள். தமிழ் மொழி படிக்க சிரமமாயிருந்தது தொல்லியல் துறை நண்பர் ஒருவர் அவற்றை படித்துக் காண்பித்தா‘. சில ஓவியங்கள் முடிக்கப்படாமல் இருந்தன. சில ஒவியங்கள் குழப்பமாக கிறுக்கல்கள் நிறைந்ததாக இருந்தன. அது அவன் மனக் குழப்பத்தையே உணர்த்துகிறது என நான் கருதினேன். அவன் ஓவியனாவதற்குத் தேவையான சூழல் ஏன் மாறிப் போனது?
அந்த குழுப்பமாக கிறுக்கல்கள் நிறைந்ததாக இருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் பலவரிகளில் எழுதப்பட்டதாக இருந்தது. தொல்லியல் துறை நண்பர் மிகுந்த சிரமங்களுக்கிடையே படித்துக் கூறியவை:
பாண்டிய நாட்டுடனான போரில் எங்கள் பரம்பரையின் முப்பாட்டனார், நிறைய பாண்டிய நாட்டு போர் வீரர்களைக் கொன்றதற்காக இந்த நிலங்களும், சொத்தும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. இரத்த சம்பாத்தியத்தில்தான் இவ்வுடம்பு வளர்ந்துள்ளது எனநினைக்கையில் மிகுந்த துயரம் கவ்விக் கொள்கிறது. தற்போதுள்ள ஆட்சியில் அனைத்து செல்வாக்கையும் இழந்தாயிற்று. ஊர் மக்கள் அனைவருக்கும் என் மேலும் ஆசாரியர் மேலும் துவேஷமும், குரோதமும் நிறைந்துள்ளது. நானோ பரம்பரை தோறும் துரத்தும் சாபத்திலிருந்து தப்பிக்கவே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
என்னால் சரிவர விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஆனால் இதை எழுதியவன் தான் இறந்தவன். அவனை சாபம் துரத்திப் கொண்டிருந்தது. யாரிந்த ஆசாரியர்? மேலும் ஊர் மக்கள் அனைவருக்கும் அவன் மேல் ஏன் விரோதம்?
ஏதேச்சையாக ஒரு ஓவியத்தை வேறொரு கோணத்தில் பார்த்த போது ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. கூர்ந்து நோக்கிய போது, ஒரு ஆண் ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டிருந்தான். அவளோ மயங்கிப் போய் அவன் மேல் சரிந்து கிடந்தாள். அணைத்துக் கொண்டிருந்த அவன் கைகளில் தெரிந்தது ஒரு சிலுவை. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும் அம்மண்டபத்தில் இதனுடைய சம்பந்தப்பட்ட விஷயங்களை உணர்த்தும் பொருட்கள் இருக்கக்கூடும் எனப்பட்டது. மீண்டும் அம்மண்டபத்திற்குள் என் நண்பருடன் செல்ல எண்ணினேன்.
கற்குவியல்களை முழுவதுமாக தோண்டி எடுத்தோம். எஞ்சிய மனித எலும்புக் கூட்டின் பல பகுதிகள் கிடைத்தன. மீண்டும் மீண்டும் பூமியைத் தோண்டி எடுத்தோம். அங்கே கண்ட காட்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இரும்பாலான துருப்பிடித்த ஒரு சிலுவையை நாங்கள் கண்டோம். சிலுவையுடன் கை விரல் எலும்புகள் கிடந்தன.

No comments:

Post a Comment