Thursday 14 March 2013

Tamil kathai

சிறுகதைகள்


தலை அலங்காரம்

என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்து, நான் செல்லவேண்டிய இடத்தை அடைய பலவிதமான வாகங்களும், கூட நடையுமாக எதனூடாகச் செல்லும்போதும் ஏதாவது ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போதுதான் பதித்த தார் அடைந்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது கடந்து போகிறேன்.
சித்தியை நான் கண்டதே காவி உடையும் முக்காடிட்ட ரவிக்கையற்ற உருவத்துடன்தான். எனக்கு மடாதிபதி எப்போதும் சித்திதான். மற்றவர்கள் சொல்லுவார்கள் சித்தி மிக அழகி என்று. எனக்கு எப்போதும் அப்படித் தோன்றியதே இல்லை. கழுத்து மூடி இழுத்துச் சொருகப்பட்ட ஒரே வண்ணப் புடவையில் எந்த ஓரத்து வழியாகவும் அழகு வெளி வழிந்ததில்லை. மூடியதினுள்ளான அழகு காண என் அறிவுக்கு எட்டவில்லை. உடை, மடம், பூஜை, தன்னலமற்றிருத்தல், இரவுப் பலகாரம், யாரோடும் எதிர்படாதிருத்தல், பெரிய வீட்டில் கூட நடமாட்டம் ஒரு சில அடிகளுக்குள் என்ற சிறு பட்டியல்தான் சித்தியிடம். பசி சொல்லிக் கேட்டதில்லை.
அன்றைய நானின் ஊடாக இன்றைய நானும் எங்கெங்கு கலந்து வருமோ? எங்கும் நிறைந்துவிடுமோ?
மடிப்புடவையின் நிறம் வறுமைக்கானது, மரக்கலர் துக்கத்திற்கானது. துக்கம் வறுமையினால். வறுமை எதனால்? எப்போதும் வாசம் மிகுந்த தின்பண்டக்ஙள சித்தி மடியிலும், துணியிலும், அருகிலும் நிறைந்திருக்கும்.
இரவு படுத்திருக்கும்போதோ குளித்துத் துணி மாற்றும்போதோ சற்றே வளர்ந்த கருமையான தலைமுடி பார்வைக்குப் படும், தார் வண்ணத்தில். சட்டென்று இயல்பாக இழுத்து மூடும் சித்தியின் கை சற்றே பதட்டத்துடன். துணியிலிருந்து வெளி வழிந்து முகம் அடையும் முன்னரே அவை மழிக்கப்பட்டு இருக்கும்.
விடியற்கருக்கலில், வீட்டின் பின்புறம் இருட்டும், முடியும் களையப்பட்டு யாராவது ஒருவர் தலைக்கு நீர் விட்டு, வேறு துணி கொடுத்து வீட்டிற்குள் கூட்டி வருவர். பருவ கால மாற்றம் பாதிக்கப்படாத தொடர் செயல் இது. விஷ ஜந்துக்களுக்கும், செடி, முடிக்கும் தடை நிறைந்த அப்பாதையில் அன்று சித்தி பயணப்பட்டு வருவாள். புடவைக் கலரில் தலையும் மின்னும்.
நிறைய ராஜகுமாரன்கள் வருவார்கள். குமரிகளைக் கொத்திக் கொண்டு செல்வார்கள். குறுக்கே நிற்கும் குண்டோதரக் கல் திறந்து தங்கம் தரும், கிளி பெண் குழந்தை வளர்க்கும், ராட்சசன் நகம் வளர்ப்பான், சின்னப் பெண் கொடுமைப் படுத்தப்படுவாள், பகவான் க்ருபையால் கஷ்டம் நீங்கும், காலுடைந்த குதிரையில் பல தேசங்களையும் கடக்கும் மனிதன் கடக்கடக் கடக் என்ற சப்தத்துடன் தேசம் கடப்பான், உதடு பெருத்த ஆணை விருப்பம் இன்றி மணம் செய்துகொண்ட பெண் பல விதத்திலும் சித்திரவதைக்கு ஆளாவாள், புருஷனை உதடா! உதடா! என்று வெறுப்பேத்துவாள், கடைசியில் செத்து மண்ணாவாள். இப்படி பலப் பல இரவுகள் பகல்கள். தேவைக்கு ஏற்ப இரவோ பகலோ நீளும் அல்லது சுருங்கும், அகலமாகும், பயமுறுத்தும் கண் கசிய வைக்கும். சித்தி மணம் என் மீதும் படியும்.
"என் இருப்பிடத்திலிருந்து
ஏதேதோ பாதைகள்
கடந்தடைய வேண்டியவை
விதவித வாகனங்கள்
கால் நடையாகவும்
ஏதோ ஒரு இடத்தில்
இட்டுப் புதைத்த தார் சாலை
புதைந்து கொண்டிருக்கும்
புழுதி இருபுறமும் மலை என
எழும்பி..."
தார் கொதித்துக் கொண்டிருக்கும். தெருவோரம் மஞ்சள் நெருப்பு சப்தமிட சாக்குச் சுற்றிய காலுடன் தார் எடுத்துக் கோலமிடுவார்கள். தாருடன் கலந்து கல் கொட்டி இழுப்பார்கள். தாருடனும், ரோட்ரோலருடனும் நானும் காய்ந்துவிட்டு அதிசயத்தை அனைவரிடமும் பகிர வேண்டி ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினேன். வழி நெடுக கருங்கற்கள் உப்பி உப்பி ரோடோரம் படுத்திருந்தது. ரோட்டுக்குள் பரப்பக் காத்து இருந்தது.
சித்தி படுத்து விட்டார்; சில நாட்களாயிற்று. தரை பரவி நிமிர்ந்தபடி படுத்துக் கிடக்கும் அவரின் முழு உடலும் வயிறாக உப்பி ஊதி மேடிட்டிருந்தது. நார்மடி, தலையில் தனிந்திருக்கிறது. கருப்புத் தார் பொங்கி வழிகிறது சித்தியின் தலையிலிருந்து, படுக்கையைச் சுற்றி யார் யாரோ வந்து அனேகர் பார்க்கின்றனர். குரலும் வார்த்தையும் மங்காமல், ஏதேனும் தின்ன வாங்கித் தரும்படி எல்லோரிடமும் முறையிடுகிறார் சித்தி. அவரவர் வசதிக்கேற்ப சின்னதாகவோ பெரியதாகவோ உள் நுழைகிறது தின்பண்டங்கள். வெங்காயமும் வேண்டும் பூண்டும் உடன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் சித்தி. வம்பு பேசும் ஊர் என பயந்தாலும் ஏதோ ஒரு சமயம் உள் நுழையும் அவைகளும். நான் உள் நுழைவதில்லை அழைத்தாலும்.
வீடொழிக்கும் போது வேண்டாததை அடைத்து வைக்கும் சாக்கென சித்தி வயிறு பெருக்கிறது. எல்லாவற்றையும் உள் தள்ளிப் புதைக்கும் சித்தி, அருகில் யாரும் வந்து பங்கு கேட்டு விடுவார்களோ என்று அள்ளி அள்ளி அடைத்துக் கொள்ளும் சித்தி, பசியாகவே உருமாறிவிட்டாரோ? படுத்தபடி எல்லா பண்டங்களும் வாய் வழி நுழைந்து வயிறு அடைந்து கல்லாகி விடுகிறது. கற்களால் கட்டப்பட்ட வட்டம் அல்லது கருங்கற்குவியல் என வயிறு இடம் மாறி இடம் மாறி இளைப்பாறுகிறது.
சாலை ஓரத்தில் கருங்கற்கள் வெளியில் வீட்டின் எதிரில், தார் கொதித்துக் கொதிக்கும் மணம். சித்தியின் வயிற்றுக் கற்கள், தலைமுடி, தார், கருப்பு முடிகள், கற்கள், வயிறு, முடி, சித்தி ராஜகுமாரன், நான், சித்தி வாசனை, தின்பண்டம், சித்தியின் துர் நாற்றம், நான்....
தரையின் சிறுசிறு சிமெண்ட் சதுரங்கள் என் முன் பரந்து பெரிதாகி...
சித்தியின் வயிறு என குமிழ் குமிழாய் எழும்பி மேடிட்டு, மேடிட்டு அறை முழுதும்.
மதியம் அப்படியே உறங்கிப் போனேன். எழும்போது தார் வாசனையும், தலைவலியுமாய் நான். முதல் பகல் தூக்கம், முதல் தார் வாசனை, முதல் தலைவலி.
என் இருப்பிடத்திலிருந்து எதேதோ பாதைகளைக் கடந்து நான் அடையவேண்டிய இடத்தை அடைய பல விதமான வாகனங்களும், கூட நடையுமாக. எதனூடாகச் செல்லும் போதும், ஏதோ ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போது தான் தார் அடைத்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது நான் கடந்து போகிறேன். தார் மணமும், தலைவலியும், வயிறுமாக.

-----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------

சிறுகதைகள்


கிளிகளின் திசை

அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நான் அடம்பிடிக்கத் தொடங்கினேன். அத்தை எனக்குள் வசீகரமாய் இருந்தாள். ஆனாலும் அதை ஒரு திட்டமிடலோடு செய்ய வேண்டியிருந்தது. உயரமான, பெரிய விழிகளோடு பெண்களின் அழகுகளாக வர்ணிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலை கொண்டவள். எங்களுக்கும் அத்தை வீட்டுக்கும் உறவு அறுந்துபோயிருந்தது. அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. அப்பாவைவிட நான்கு வயது மூத்தவள்... நான்கே நாள் பழக்கத்தில் ஒரு ஆணோடு ஓடிப்போனவள்........ தகுதியற்ற சேர்மானத்தை கொண்டிருந்தவள் என்ற காரணமே போதுமானதாக இருந்தது அப்பாவுக்கு அப்போது 18 வயது..... தகப்பனற்ற வீட்டில்... இப்படியொரு சம்பவம் நடந்ததால் அதை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது அப்பாவுக்கு... அதிலிருந்து அப்பா இந்த உறவை வேண்டாம் என்று முற்றிலுமாக புறக்கணித்து இருந்தார். அப்பாவுக்கு திருமணம் நடந்தபோத கூட அத்தைக்கு அழைப்பில்லை. அதன் பிறகு அக்கா பிறந்தாள். பிறகு நான் பிறந்தேன். அதுவரைக்கும் அத்தை எங்கள் ஊர்ப்பக்கம் வரவில்லை.

எனக்கு 10 வயது இருக்கும்போது எங்கள் ஊர் சீனிவாசன் அத்தையை டவுனில் பார்த்து பேசி இருக்கிறார். அடுத்த மாதமே தன் வீட்டில் நடக்கும் காதணி விழாவுக்கு அத்தைக்கு பத்திரிகை வைத்தார். அந்த வீட்டிற்கு வந்த அத்தை என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். அத்தையின் கண்களிருந்து நீர் வடிந்தது. குழுமியிருந்த பெண்கள் எல்லாம் என்னிடம் "உங்க அத்தைடா" என்று சுட்டினார்கள். அத்தை அழுததற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை. அத்தை என் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டாள். அப்போது அம்மா என்னைப் பார்த்து கோபப்பட்டதை அம்மாவின் கண்கில் தெரிந்த "அனல்" உணர்த்தியது.. அதற்கு பிறகு ஊரிலிருப்பவர்கள் அத்தைக்கு மறக்காமல் அழைப்பு விடுத்தார்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு. அப்போது எல்லாம் அக்காவுக்கும் எனக்கும் தின்னுவதற்கு என்று ஏதாவது வாங்கி வந்திருப்பாள். அம்மா பேச்சைக்கேட்டு அக்கா அந்த தின்பண்டங்களை புறக்கணித்தாள் என்றாலும், நான் அவற்றை தின்றுவிடுவேன். இப்படியாக தொடர்ச்சியாக வந்தபொழுதெல்லாம் அம்மா கூட அவளிடம் பேசவில்லை. அத்தை பற்றிய பேச்சுக்களை முற்றிலுமாக அம்மா தவிர்த்தே வந்தாள். அத்தை பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் மிகவும் விவரிக்க முடியாத பெருந்துயரத்தை கொண்டதாகவே தோன்றியது.

இதற்கிடையில் பத்து ஆண்டுகள் அத்தை எங்கள் ஊருக்கு எந்த விஷேங்களுக்கும் வரவில்லை. ஊரிலிருப்பவர்கள் மறக்காமல் அவளுக்க அழைப்பு அனுப்பியபோதும் அத்தை வரவில்€ல். சிலர் அத்தைவீடு மிகவும் வசதியாகிவிட்டதாகவும், நில புலன்கள் பெருகிவிட்டதாகவும், அரவை மில், மாடி வீடு என்று சுபவாழ்வு வாழ்வதாகவும் என்னிடம் சொன்னார்கள். இதற்கிடையில் நான் பிளஸ் டூ வகுப்பை முடித்து விட்டிருந்தேன் நான் எடுத்திருந்த மதிப்பெண்கள் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு கல்லூரியில் "சீட்" கிடைக்கவில்லை. சும்மா ஊர் பேருந்து நிலையத்தில் என்னையொத்த சிலரோடு உட்கார்ந்து வெட்டிக்கதைகள் பேசிக்கொண்டிருந்த நாளில்தான் அத்தையை எதேச்சையாக சந்திக்க நேரிட்டது. அத்தை உயரம் அப்படியே இருந்தாலும் அவளின் நீண்ட கூந்தல் குறைந்து முக வசீகரம் குறைந்து இருந்தது. உதடுகள் உலர்ந்து முதுமையை அடைந்திருந்தாள். பத்தாண்டுகளுக்கு முன்பாக அத்தை பற்றிய எனது சித்திரம்..... மிகப் பெரிய இடைவெளியை உணர்த்தியது. அத்தை எளிதாக என்னை அடையாளம் கண்டவள் பக்கத்து ஊரில் ஒரு விஷேசத்துக்கு செல்வதாகவும் என்னை பார்த்ததும் பஸ்சிலிருந்து இறங்கிவிட்டதாகவும் சொன்னாள்.... என் படிப்பைப்பற்றி கேட்டாள், ஒழுங்காக படிக்கச் சொல்லிவிட்டு.... ஒரு மணி நேரமாக என்னைப்பார்த்து சில வார்த்தைகள் மட்டும் பேசினாள்...... மாமாவுக்கு நாலு வருசமாக உடம்பு சரியில்லை. எங்க வீட்டுக்கு நீ.... வர்றீயா என்று கெஞ்சலுடன் கேட்டாள். ஒங்கப்பன் இப்படி அக்கா பாசம் இல்லாமல் இருக்கான்.... நீயாவது அத்தை மேல பாசமா....இருடா....என்று கடிந்தாள்...... எப்ப ராசா என் வீட்டுக்கு வர்றே......இருபத்தைஞ்சு வருசமாயிட்டுடா இந்த உறவு அறுந்துபோயி," என்றபடி அவள் கண்கள் ஈரமாகின. அதை நான் விரும்பவில்லை " வர்ற வாரம் சனிக்கிழமை கண்டிப்பா நான் வர்றேன்" என்று உறுதியளித்தேன். அத்தை போய் விட்டிருந்தாள். வீட்டில் தொடர்ந்து பேசத் தொடங்கினேன்.

அத்தையை நான் பார்த்ததைப் பற்றியும். அத்தையோடு பேசியது குறித்தும்தெரிந்த, அப்பா என்னோடு பேசுவதை நிறுத்தியிருந்தார். நான் வெட்டியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. என் பேச்சு அவருக்கு எரிச்சலூட்டுவதாகவும் சமயங்களில் கோபத்தை அளிப்பதாகவும் இருந்தது. அம்மா முகம் சுளித்தாள். அக்காவுக்கு திருமண ஏற்பாட்டை துரிதப் படுத்திக் கொண்டிருந்தார் அப்பா. "நான் அத்தை வீட்டுக்குப் போகிறேன்" என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதை அம்மா பெரிதுபடுத்தாமல் இருந்தாள். பணம் வேண்டும் என்பதை அம்மாவிடம் தெரிவித்தேன். அவளிடம் திரும்ப திரும்பச் சொல்லி அத்தை வீட்டுக்கு செல்வதை உறுதி செய்து ஓரிரு நாள் தங்கிவிட்டு வரும் எண்ணத்தோடு கிளம்பினேன்.

தெற்கே 120 கி.மீ தூரத்தில் இருந்தது அத்தையின் கிராமம். முதன் முதலாக தனிமை பயணம் மிகவும் இன்பத்தை கிளர்த்தியது. மூன்று பஸ் பிடித்து.... அந்த மேட்டு கிராமத்துக்கு நான் சென்றபோது மாலையாகியிருந்தது.

கிராமத்துக்குள் நுழைந்தபோது தார் சாலை முடிவுற்று போயிருந்தது. மண் சாலைகளில் நடக்கத் தொடங்கினேன். எதிரே தென்பட்டவர்களிடம் அத்தையின் பெயரைச் சொர்லி "வீடு எங்கே இருக்கிறது" என்று நான் கேட்ட போது அவர்கள் "முதலில் நீ யார்?" என்று கேட்டார்கள். " தம்பி மகன் " என்று அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் நம்புவதற்கு தயங்குவது போல் இருந்தது. அத்தையின் பெயரைச் சொல்லி.... குடத்தோடு நீர்பிடிக்க வந்த பெண்ணிடம் கேட்டேன்.... இந்தா....... கடைசி மெத்தை ஓடு என்றாள்.

தெற்கு பார்த்த வீடு...... கச்சிதமாக திண்ணை..... இரண்டு ஆட்டுக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. வர்ணங்கள் அற்ற கதவு வெள்ளை மட்டும் அடிக்கப்பட்டிருந்தது. திருஷ்டி பொம்மை நிறம் மங்கி. முகப்பு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. வாசலில் நின்று " அத்தை " என்றேன்..... ஒரு முகம் மட்டும் தெரிந்தது. அடுத்த நொடிப்பொழுதில்... அத்தை கையில் கரண்டியோடு ஓடிவந்தாள். சோற்றை கிண்டியிருக்க வேண்டும் பதம் கவனிக்கும் பொருட்டு.... என்னை பார்த்ததும் பாசத்தின் நெகிழ்வில் கண்கள் கசிந்தன. சட்டென்று என் கையிலிருந்த் "பேக்" கை வாங்கிக் கொண்டே உள்ளே அழைத்தாள். "பாருங்கடி இதுதான்..... உங்க மாமா" என்றாள். இரண்டு பெண்களும் என்னைப் பார்த்ததும் லேசாக சிரித்தார்கள். பெரியவள் என்னிடம் பேச வேண்டும் என்ற நோக்கில் "வாங்க" என்று மெலிதாகச் சொன்னாள்... சின்னவள் என்னிடம் சகஜமாக உரையாடத்தொடங்கினாள். அத்தையின் மகன் மில்லுக்குப்போயிருப்பதாகவும் இப்போது வந்துவிடுவான் என்றும் அத்தை சொன்னாள். என்னைக் கண்ட ஆனந்தத்தில் வீடு களைகட்டத் தொடங்கியது. "மாமா எங்கே?" என்றேன் அத்தை என்னை "வா" என்று அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள்சென்றாள். மரக்கட்டிலில் இருமியபடி மாமா படுத்திருந்தார். என்னை பார்த்து யாரென்று அத்தையிடம் கேட்டார். உடல் நலிந்து மூச்சுவிட திணறியபடி கிடந்தார். என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு அடுத்த நிமிடமே தலையை கீழே கவிழ்த்துக் கொண்டார். நான் அத்தையிடம் கேட்டபோது கதை கதையாகச் சொன்னாள். மாமா இப்படிப் பட்ட இலட்சிய மனிதரா? என்பது வியப்பளித்தது. அப்பாவை கீழ்த்தரமான மோசமான மனிதர் என்ற நினைத்து கடிந்து —க்‘ண்டேன்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபோது, விவரிக்க முடியாத பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கே பார்த்தாலும் கிளிகள் கூட்டம் கூட்டமாக மரங்களிலும் கிளைகளிலும் வீட்டுக் கூரைகளிலும் உட்கார்ந்து கத்தியபடி இருந்தன. அடுத்த நிமிடமே வாசலுக்கு வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன் பச்சை நிறம்.... கிளிகளின் தீராத பாடல் காற்றில் கலந்து கொண்டிருந்தது. தீவிர ரசனையோடு கிளிகளை பற்றி பேசினேன். அத்தைக்கு சிரிப்பு வந்தபோது அத்தையின் மூக்கு கூட கிளி மூக்கு போலிருந்தது. பெரியவளின் மூக்கு கூர்மையாக இருந்தாலும்... சற்று உள்ளங்டகியிருந்தது. கிளியின் வசீகரமும், நுனி சிகப்பும் இல்லாதிருந்தது. சின்னவளின் மூக்கு ஆண் கிளிகளின் மூக்கு போல சற்று முரட்டுத் தனமாய் எடுப்பாய் இருந்தது.

அதிகாலையிலேயே கிளிகள் சிறகுதிர்த்து பறந்து பறந்து ஒரு மரத்திலிருந்த வேறோரு மரத்துக்குச் செல்வதும், பாடுவதும் விளையாடுவதுமாக இருந்தன. தானிய வயல்களிலிருந்து...... இங்கே கூட்டம் வருவதும்..... ஒரு கூட்டம் அங்கே சென்று தானியங்களை கொறிப்பதுமாக இருந்தது.

நான் அத்தையிடமும், பெரியவளிடமும், சின்னவளிடமும் கிளிகளைப் பற்றியே பேசினேன். என் கனவுகளில் வந்து உரையாடிக் கொண்டிருந்தன கிளிகள். கிளிகளுக்கான தானியங்களான சோளங்களையும் கேழ்வரகுகளையும் அடுக்குப் பானைகளிலிருந்து அள்ளி வீசினேன். அத்தை என்னிடம் லேசாக கடிந்து கொண்டள். இவ்வூரில் அனேக பெண்களின் மூக்கு கிளிகளின் மூக்குப் போல் எனக்குத் தோன்றியது என்றாலும், அத்தை மகள் பெரியவளின் சினேகிதி ரஞ்சிதாவின் மூக்கு அப்படியே ஒரு கிளியிடம் கடன் வாங்கி வைத்தது போலிருந்தது. ரஞ்சிதா அடிக்கடி என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அத்தையிடம் எனக்கு ஒரு கிளி வேண்டும் என்று சொன்னேன்.
உள்ளூர் செல்லப்பாவிடம் சொல்லி இருப்பதாகச் சொன்னாள் அத்தை. அவன் "கண்ணிகள்" வைத்திருந்தான். ஆனால் கிளிகள் அதன் மூக்கால் அந்த கண்ணிகளைச் சேதப்படுத்தியிருந்தன. தோழனாக மாற்றிக் கொள்ள அவனை ஊருக்கு மேற்கே அவனிருக்கும் குடிசைக்கு போய் தினமும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் எனக்காக எப்படியாவது ஒரு கிளியை பிடித்து தந்துவிடுவதாக உறுதியளித்தான்.

ரஞ்சிதா எனக்கு கிளி வளர்க்கும் கூடு ஒன்றை அவளே தன் சுயமாக சிந்தித்து மூங்கில் குச்சிகளால் தயாரித்துக் கொடுத்தாள். அதிலிருந்த தொழில் நுட்ப வேலை மிகவும் உன்னதமான பாட்டுக்காரனின் அறிவை ஒத்திருந்தது.

கிளிகள் சதா நேரமும்.... கீச்...... கிச் என்று ஒசையெழுப்பியபடி இருந்தது. கிராமமே ஒரு இசைக் குவியலில் மிதந்து கொண்டிருந்தது. வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும், கடும் உழைப்பாளிகளுக்கும் இந்த கிளிகள் பெரும் தொல்லையாக இருக்கிறது என்று கிராம பஞ்சாயத்து போட்டு கிளிகளை விரட்டுவது குறித்து பேசத் தொடங்கினார்கள். இவர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை என்று அத்தையிடம் கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள்.

செல்லப்பா கிளியோடு என்னைப் பார்க்க வந்தான். அதன் சிறகுகள் இரண்டையும் நறுக்கி விட்டிருந்தான். பறக்காது பயப்படாமல் வைத்துக் கொள்ளலாம் என்றான்.

கிளியின் வெதுவெதுப்பும், கோவை நிற சிகப்பு மூக்கும் எனக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இருக்கும் கிளிகளிடம் என் கையிலிருக்கும் கிளியை காட்டினேன். அதற்கு "செல்லம்மா" என்றொரு பேரும் வைத்தேன்.

ஊரிலிருந்து கிளிகளை விரட்டுவதற்கான ஏற்பாட்டை கிராம நிர்வாகம் எடுக்கத் தொடங்கி விட்டதாக அத்தை சொன்னாள், ஆனால் அதை நான் நம்பவில்லை. ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு செல்வது என்பது மறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தன. யாவற்றையும் மறந்தவன் ஆகி இருந்தேன். கிளிகளோடு என் பொழுதுகள் கரைந்து சொண்டிருந்தன.

கிளியை என் அருகில் வைத்துக் கெண்டு தூங்கிக்கொண்டிருந்தேன். கிளி என்னிடம் பேசத் தொடங்கியிருந்தது. அப்பொழுது இரவு மெல்ல விடியத் தொடங்கிய அதிகாலை நேரம்.... ஊரையே குலுக்கிப் போடும். ஐந்து வேட்டுக்கள் தொடர்ந்து போடப்பட்டன. திடிக்கிட்டு எழுந்த நான் பெரும் அதிர்ச்சிக்குள் உறைந்தேன்...... வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபொழுது, கிளிகள் அச்சத்தோடு பறந்து போய்க் கொண்டிருந்தன கீழ்திசை நோக்கி. கலவர பூமியாக கீச்.... கீச்..... துயர குரல் நடுக்கத்தில் ஒலித்தது.

சில நிமிடங்களிலே அனைத்து கிளிகளும் பறந்து போயிருந்தன....

அந்த ஊரிலிருந்து உடனே கிளம்பிவிட தயாரானேன். அத்தை என்னை உணர்ந்து கொண்டாள்.

"இனிமே எப்பொழுது இங்கு வருவார்?" என்று சின்னவள் கேட்டாள்.

"கிளி வர்றப்போ" - என்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறுகதைகள்


செவ்வாய் தோஷம்

முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால், உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி - இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால் பட்டணத்துக்காரர்களைப்போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னா மாத்திரம் மத்ய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால் கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு.

டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி., அந்தப் பிரதேசத்தின் தேக சௌக்கியத்திற்குப் பொறுப்பாளியல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக் கொள்ளக்கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. "கைராசிக்காரர்" என்ற அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்து வந்தது.

அவருடைய வைத்தியம் தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றிவிட்டால் போதும், சாதாரணமானதானாலும் வியாதியஸ்தனை நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டிகட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார்.

கம்பௌண்டர் வெங்கடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது; ஒன்று, யூனியன் ஜாக்கொடி போட்ட டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய - சீமைச் சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச் சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுள்வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே அவருடைய இந்த நெஞ்சழுத்திற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்.

முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில் பெரும்பான்மையான நாட்களில், குழந்தைகளுக்குப் பேதி மருந்து அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தாயரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும். அதனால் பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை.

கிடங்கு, ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து எசமானிடம் கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற்போகவே பூட்டுச் சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச்செல்ல வேண்டியதாக இருந்தது.

கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் "ரவுண்டு வரும்" ஏட்டு கந்தசாமி பிள்ளை - எல்லாரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ், கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்துக்கு அதீதமானது.

ரத்த காட்டேரி அடித்துவிட்டதால், அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது.

இ.பி.கோ.வில் பேயடிப்பதற்குத் தனிப்பிரிவு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டிருந்தும், ஏட்டுப்பிள்ளைகூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார்.

டாக்டா வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம் வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதியடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இது மாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப்பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ என்று நினைத்தார் .

கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு, "யாருடா அது?" என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார்.

இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமி பிள்ளை போலீஸ் ஸலாம் செய்து, தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். "என்ன கந்தசாமி பிள்ளை, பய கதை விடரானே!" என்று "பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?" என்றார் கந்தசாமி பிள்ளை.

"பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதிவையாதியும், சிரிச்சுத் துப்பப்போறான்!" என்றார் டாக்டர்.

"நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பந் தெரியும் - ஏலே வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்கடா!"என்று உத்தரவு போட்டார் கந்தசாமி பிள்ளை.

டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார்.

கண் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல்நாக்கில் பதிந்து விறைத்துக்கொண்டதால் வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது.

"சாக்கை அப்புறம் எடுத்தெறி!" என்றார் டாக்டர். பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்தால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்துவிறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்கிரமாக முறுகிக் கிடந்தன.

"சரி, உள்ளே எடுத்துக்கொண்டு போய் மேஜையில் கெடத்துங்கடா!" என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர்.

"உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது" என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார்.

அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. "அதாரது?" என்ற குரலுக்கு, "நான்தான் நாயுடு!" என்று சொல்லிக்கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார்.

பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!" எனறு சிரித்தார் டாக்டர் வீரபத்திர பிள்ளை.

"பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தெரிகெட்டுப்போய் அலையிது அதாத்தானிருக்கும்!" என்றார் நாயுடு.

"நீரும் பேயை நம்புறீரா - உருப்பட்டாப்லேதான்!" என்று சொல்லி, டாக்டர், "ஏலே இன்னுமா - எத்தினி நேரம், சவத்தெ இளுத்துக் கெடத்த?" என்று அதட்டினார்."
"வே, கந்தசாமி பிள்ளை, நம்ம தோட்டி பாத்துக்கிடுவான் - நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க - காலையிலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!" என்று சொல்லிக் கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார்.

"ஸார், ஒரு நிமிசம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வத்திருதேன்!" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு.

டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார்.

உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடிவந்தார்.

"வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லெ; ரத்தக் காட்டேரிதான்; என்றார் நாயுடு.

"உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலே இருந்தாப் போய்ப்பாரும்!" என்று அதட்டினார் டாக்டர்

"இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்" என்றார் நாயுடு.

"பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!" என்று சொல்லிக்கொண்டே மேல்துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, கைகளைத் தோளுக்குமேல் உயர்த்தி சுடக்க முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர்.

"நீங்க எங்ககூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!" என்ற தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர்.

"என்னதான் சொல்லுமே!"

"நீங்க வாருங்க, ஸார்!" என்று ஷெட்டுக்கன் நுழைந்து, பிணத்தின் மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர்

"டேய் தோட்டி! விளக்கைக் கொஞ்சம் ஒசத்திப் பிடி!" என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக்கத்தி ஒன்றை எடுத்தார்.

அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ஷெட் வாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர், "என்னவே, வேலை!" என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப் போல், காயத்தை விரித்துப்பிடித்துக் காண்பித்து, "இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!"என்றார்.

"ரத்தம் இருந்தாலும் பிணமானபின் வடிவதை எங்கே கண்டீர்?" என்று கொண்டே நெருங்கினார் டாக்டர்.
"ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்?" என்றார் நாயுடு.

டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம்.
டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது.

"அப்புறம்!" என்றார். அவருடைய நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது.

"வாருங்க, போவோம்!" என்று வெளியே வந்த கம்பௌண்டர், இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?" என்றார். "கோயிலூர்க் கணியான் செத்துப்போனானே அவனைப் பொதைக்கத் தானே செய்தார்கள்?" என்று கேட்டார் தோட்டியிடம்.

"ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!" என்றான் தோட்டி ராக்கன்.

"எப்படா நடந்தது?"

"சாயங்காலம் சாமி!"

"வருகிறீர்களா. போவோம்?" என்றார் கம்பௌண்டர்.

"அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானாப் போவோம்!" என்றார் டாக்டர்.

"ஏட்டுப்பிள்ளையையும் கூட்டிக்கொள்ளுவோம்; ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டு கூட வா!" என்றார் நாயுடு.

"நான் வரமாட்டேன் சாமி; எனக்குப் புள்ளை குட்டியில்லே" என்றான் ராக்கன்.

"நாங்க இருக்கறப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!" என்று தேற்றினார் கம்பௌண்டர்.

இந்தப் பரிசோகனைக் கோஷ்டி கோயிலூர் பள்ளர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு.

வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை; வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான்.

சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி. நாலைந்து பல்லாங்குக்கப்புறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது.

"எங்கடா அவனைப் பொதெச்சாங்க?" என்று அதட்டினார் டாக்டர். தம்மை இழுத்தடிகிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு.
"அதோ, அந்த்க் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!" என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை....
நாயின் ஊளை போல ஆரம்பித்த ஒரு சப்தம் கணநேரத்துக்கு நேரம் சுருதி கூடி, ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வானமுகட்டைக் கிழித்தது.
கடகடவென்று விக்கி விக்கிச் சிரிப்பது போன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது.
அடுத்த கணம் அமைதி.
அதே பேய் அமைதி!
நடந்துகொண்டிருந்தவர்கள் யாவரும் தரையுடன் தறையிட்டது மாதிரி கல்லாய் உறைந்துநின்றனர்.
"சாமி, நான் வரமாட்டேன், பேய்!" என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன்.
மண்வெட்டி, ஓடிய வேத்தில் அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துப்கொள்ள அவன் தாமதிக்கவில்லை.
"நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதுல்ல!" என்றார் ஏட்டுப்பிள்ளை.
"சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம்; அது நாயில்லை!" என்றார் கம்பௌண்டர்.
மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரித்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்.
ஆற்றருகில் உள்ள இடந்தானே; வேலை சுளுவாக நடந்தது.
"அதே வெள்ளையா என்னமோ தெரிகிறது!" என்றார் கம்பௌண்டருடன் ஒண்டிக்கொண்டிருந்த டாக்டர்.
ஏட்டுப்பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெயியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துக் தூக்கவே பிரேதம் தென்பட்டது.
டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார்.
பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது.
புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம் போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது.

"அவன் எமை ஆடுது!" என்று அலறிக்கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர்.

நல்ல காலம், கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார்.

பிரேதத்தின் வலத இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள்.

பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை.

வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கருவண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்தது போலத் தள்ளாடியது. பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது.

"வண்டுகளைப் போல அது ரீங்காரமிடவில்லை, பார்த்தீரா?" என்றார் நாயுடு.

வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன.

"இதோ பாருங்கள்!" என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு.

புது ரத்தம் குபுகுபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!.

மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

"ரிப்போர்ட் எப்படி எழுத?" என்று கைகளை மணலால் தேய்த்துக் கொண்டே கேட்டார் ஏட்டுப்பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டது போல அவ்வளவு பிரமை.

"பயத்தால் மரணம் என்று எழுதிப்புடும்!" என்றார் கம்பௌண்டர்.

"நாயுடு, இது எப்படித் தெரிந்தது?" என்றார் டாக்டர்.

"அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குச் செவ்வாய் தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!" என்றார் கம்பௌண்டர்.
============================================================================================

சிறுகதைகள்


உருவங்களின் ரகசியம்

ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்பற்றி செய்திகள் மட்டும் ஊருக்குள் வந்து கொண்டிருந்தது. கொளஞ்சியை சிறுவயதிலிருந்தே அவளின் சின்னாத்தாள் அழகம்மாள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் வேறு ஆதரவு கிடையாது. மீசைக்காரர் வீட்டில் பொழுதுக்கும் அடிமை வேலை செய்து, இரவானால் வீடடைவாள், மீசைக்காரர் குடும்பத்துக்கு தன் உயிரை உழைப்பாக்கி கொட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் இரண்டு வேளை சோறும் விழாக்காலங்களில் உடுப்பும் எடுத்துக் கொடுத்தார்கள். உடலெல்லாம் பல்லாய் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

கொளஞ்சிக்கு படிப்பு ஏறவில்லை. சோற்றுத்தட்டை பையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் பள்ளிக்கூடம் போனாள்; திரும்பி வந்தாள். தினம் தினம் வகுப்பில் உதையும் அவமானமும் கிடைத்தன. சோற்றுக்காக பள்ளிக்கூடம் போய் வந்தாள். வாத்தியார் அடித்த அடி சூத்தாம்பட்டை பிரம்பு கனத்திற்கு வீங்கி குப்புறடித்துக் கிடந்தாள் வீட்டில். அழகம்மாள் வாத்தியாரை நடுரோட்டில் வைத்து திட்டித் தீர்த்தாள். அவளின் நோட்டுப் புத்தகப் பை சுவரில் அடித்த ஆணியில் கேட்பாரற்று உரையத் தொடங்கியது.

அரசன் சிறுவயதிலிருந்து மேளம் அடிப்பவர்கள் கூடவே திரிந்து கொண்டிருந்தான். மேளம் தூக்கவும் சாராயம் வாங்கி வரவும் மேளக்காரர்களுக்கு உபயோகப்பட்டான். சமயங்களில் போதை முற்றிய பின் இழவு வீடுகளில் மேள சப்தத்தை ஒப்பேற்ற அவனைத் தட்டச் சொன்னார்கள். அவன் உயிரைக் கொடுத்து, "தொம் தொம்" எனத் தட்டிக் கொண்டிருந்தான். கைவாகு வரவில்லை. பானையிலும் கதவிலும் ஜோராகத் தாளம் போடும் அவனுக்கு மேளத்தில் சொல் கூடிவரவில்லை. விரல்களைப் புரட்டி சுருட்டி கும் கும்மென குத்தி மேளத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் தாளம் வராத காரணத்தினை.

கட்டையர் தாத்தா நாதஸ்வரம் சொல்லிக் கொடுத்தார். பிடி கொள்ளவில்லை. தவிலில்தான் முட்டிக்கொண்டு நின்றான். "கழுத போகுது. சொல்லிக்கொடுத்து தொலை" என்றார் கட்டையர் தாத்தா. சம்பிரதாயமாக அரும்பு மீசையை மழித்துக் கொண்டு வந்து நின்றான். "மீசை மழித்ததற்காகவே உனக்கு தவில் சொல்லித் தரவேண்டும்" என்றான் தவில்காரன் கணேசன்.

கணேசனின் சிஷ்யனாக மேளத்தை தூக்கிக்கொண்டு கணேசன் குரூப்பின் நிழலாய்க் கிடந்தான். நோஞ்சான் உடம்பு. தோளில் தூக்கி மாட்டி வாசிக்கத் திராணியற்று கோணிக்கொண்டு நின்றான். எல்லோரும் சிரித்தார்கள். அவர்களோடு அரசனும் சிரித்தான். மேளக்குச்சும் கழியும் பிடிக்க விரல் வளைத்து பழகிக்கொடுத்தான் கணேசன்.

கணேசனுக்கு துணை மேளமாய் இழவு வீடுகளில் வாசிக்கத் தொடங்கினான். ஹர்லிங் முடி வளர்த்தான், தேங்காய் எண்ணெய் தடவி. மேளச் சப்தத்தை ஊர் கேட்டுக்கொண்டிருந்தது. காரியம் முடிந்து ஊர் திரும்பும் நாட்களில் ஓய்வில்லாமல் தவிலைத் தட்டிக் கிடந்தான். பகலில் தூங்கும் மேளக்கார குரூப் அவனைத் துரத்தியது. மேளத்தைத் தூக்கிக்கெண்டு ஓடினான். மேளம் மேலும் மேலும் பல தாளங்களை இசைந்து கொடுக்கத் தொடங்கியது. தாளம் பிடி கொடுப்பதை கணேசன் தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

வயிசுக்கு வந்து அறை வீட்டிலிருந்து அரசனின் மேளச் சப்தத்தில் தான் வெளிக் கிளம்பினாள் வசந்தா. பதினாறு நாட்கள் வெயில் படாத வசந்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரசன். அவனது ஹர்லிங் முடி நெறி நெறியாய் வஞ்சனையற்று வளர்ந்து கிடந்தது. மேளம் தாங்கி நிற்கும் தோரணையும் துடித்து அடிக்கையில் குலுங்கும் சுருள் முடியும் வசந்தாவை பார்த்துக்கொண்டிருக்க வைத்தன. முகம் மாசு மருவற்று, பூனை மயிர் பளபளத்தத அவள் காதோரங்களில்.

அரசன் தாளங்களில் வழி தன் காதலை வாசித்துக்கொண்டிருந்தான். வசந்தா தூது போவதற்குத் தோதான ஆட்கள் தேடிக் கொண்டிருந்தாள்.

கணேசனுக்கு அரசனின் விருப்பம் தெரிந்து கட்டையர் தாத்தாவிடம் சொன்னான். நாதஸ்வரத்தை ரிப்பேர் செய்தபடி யோசனை செய்தார் கட்டையர் தாத்தா.

வசந்தாவின் வயிற்றில் கொளஞ்சி இருந்தபோது அவள் கேட்டறியாத ஊர்களுக்கு மேளம் வாசிக்கச் சென்றான் அரசன். ஒருக்களித்துப் படுத்தபடி சிம்னியின் திரியைத் தூண்டிக் கொண்டே கூரை வீடடில் காத்துக்கிடந்தாள். காகிதம் சுருட்டி அடைக்கப்பட்ட மண்ணெண்ணெய் சீசாவில் மண்ணெண்ணெய் தீர்ந்து கொண்டுவந்தது. விடிந்த பிறகு அவள் மண்ணெண்ணெய் வாங்க கடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.

சிறுவயசு கர்ப்பம். மெல்லிய உடலில் வயிறு தள்ளிக்கொண்டு சிரமமாக மூச்சு விட்டாள். அவளுக்கு சிரமமெல்லாம் அரசன் அருகிலிருந்தாள் பறந்து விடும். தரையில் கால் பாவாமல் பார்த்துக் கொள்வான். எல்லோரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவளின் ஆறுதலுக்காக அரசனைத் திட்டினார்கள். "புள்ளத்தாச்சிப் பொம்பள" என்று துணைக்குப் படுத்துக்கொண்டாள் கட்டையர் தாத்தா மனைவி. அவள் நாதஸ்வரக்காரனைக் கட்டி ஆண்டு அனுபவித்தவள். தூக்கம் வராமல் கதைகள் சொல்லிக்கொண்டு கிடந்தாள். கதைகளைக் கேட்டபடி வீடு விழித்திருந்தது. "அவனுங்களுக்கு என்ன இருக்கு சொல்லு பாப்போம்? நாலு வூட்டு சோறு. ஒரு வீட்டுத் திண்ணை" என்றாள் கிழவி.

அரசன் ஊரைத் தேடிக்கொண்டு வந்தான். குழந்தை வசந்தாவை வார்த்ததுபோல் இருந்தது. கொளஞ்சி என்று கூப்பிட்டார்கள். வசந்தாவின் தங்கை அழகம்மாள் பிரசவம் பார்க்க வந்திருந்தாள். சிறுவயதுப் பிரசவம் பிரச்சனைதான் என்றபடியே முடிந்து விட்டிருந்தது.

வேலைக்குச் செல்லாத தவில், திண்ணை மூலையில் ரோஸ் கலர் துணியால் மூடிக் கிடந்தது. அரசன் பொழுதுக்கும் புளிய மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அசையும் பிணம் போல் வானம் வெறித்துக் கிடந்தான். கிளைகளைத் தாண்டித் தெரியும் வானம் அவனுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. பாக்கு வைத்து அழைத்தார்கள் அரசனை. தவிலைத் தொடுவதில்லை என்றான். அழகம்மாள் பனைவோலைக் குடிசை முகப்பிலிருந்து அவனுக்கு பாதிமுகம் தெரிய, "வேல வித்து பார்த்தாதாங் இருக்கிறத காபந்து பண்ண முடியும்" என்றான். வந்தவர்கள் கோவில் அழைப்பிதழையும் முன் பணத்தையும் அழகம்மாளிடம் கொடுத்துச் சென்றார்கள். அழகம்மாள் முந்தியில் வாங்கிக் கொண்டாள். குழந்தையை காபந்து பண்ண வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது.

அரசன் வேலைக்குச் சென்றான்; மேளத்தைத் தூக்கிக் கொண்டு அழகம்மாள் பிள்ளையைப் பார்த்துக் கொண்டாள்.

சாவு வீடுகளில் அரசன் மூர்க்கமாக வாசித்துக்கொண்டிருந்தான். சாராய டப்பாக்கள் அவனிடம் திணறி விழுந்தன. போதையையும் பலத்தையும் தாளக் குச்சிகளுக்குள் செலுத்திக்கொண்டிருந்தான். கண்கள் ரத்தமாய் மின்ன மின்ன குடித்துக் குடித்து வாசித்துக்கெண்டிருந்தான். ஆட்டக்காரர்கள் சக்தியிழந்து அவன் கைகளைப் பற்றி தாளத்தை நிறுத்தினார்கள். சரஞ்சரமாய் தொங்கும் முடியினை தலை சொடுக்கி வாரிப் போட்டுக்கொண்டு சிரித்தான்

சேலத்தில் குரூப் மேளத்திற்கு நபராய் சென்ற அரசன் ராசாத்தியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அழகம்மாள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தனிவீடு சென்று விட்டாள். அரசன் ராசாத்தியின் மழமழப்பான உடல் வளைவுகளில் இறந்து கிடந்தான். ராசாத்தி அரசனுக்குத் தலைவாரிவிட்டாள்; குளிப்பாட்டி விட்டாள்; வயல் வேலைக்குச் சென்றாள். அரசன் மேளத்தோடு காரிய வீடுகளில் வெற்றிலை குதப்பிக்கொண்டு மைனர் செயின் போட்டுக்கொண்டு களிப்பேறிக் கிடந்தான்.

மீசைக்காரன் மகன் பூபாலன் அரும்பாத மீசையைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான். ராசாத்தியின் வாசனை ஊர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. சுய மைதுனம் செய்ய மறைவிடம் தேடி மோட்டார் கொட்டகைக்குச் சென்றபோது ராசாத்தி ஊர்க்காரிகளோடு வயல் வேலை செய்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள், ராசாத்திக்காக அரசனிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அழகிய மனைவி பற்றிய ஊராரின் வர்ணனைகளில் பெருமை உடலெல்லாம் சுரந்து வழிந்து கொண்டிருந்தது அவனுக்கு.

ஆண்கள் குழுமிக் கிடக்கும் இடங்களில், தெருத் திருப்பங்களில், பெட்டிக்கடைகளில், இளைஞர் சங்கத்து கொட்டகை முகப்பில் ராசாத்தி அழகைச் சிந்தி இறைத்தபடி நடந்து சென்ற கொண்டிருந்தாள். சங்கத்து சுவர்களில் ராசாத்தி பெயரை எழுதி விதவிதமாக முலை தொங்கிய படங்கள் வரைந்து அம்புக்குறி போட்டு குறியில் பெயர் எழுதி வைக்கப்பட்டது.

ராசாத்திக்கு பிள்ளைகள் எதுவும் பிறக்கவில்லை. மூத்தவள் மகள்தான் என் மகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள். கொளஞ்சியை வேலைக்குப் போய்விட்டு வந்தபின். தன் வீட்டிற்குத் தூக்கி வந்து பாசத்தில் உளறிக்கொண்டு கிடந்தாள். கொளஞ்சி ராசாத்தியை அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு கை கால்களை உதறிச் சிரித்தாள். குழந்தையின் சிரிப்பொலியும் உடல் தன்மையும் ராசாத்திக்குள் பரவசத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தது. அழகம்மாள் குழந்தையை ராயசாத்தியை நம்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். குழந்தை ராசாத்தியிடமும் அழகம்மாளிடமும் கைமாறிக் கிடந்தது. ராசாத்தி மோட்டார் கொட்டகைக்கு மலத்துணி அலசச் சென்றாள். வசந்தாவின் பிரேம் போடாத போட்டோவை சன்னலில் சாத்திவைத்து விசேஷ காலங்களில் கறிச்சோறு படைத்தாள். பத்திப் புகை சுருள் சுருளாய் வசந்தாவின் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு சாமி கும்பிடக் கற்றக்கொடுத்தாள் கைபிடித்து. குழந்தை எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

மோட்டார் கொட்டகையில் மீசைக்காரர் மகன் காதல் பாடல்களை டேப் ரிக்கார்டரில் போட்டான். ராசாத்தியின் வருகையின் போதெல்லாம் நீர் குதிக்கும் சப்தம் தாண்டி அவளுடைய காதுக்கு பாடல் போய்ச் சேரவேண்டிய கவலை அவனுக்கு இருந்தது. பாடல்களின் வழி தன் காதலை அவளிடம் சொல்லிவிட்டதாக நம்பிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்த செக்ஸ் புத்தகத்தில் ராசாத்தி உருமாறி வந்துகொண்டிருந்தாள். கறுப்பு வெள்ளை படங்களில் விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ராசாத்திக்கு காகிதத்தில் முத்தம் கொடுத்தான். பேப்பர் வாசனை நாசியில் ஏறியது. எரவாணத்தில் செருகப்பட்ட செக்ஸ் புத்தகம் தூங்கத் தொடங்கியவுடன் கயிற்றுக் கட்டிலில் மோட்டார் இறைக்கும் நீர் குதிப்பு சப்தங்களோடு களைத்துப்போய் தூங்கிக் கொண்டிருந்தான் ஸ்கலிதமாகும் கனவுகளுடன்.

ராசாத்தி மாதவிடாய்க் காலங்களில் அதிகாலையில் குளிக்க வந்தாள் மோட்டார் கொட்டகைக்கு விழிப்பு தட்டிய அவன் ராசாத்தியின் மினுமினுப்பான அழகு நீரில் முங்கி எழுவதைக் கண்டான். யாருமற்றதான அதிகாலைவெளி என நம்பிக்— காண்டிருந்தாள் அவள். படபடப்பு எழுந்து விடைத்துக்கொண்டு நின்றது அவனுக்கு. தன் இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் நின்று கொண்டிருந்தான். அவள் ஈரத் துணிகளை உடலில் போர்த்திக்கொண்டு குளிரில் நடுங்கியபடி ஓட்டமும் நடையுமாய் சென்றுவிட்டபிறகு நீரில் இறங்கி சுய மைதுனம் செய்தபடி அவள் பெயரையும் உடலையும் வருத்தி அழைத்துக் கொண்டிருந்தான். அவள் தொலைவில் சென்று கொண்டிருந்தாள். அவள் பெயரை முனகிக் கொண்டிருந்தான். தூரத்தில் சென்று கொண்டிருப்பவள் அருகாமையில் நின்றாள்; அவன் குளியலைப் பார்த்தாள்; அவளும் நீரில் இறங்கி அவனைக் கட்டிப் பிடித்து அவனைத் தனக்குள் வாங்கி அவனை ஒரு புள்ளியாக்கி பருகத் தொடங்கினாள். கண்மூடிக் கிடந்து திறந்தான். தூரத்தில் சென்ற ராசாத்தி அங்கிருந்தபடியே மோட்டார் கொட்டகையைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ குளிக்கும் அசைவுகள் தெரிந்து கொண்டிருந்தது தூரத்துப் பார்வைக்கு. அவள் பார்ப்பதை இவன் பார்த்தான். பிறகு அவள் செல்லத் தொடங்கினாள் பலவித யோசனைகளுடன். கொளஞ்சி வளர்ந்துகொண்டு வந்தாள். ராசாத்தி சேர்த்து வைத்த காசில் பாவாடை, சட்டை எடுத்தாள் பிள்ளைக்கு. அழகம்மாள் சைக்கிளில் வரும் துணி மூட்டைக்காரனிடம் பாதி பணமும் மீதி கடனும் சொல்லி எடுத்தாள். அரசன் பக்கத்து டவுனில் வரிசையாய் நீல மயில்கள் நிற்கும் பட்டுப் பாவாடை எடுத்துக்கொண்டு வந்தான். பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு தெருப் பிள்ளைகளோடு விளையாடப் போகாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். கொளஞ்சிக்கு ராசாத்தியுடனே அதிக நேரத்தை கழிக்கும்படி ஆனது. மீசைக்காரர் வீட்டில் பிள்ளையைக் கொண்டு வரக்கூடாது வேலைக்கு என்று விட்டதில் வருந்திக்கொண்டிருந்தாள் அழகம்மாள். வேலை கெடுகிறது; இரண்டாள் சாப்பாடு ஆகிறது; நேரத்துக்கு தீனி, சாக்குப் போக்கு என்று கத்தி விட்டாள் ஆச்சி. கொளஞ்சிக்கு முக்காடு போட்டு மரத்தடியில் சோற்று வாளிகளுக்கு காவலாய் உட்கார்த்தி வைத்து விட்டு வயல் வேலை செய்துகிடந்தாள் ராசாத்தி. அழுவாத பிள்ளை என்று எல்லோரும் கிள்ளினார்கள். கொளஞ்சி சிணுங்கிவிட்டு வாயை மூடிக்கொண்டாள். ராசாத்தியின் பேச்சுவழக்கும் காரிய நேர்த்தியும் மணம் கமழும் சமையலும் பின்னாளில் கொளஞ்சிக்கு ஒட்டிக் கொண்டது.

தன் எண்ணங்களை ராசாத்தியிடம் நேரடியாகச் சொல்லாமல் பல வழிகளில் தெரிவித்துக்கொண்டிருந்தான் மீசைக்காரர் மகன், அரசன் வசிக்கும் தெருவில் அவன் பாதம் நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தது. கிழவிகள் அவனைக் கூப்பிட்டு அவன் அப்பாவை விசாரித்தார்கள். ராசாத்திக்கு அவன் வருகை தெரிந்துகொண்டு வந்தது. ராசாத்திக்கு தூரத்திலிருந்து மோட்டார் கொட்டகையின் காட்சிவெளியைப் பார்க்கும்போதெல்லாம் யாருமற்ற காலையில் நீராடியதும் வந்து விட்ட பின் எதேச்சையாய் திரும்பிப் பார்த்த கணத்தில் அங்கு வேறு யாரோ ஒரு உருவத்தின் குளியல் அசைவையும் நின்று உற்றுப் பார்த்தது அவளுக்கு நிழலாடிக்கொண்டிருந்தது. அந்நினைவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத அரூப நினைவாக விழுந்துவிட்டிருந்தது. அந்த மாதத்து மாதவிடாய் காலங்களில் அவளிடம் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை முகம் பார்க்கும் கண்ணாடியில் கண்டு கொண்டிருந்தாள். தேவையற்ற பரபரப்பும் துயரம் படிந்த முகமும் மறைமுகமான சத்தோஷமும் அதிகாலையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

பறவைகளின் சப்தத்துடனும் மோட்டாரின் தொடர் ரீங்காரத்துடனும் நீராடிக் கொண்டிருந்தவளுக்கு கீற்று மறைவில் நிற்கும் இரண்டு கால்களை மட்டுமே அவதானிக்க முடிந்தது. அவள் இயல்பாய் எழுந்து ஆடை மாற்றும் போக்குகாட்டி கொட்டகைப் பின்புறமாக சுற்றிவந்து உள்ளே எட்டிப் பார்த்தபோது அவள் குளியல் முடித்து விட்டதான எண்ணத்திலும் அவசரத்திலுமான முடியாக் கனவின் துயரத்துடன் சுய மைதுனத்தில் மிதந்து கொண்டிருந்தான். அதை எதிர்பார்த்தவள் அவன் தன்னைப் பார்க்கும்வரை நின்று கொண்டிருந்தாள்.

அதன் பிறகு அவனைக் கடந்து சென்ற போதெல்லாம் அவள் முகத்தில் விசேஷ பூ சிரித்துக்கொண்டிருந்தது. பேன் பார்க்கும் கிழவிகளை வீட்டு வாசலில் இருந்து கொண்டு தலை மயிரைப் பரப்பிவிட்டு சாடைமாடைப் பேச்சுக்கள் மொழிந்துகொண்டிருந்தாள். எதிர் திண்ணைகளில் பேச்சுக் கொடுத்துக் கிடத்தான் அவன். வயசாளிகளும் குழந்தைகளும் அவனின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு செவிமடுத்துக் கிடந்தார்கள்.

முகம் தெரியாத அதிகாலை இருட்டில் பாவாடை, சேலைகளைத் தோளில் போட்டுக்கொண்டு குளிக்கச் சென்றாள். அவளின் வருகை அவனுக்கு யாருமே சொல்லாமலே தெரிந்திருந்தது. அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் கற்பனையில் நினைத்தபடி வரப்பில் நடந்துகொண்டிருந்தாள்.

மீசைக்காரர் வீட்டின் பயனற்ற பழைய பொருள்கள் குவிக்கப் பட்டிருக்கும் தனி வீட்டில் உடலின் மர்மங்களோடு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாகக்கிடக்கும் மீசைக்காரர் வீட்டுக் கிழவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாம்பல் நிறக் கண்களுடன். அவர்களின் இருப்பு தனக்குத் தெரியும் என்பதை எத்தனையோ முறை அவளின் மட்கிய குரலில் இருமியும் கனைத்தும் காட்டியும் அவர்கள் பொருட்படுத்தாதிருந்தார்கள். தன்னைப் பொருட்படுத்தாத அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாகக் கருதி சபித்தாள். மரணத்தின் முனகலும் சுகிப்பின் சிரிப்பும் ஒரே அரையில் ஒலித்துக்கொண்டிருந்தது.

கிழவியின் மல மூத்திரங்களை சுத்தப்படுத்த வந்த அழகம்மாள் அவர்கள் கட்டிப் பிடித்துத் துயில்வதைப் பார்த்துவிட்டுச் சென்றாள். அரசன் விசனம் பிடித்துக் கிடந்தான்.

பிரசிடென்ட் வீட்டு மாட்டுக் கொட்டகையில் பஞ்சாயத்து நிகழ்ந்தது. அரசன் கைகளைக் கட்டிக்கொண்டு கல்தூணில் சாய்ந்து நின்றான். ராசாத்தி எல்லோருக்கும் மறைவாய் விசும்பிக்கொண்டு நின்றாள் மாடுகளின் பின்புறம். அரசனை சமாதானப் படுத்தினார்கள். அரசன் அவளை வச்சி வாழமுடியாதென்றான்.

"பையன் சின்ன பையன்" , "யாருதாங் தவறல்", "இந்த ஒருவாட்டி விட்டுப்புடி", "கழுத மேயுதுன்னா தொலைச்சி தலமொழுவிட்டுப் போ", "அதுக்கப்பறம் நான் இவள உங்கிட்ட சேத்தன்னா உஞ்செருப்பகயிட்டிக்க ஆமா".

"உங்க வீட்ல உங்க சம்சாரம் இப்பிடி பண்ணிட்டா இப்படி பேசுவீங்களா?"

பிரசிடென்ட் துண்டை உதறி தோளில் போட்டுச் சென்றார். சாயங்காலம் தீர்ந்துபோனது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றும் ராசாத்தி பிரசிடென்ட் வீட்டில் அவர் மனைவியிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு வாழ்க்கை பூதாகரமாக மீசைக்காரர் மகனிடம் பற்களைக் காட்டிக்கொண்டு நின்றது. ராசாத்தி அவன் முன் முகம் மூடி அழுதுகொண்டிருந்தாள். விடியும் வரை விரைத்த சடலம் போல் யோசனை செய்துகொண்டிருந்தான்.

மாட்டுச் சந்தையின் பின்புறம் மாற்றுத் துணிகளும் செருவாட்டுக் காசும் எடுத்துவந்து காத்திருந்த பகல்பொழுது முடிந்து போனது ராசாத்திக்கு. போக்கிடமற்ற கவலை பீடித்து உதடுகள் உலரத் தொடங்கி எச்சில் சுரப்பு நின்றுபோனது. வந்து சேராத அவன் வருகையை அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அழகம்மாளின் தனி வீட்டில் பழம்புடவையில் அவள் உடல் சமனப்படாத விசையுடன் இடமும் வலமுமாய் ஆடிக் கொண்டிருந்ததை கொளஞ்சிதான் முதலில் பார்த்தாள்.

கொளஞ்சி மாராப்பு போட்டுக் கொண்டாள். அரசன் பிழைப்பு தேடி அயலூர்களுக்கு சென்று கொண்டிருந்தான். தூரத்து ஊரில் பூபாலன் காலேஜ் படிப்பை தங்கிப் படித்தான். அழகம்மாள் கருவாடு போல்ஆகிக் கொண்டு வந்தாள். அவளின் சருமம் மேலும் மேலும் வரிவரியாய் கிழடுதட்டிப் போனது. ஊரறிய அரசனுக்குப் பெயர் சொல்லாத பெண்டாட்டியாக வந்து சேர்ந்தவளுக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லாமலில்லை. எடுத்து செய்வார் யாருமில்லை. அவள் உடல் மன இறுக்கங்களால் கெட்டித் தட்டி நரம்பாகிப் போனாள். மேலுக்கு ஒரு புடவையைச் சுற்றிக்கொண்டும் அவளின் பழைய அளவைச் சொல்லும் தொளதொள ஜாக்கெட்டைப் போட்டுக் கொண்டும் அடிமை வேலை செய்யச் சென்றாள். வேலைகள் ஆவலாய் அவளைப் பற்றிக்கொண்டு இழுத்தன. சதா சுரந்துகொண்டிருக்கும் முதலாளி வீட்டு வேலைகளின் அன்றைய வேலைக்கான முடிவை இரவுகள் வந்து முற்றுப்புள்ளி இட்டு வைத்தன. கொளஞ்சி சோறாக்கி வைத்துவிட்டு பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அழகம்மாளின் வருகைக்குக் காத்திருந்தாள். ராசாத்தியின் உடல் தொங்கிய அக்காட்சி, தனிமையான இரவுகளில் கொளஞ்சிக்கு பயமூட்டுவதாக சொல்லிக் கொண்டு நேரத்தில் வீடுவரும்படி அழகம்மாளை நச்சரித்துக் கொண்டிருந்தாள். வயிசுக்கு வந்த பிள்ளையை காத்து கறுப்பு அண்டினால் ஆயுசுக்கும் போகாது என்று வேறு வீடு பார்க்கச் சொன்னார்கள். அழகம்மாளுக்கும் இரவில் துர்சொப்பனங்கள் வந்து கொண்டிருந்தது. அம்மா இருக்கும் தைரியத்தில் பிள்ளையும் பிள்ளை இருக்கும் தைரியத்தில் அம்மாவும் அவ்வீட்டில் விடிய விடிய விளக்கெரியவிட்டு உறங்கிக் கொண்ருந்தார்கள்.

அழகம்மாளுக்கு டைபாய்டு ஜூரம் வந்து முனகிக் கொண்டு கிடந்தாள். முதலாளி வீட்டு வேலைகள் அவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு பதிலாய் ஈரிழைத் துண்டை கழுத்தில் சுற்றிக் கொண்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்குச் சென்றாள். புதிய வேலைக்காரியின் சுறுசுறுப்பும் காரியநேர்த்தியும் ஆச்சிக்கு மிகவும் பிடித்து பழம் புடவைகள் மூன்று கொடுத்தாள். சென்ற விசேஷங்களில் செய்து இன்னும் தின்று தீராத பட்சணங்களை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு சவ்வுத்தாள் பையில் போட்டு வாரிக் கொடுத்தாள். ஜூரத்தில் முனகிக்கெண்டிருக்கும் அழகம்மாளுக்கு நாக்கு கசந்து போனது. பட்சணங்களை அவளால் ருசி பார்க்க முடியவில்லை. கடைசி காலங்களில் கொளஞ்சி தனக்கு கஞ்சி ஊற்றி காபந்து பண்ணுவாள் என்று ஊர்ஜிதமாகிக் கிடந்தாள். அம்மாவுக்கு உடல் சரியாகும் வரை என்று நினைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றதைத் தாண்டி ஆத்தாளும் பிள்ளையுமாக ஜோடி போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்றார்கள். ஆச்சிக்கு நிம்மதியாக இருந்தது. சிறிது காலத்தில் கொளஞ்சி மட்டும் போதும் என்றாள். அழகம்மாள் எப்போதாவது கிடைக்கும் விவசாய வேலையைப் பார்த்துக்கொண்டும் பிள்ளைக்கும் தனக்குமாய் சோறாக்கி வைத்துக் கொண்டும் தனிமையும் பயமும் ஒழுகும் கூரைவீட்டில் காத்துக் கிடந்தாள்.

கொளஞ்சிக்கு முதலாளி வீட்டின் ஒவ்வொரு அசைவும் தன் நடத்தைகளுக்குள் வந்தபோது பூபாலன் படிப்பு முடித்து வீடு வந்தான். எந்த வகையிலும் அழகாய் தெரியாத அவளிடம் மயங்கி நின்றான். அவள் உடலைத் தாண்டி ஏதோ ஒரு மாய வசீகரத்தில் போதை வயப்பட்டவனாக நின்றுகொண்டிருந்தான். ஏரிக்கரை வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு அன்னக் கூடையில் சோறு வளர்த்துக் கொண்டும் குழம்பு வாளியைத் தூக்கிக் கொண்டும் வெயிலில் சென்றாள். பூபாலன் அவளுக்கு ஒத்தாசையாய் குழம்பு வாளியை சைக்கிள் ஓட்டியபடி வாங்கிச் சென்றான். நாவல்பழ மரத்தடியில் வேலை செய்த ஆட்களுக்கு வயிறார சப்பாடு போட்டாள். ஈரம் தீராத உதடுகளில் நாவல் பழங்களை சப்பித் தின்றாள். உதடுகளும் உதடுகளின் சுற்றுப்புறங்களும் ரோஸ்கலர் படிந்திருக்க வீடு வந்த போது, பூபாலன் அவள் நாவல்பழம் தின்ற வக்கணையை கேலி செய்து சிரித்தான். முதலாளி மகனின் கேலி வெட்கத்தை மீறி சங்கடத்தைத் தருவித்தது. ஓடி ஒளிந்துகொண்டாள். அவனுக்காக ஓடியதும் ஒளிந்ததும் இருவருக்குமான சுவாரஸ்யமான காரியமாக இருந்தது. அவள் ஓடி ஓடி ஒளிவதற்கான செயல்களையும் பேச்சுக்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தான். அவன் குரலைக் கேட்காமல் அவளுக்கு அவ்வீட்டின் இருப்பு நிலைக்கவில்லை. அவளின் அசைவுகள் இல்லாத அவ்விட்டின் இரவுப் பொழுதுகளை, பகலில் நிகழ்ந்தவைகளை நினைத்துக் கழித்தான். பகல்கள் மிகச் சிறியதாகவும் இரவுகள் மிக நீண்டதாகவும் போய்க்கொண்டிருந்தது. கொளஞ்சி பிள்ளைமார் தெருவில் மோர் விற்கச் சென்றபோது நாய்கடித்து குருவிக்கார தாத்தாவிடம் விபூதி வைத்தியம் செய்துகொண்டு வேலைக்கு வராமல் அழகம்மாளை அனுப்பி வைத்தாள். அழகம்மாள் மாலை மாலையாய் அழுதாள் ஆச்சியிடம். பூபாலன் அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது. சாணி மெழுகிய தரையில் சாக்கு விரித்துப் படுத்துக் கிடந்தாள். டாக்டரிடம் செல்ல பணம் கொடுத்தான். அவளை பஸ்ஸில் வரச் சொல்லி டாக்டர் வசிக்கும் தெருவில் சைக்கிளில் காத்திருந்தான். கடைத் தெருவில் இருவரும் பேசிக்கொண்டு சென்றார்கள். நீ இல்லையென்றால் செத்துப் போய்விடுவேன் என்றான். அவனுக்காக, அவ்வார்த்தைகளுக்காக அழத் தொடங்கினாள்.

இருவரும் சேர்ந்து பிடித்துக்கொண்ட போட்டோவை கொளஞ்சி அடுக்குப்பானையில் ஒளித்து வைத்தாள். பழந்துணி சுருட்டி. கொளஞ்சி இருளில் அரட்டிக்கொண்டு கிடந்தாள். அழகம்மாளுக்கு பயம் பற்றிக்கொண்டு பக்கத்து வீடுகளை துணைக்கு அழைத்தாள் அவர்கள் தூக்கம்போன கண்களுடன் குருவிக்கார தாத்தாவைக் கூட்டி வந்தார்கள். பிள்ளை தலை மயிரைப் பரப்பிப் போட்டுக் கொண்டு பற்களை நறநறவெனக் கடித்தாள். குருவிக்கார தாத்தா பிள்ளையை ஆதுரமாகத் தழுவித் தூக்கினார். அது அவர் மேல் காறித்துப்பியது. மயிரைக் கொத்தாக பிடித்து தூக்கி அறைந்தார். பிள்ளை சுருண்டு விழுந்தாள். கொளஞ்சியின் மேலெல்லாம் திருநீற்று சாம்பல் பூசிவிட்டு அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அழகம்மாள்.

தடிமனான இரவுகள் அவளை மூச்சுத் திணற வைத்தது. தெருவில் ஆடைகளைக் களைந்து ஓலமிட்டபடி கத்திக்கொண்டு ஓடினாள் கொளஞ்சி. பிரம்படியும் நெருப்புச் சூடும் தடம்பதித்துக் கிடந்தது அவளுடலில். பகல் முழுக்க திராணியின்றி சுருண்டு கிடந்த பிள்ளையை வெந்நீர் வைத்துக் குளிப்பாட்டினாள் அழகம்மாள். சடை பின்னிப் பூ வைத்து ஆடை மாற்றி மடியில் கிடத்தி கொண்டு அழத் தொடங்கினாள். கொளஞ்சியும் சேர்ந்துகொண்டு அழுதாள்.

பூபாலனுக்கு மீசைக்காரர் கல்யாணப் பேச்சைத் துவங்கத் தொடங்கியதுமே கொளஞ்சியைக் கட்டிக்கொள்ளப் போவதாகச் சொன்னான். கொளஞ்சியைக் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றான் பூபாலன். அழகம்மாள் அவனுக்கு கும்பிடு போட்டு அழுதாள். அவன் சென்ற பிறகு ஊதாங்குழலை அடுப்பில் சூடேற்றி கொளஞ்சியை மிரட்டினாள். கொளஞ்சி அடுப்பங்கரையில் ஆட்காட்டி விரலில் ரத்தமெடுத்து கொளஞ்சி - பூபாலன் என தரையில் எழுதியதை சாணியால் மெழுகி அழகம்மாளால் மறைத்துவிட முடியவில்லை

ஆச்சியின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்டு சென்றார்கள். வந்தவர்களுக்கு விதவிதமாக ஆக்கிப்போட்டு மகிழ்ச்சியூட்டினாள் ஆச்சி. பூபாலனிடம் எல்லோரும் வேலைக்கார பறைச்சியை எப்படி மருமகளாக்குவது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். மீசைக்காரர் காரெடுத்துச் சென்று காரிய வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தார். பூபாலன் இன்னும் படிக்க வேண்டும் என்றான். " கட்டிக் கொண்டு படி "என்றார்கள். பார்த்திருக்கும் பெண் பாரம்பரியமிக்க வீட்டின் குணவதி என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆச்சி.

கரும்புக் கொல்லையில் வெய்யில் மிதக்கும் வேளையில் இரண்டு கலர் பாட்டில்களை எடுத்து வைத்தான் கொளஞ்சியிடம். முகம் இறுகி கட்டிக் கொண்டாள் அவனை. இரண்டு பாட்டில்கள் காத்திருக்க இருவரும் புணர்ந்து களைத்தார்கள். இருவரும் கையிலெடுத்துக் கொண்ட பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள். அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவன் குடிக்கத் தொடங்கினான். அவள் அவன் குடிப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவளைப் பார்த்தான். நொடிகளில் வேற்றுமையில் அவன் மரணத்தை சம்பவிக்கப் போகிறவனாக அவளிடமிருந்து மாறுபட்டுப் போனான். பாட்டிலை வைத்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவன் அவளைக் குடிக்கச் சொன்னான். அவள் அவனுக்குமேலும் மேலும் முத்தங்களைக் கொடுத்தாள். சட்டென்று கோணிக்கொண்ட அவன் உடல் வலிப்பு போல் இழுக்கத் தொடங்கியதை விலகி நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள், உலர்ந்து போய். சிறிது நேரத்தில், சுடப்பட்ட ஒரு மூர்க்கமான விலங்குபோல் அலங்கோலமாய் கோணிக்கொண்டு கிடந்தான். மிச்சமிருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடத் தொடங்கினாள் பயத்துடன். சிறிது நேரத்தில் அவன் உடலில் ஈ மொய்க்கத் தொடங்கியது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
----------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment