Thursday 14 March 2013

TAMIL KATHAI

-------------------------------------------------------------------

சிறுகதைகள்


விஷக்கடி

அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை.

வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. "ஸாரி ஸார்" என்ற அழைப்புக்குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது.

காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதிவிறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகைபோல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன.
இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை.

கீழ்வீடு காலியாக இருந்தது. நல்ல வாடகை, திகைகிற வரை வீட்டுக்காரர் வாடகைக்கு விடப்போவதில்லை. செண்பக தேவியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார். வீடு பார்க்க வருகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டைத் திறந்த காட்டவேண்டும்.
"இதோ வர்றேன்"
எழுந்து வீடு காட்டுவதற்காக கையில் சாவியை எடுத்துக்கொண்டு கீழிறங்கினாள்.
கீழ்வீட்டுக்கு ஒரு அழைப்பு மணியும், மேல் வீட்டுக்கு ஒன்றும் தனித்தனியாக இருந்தன. அம்புக் குறியிடப்பட்டிருப்பதைப் பார்த்து, வலது பக்க அழைப்பு மணியை அழுத்தியிருக்க வேண்டும்.
அழைப்பு மணிக்கு பதில் அவரே குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். வந்தவருக்கு அவ்வளவு விபரம் பத்தாது.
களைத்து வாசற்படியில் உட்கார்ந்து முட்டிக் காலில் தலைசாய்த்திருந்தார். செண்பக தேவிக்கு முதுகுப் பக்கம் முதலில் தென்பட்டது.
காலடிச் சத்தம் கேட்டு, விருட்டென்று தலை திரும்பினார்.
"ஐயா நீங்களா?"
செண்பகதேவி அதிசயித்து நின்றுவிட்டாள்.
அந்த மனிதரது கடந்தகாலத்துக்கும், கிழிந்த அழுக்குத் துணிபோல் நிற்கும் நிகழ்காலத்துக்குமிடையே எட்டு வருடம் ஓடிவிட்டது. செண்பகதேவி இரண்டுபிள்ளைகளுக்குத் தாயாகிவிட்டாள்.
"ஞாபகம் இருக்கா தாயீ.....""
இழந்த குரல் இழுவையாய் வந்தது.
"இல்லாம என்ன?"
ஆதரவாய் மேலே கூட்டிக் கொண்டு நடந்தாள்."
மதுரைக்கார முருகையா வீடு இதுதானே?"
எட்டு வருசங்கள் முன் ஊரில் அவரை முதன் முதல் செண்பகதேவி சந்தித்தது ஒரு தனீ நாடகம். அவர் கேட்டுக் கொண்டு வந்தது, நத்தையின் ஊர்தல்போல் தயங்கித் தயங்கி விசாரித்தது.
மதுரைக்கார முருகையா வீடு இதுதானே?"
வீட்டு முன் நின்று அவர் கேட்டார். "நீங்க யாரு?" செண்பகதேவி எதிர்க்கேள்வியடித்தாள். வீடு தப்பிருச்சா? அவர் ஏறிட்டுப் பார்த்தார்.
"நீங்க யாரு?" வீடு ஒன்னும் தப்பலை. இங்கதான் இருக்கு"
அவள் கேட்ட கேள்வி பதிலளிக்கப்படாது அப்படியே கிடந்தது.
"நா சோறு வாங்குறவன். கொஞ்சம் கோழிக் கறியும் சோறும் இருந்தா போடு தாயீ" இரண்டு கையை அளவாய்க் குவித்துக் காட்டினார்.
"அதென்ன கோழிக்கறி, சோறுன்னு திட்டமா கேக்குறீங்க?"
"இன்னைக்கு விசேஷம். பொங்கலுக்கு மறுநாள். கறிநாள். எல்லா வீட்லயும் கவுச்சி இருக்குமின்னு தெரியும் அதான்
கேட்டேன்".
புதுவெள்ளை வேட்டி, புதுச்சட்டை கோடித் துணி என்பதற்கு வேட்டி முந்தி, சட்டை நுனியில் மஞ்சள் தடவிய அடையாளம் கத்தரிப்பூ வண்ணத்தில் சன்னக்கரையுள்ள துண்டு தோளில் தொய்வாய்க் கிடந்தது. தோற்றத்தில் புதுமாப்பிள்ளை மாதிரியான ஒருவர் சடாரென்ற பிச்சைக்காரராக ஆவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. "அன்னம் போடுங்கம்மா" என்று இழந்த குரல் அந்தத் தொண்டைக் குழியிலிருந்து எழுந்து வரும் என்றோ, குரல்போகும் திசையில் ஏனம் ஏந்திய இருகைகளும் நிற்கும் என்றோ அறிகுறி தெரியவில்லை. முன்னே போகவிட்டு, பின்னே பார்க்க வைக்கும் அந்த உடற்கட்டுமானம், ஐம்பத்தைந்து வயதைத் தூரத் தூக்கியெறிந்திருந்தது.
"அப்படியும் சோறு வாங்க ஏனம் ஒன்னும் கொண்டு வரலை?"
"ஏனம் இல்லைன்னா என்ன? ஒரு இலை வாங்கிட்டு வந்து ஓரமா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறேன்"
"ஐயா வாங்க வாங்க ஒங்களத் தேடித்தான் மேற்கே போயிருந்தேன்"
எசப்பாட்டுப் போல் செண்பகதேவி பார்வைக்காரர் உரையாடலை உடைத்துக்கொண்டு முருகையா படபடவென்று உள்ளே வந்தார்.
"பாயை எடுத்து விரிம்மா"
வந்தவர் பார்வை பார்க்கிற சீனி குருசாமி என்பது அப்போதுதான் தெரிந்தது. யாரைத் தேடி மேற்குத் தெருப்பக்கம் அய்யா போனாரோ, அவர் ஏற்கனவே வந்து விட்டார்.
"விசாரணை கடுமையாத்தான் வந்திச்சி" நைப்பாய் சிரித்தபடியே உள்ளே வந்து உட்கார்ந்தார் பார்வைக்காரர். "தாயி வேப்பிலைதான் பிடிக்கலை. எல்லாக் கேள்வியும் கேட்டிருச்சி."
செண்பகதேவிக்கு வெட்கமாக இருந்தது. அய்யா தேடிப்போன ஆள் இவர்தான் என்று முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே என்று நினைத்தாள். இன்னார் வீட்டில் பெண் இருக்கிறது, இன்னின்னார் வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு இணைத்து வைப்பது என்ற சுபகாரிய வேலை அவருக்கு இருந்தது. மதுரைக்கார முருகையா வீட்டில் ஒரு பெண் இருக்கிறது. போய்ப் பாருங்கள் என்று சொல்லி பார்வைக்கார சீனிகுருசாமி வந்தார். வந்த இடத்தில் வேலை மாறிவிட்டது. உழைக்கிற மாடு ஊர்மேல போனா அங்கயும் ரெண்டு ஏரு கட்டி உழச் சொல்வாங்களாம், என்கிற கதையாக அவர் நிலை ஆகிவிட்டது. பெண்ணோட பெற்றோரைச் சந்தித்துப் போக வந்த இடத்தில் கையில் வேப்பங் குலையைக் கொடுத்து, கொஞ்சம் பார்வை பார்த்துப் போகச் சொன்னார்கள். வந்த காரியத்தை வெளியில் விடாமல், மடக்கி உள்ளே வைத்துவிட்டார்.
வலது காலை குத்துக்காலிட்டு, இடதை மடக்கி மணப்பெண் போல் உட்கார்ந்தாள் செண்பகதேவி. அவளது கை வலதுகால் மேல் கிடந்தது.
"கையைக் கீழே போடு தாயி"
பார்வைக்காரர் சொன்னார். எந்த அங்கத்துக்கு பார்வை பார்க்கிறாரோ, அந்த அங்கத்துக்கு மறைப்பு கூடாது. செண்பகதேவிக்குள் குமரிக் கூச்சம் ஓடியது. வலது பாதத்தின் மேல் தொங்கவிட்டிருந்த கையை எடுத்து கீழே விட்டாள். கல்லூரிப் படிப்பு முடித்திருந்தாள். அஞ்சல் வழிக்கல்வியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தாள். அது கிராமம் அவள் பெண். மனிதவெக்கை வீசியடிக்க பெண்டுகள் நெருக்கியடிக்கும் இடத்தில் உடலை கூச்சத்துடன் நெளிந்தாள். அவளுக்கு அண்டக் கொடுத்து உட்கார்ந்திருந்த அம்மா இடுப்பில் லேசாய்க் கிள்ளி "நெளியாதே" என்றாள். இன்னும் நெளிந்தாள்.
சீனிகுருசாமி, செண்பகதேவியின் வலதுகால் பாதத்தை தடவினார். கணுக்காலிலிருந்து முழங்கால்வரை ஆமை முதுகு போல் வீங்கி இருந்தது; காலின் மேல் ஒரு ஆமை உட்கார்ந்திருக்க அதைத் தூக்கிக் கொண்டு நடப்பது மாதிரி இருந்தது. விஷக்கடி எதனால் என்று அறிய முடியவில்லை.
இராமநாதபுரம் வரை போய்ப் பார்த்துவிட்டாள். மருத்துவ வகைகள் எவை எவை உண்டோ, அவைகள் இருந்த இடத்துக்கெல்லாம் போய்ப் பார்த்தாகிவிட்டது. கடைசியாய் எம்.டி.டாக்டரிடம் காட்டினார்கள். நீர்க்கட்டு அல்லது வாயுக் கோளாறாக இருக்கும் என்றார். வாயுத்தொல்லையென்றால் உடலின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் வீக்கம் முழுங்காலின் கீழ்ப்பகுதியிலேயே தங்கிவிட்டது; தொடர்ந்து ஊசி போட்டால் சரியாகிவிடும் என்றார். சரியாக இல்லையென்றால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். விஷக்கடி என்பது நாட்டுப்புற வார்த்தை. பொதுவான ஒரு சொல். அப்படியொரு சொல், மருத்துவ அகராதியிலோ, ஆங்கில மருத்துவப் புழக்கத்திலோ கிடையாது என்றார் எம்.டி.மருத்துவர்.
இங்கிலீஷ் மருந்தை உடனே நிறுத்தணும் என்பது பார்வைக்காரர் போட்ட கட்டளையாக இருந்தது; கையில் வேப்பங்குலை எடுப்பதற்கு முன்பே பார்வைக்காரர் போட்ட நிபந்தனை; இங்கிலீஷ் மருத்தின் பேரில் பார்வை வைத்தியத்துக்கு அதிகாரம் இல்லை.
"இந்த வீடு ஒனக்கு சொந்த வீடாம்மா?"
முகத்துக்கு நேரே உயர்ந்த பார்வைக்காரரின் சுட்டுவிரலையே பார்த்தாள் செண்பகதேவி.
"இந்த வீடு ஒன்னது இல்லை, இல்லையா?"
அவளுக்குப் புரியாததால் ஒரு பதிலும் இல்லை. இவர் என்ன கேட்கிறார் என்ற கேள்வி குறியுடன் அம்மா பக்கம் திரும்பினாள். அம்மாவுக்குப் புரிந்தது. சிறு சிரிப்புடன் "நீங்க சொல்றது நிஜம்தான்" என்றாள். பார்வைக்காரர் உலக யதார்த்தத்திலிருந்து எடுத்து வைத்ததை நாற்பது வருஷ வாழ்வின் சுயானுபவத்திலிருந்து அம்மாவினால் எளிதாகப் பிடித்துக்கொள்ள முடிந்தது. "ஆமா, ஆமா" என்றாள்.
கல்யாணமான பின் இன்னொரு வீட்டுக்கு நடக்க வேண்டியவளாக பெண் பிறவி இருக்கிறாள். இந்த வீடு அவளுடைய வீடு இல்லை. போய்ச் சேருகிற இடம் அவளுக்குச் சொந்தவீடு, வாழ்க்கையின் கால்ப் பகுதி மட்டுமே பிறந்த வீட்டில் கழிகிறது. மீதி முக்கால் வாழ்க்கை அல்லது முழுவாழ்கை, இன்னொரு வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அந்த இன்னொரு வீட்டுக்குச் சொந்த வீட்டுக்குப் போக காத்துக்கொண்டிருக்கிறாள்.
சொந்த வீட்டுக்குப் போய்ச் சேருகிறபோது உடம்பில் ஒரு ஒச்சத்துடன் எந்தப் பெண்ணும் போகக் கூடாது. "கல்யாணக் குத்தம் எந்தலையில் விழுந்திரக்கூடாது பாரு அதுக்குத்தான் இந்தக் குருவங்குலையை (வேப்பங்குலை) எடுத்தேன்"
வேப்பங்குலை என்ற வார்த்தையை அவர் ஒரு போதும் உச்சரிப்பதில்லை. சில தொழில்களுக்கு தொழில்முறை வார்த்தைகள் இருக்கின்றன. அதைத் தாண்டி வார்த்தைகளை பயன்படுத்துகிறபோது, வீரியமும் மதிப்பும் குறைந்து போகின்றன. தோளிலிருந்த துண்டை இறக்கி, இடுப்பில் சுற்றினார். விபூதிப்பையை எடுத்து நெற்றியில் கைகளில் பூசிக்கொண்டார். ஒரு சிட்டிகையளவு விபூதி எடுத்து, செண்பகதேவியின் நெற்றி உச்சி மேட்டில் வீசினார்.
வேப்பங்குலை உயர்ந்தது. அதற்கு ஒரு உயர அளவு உண்டு. எந்த அங்கத்துக்குப் பார்வை பார்க்கப்படுகிறதோ, அதற்கு ஒரு சாண் உயரத்தில் சுற்றவேண்டும். முதலில் தரைக்கு மேல் பரவிப் பரவி சுற்றியது. படிப்படியாய் அங்குலம் அங்குலமாய் உயரம் கூடிச் சுழன்றது. முகத்துக்கு நேரெதிர் வந்ததும் நின்று கொஞ்சநேரம் தலையை இடப்பக்கம் திருப்பி ஆடியது. பிறகு சர்ரென்ற பறவைபோல் கீழாகப் பாய்ந்து செண்பகாவின் முழங்காலுக்குக் கீழே இப்படியே சுழன்றது. மேலிருந்து கீழாகப் மூன்று தடவை இறக்கினார். இரு கண்களல் நெரியும் நீரை இரு விரல்களால் துடைத்துக் கொண்டேயிருந்தார். வாயிலிருந்து நெரித்துக் கொண்டு வரும் கொட்டாவியை இடது கையால் சுண்டி விட்டுக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் நெரித்துக்கொண்டு வருவது, கொட்டாவி அலகை நெருக்கியடித்து வெளியேறுவது, இரண்டும் பார்வை நன்றாகப் பிடிக்கிறதின் அடையாளங்கள்.
"நல்ல பார்வைன்னா, அப்படித்தான் பிடிக்கும்," கூட்டத்தில் ஒருவர் மெதுவாகச் சொன்னார்.
வேப்பங்குலையின் வீச்சுச் சத்தம் தவிர, வேறெதுவும் கேட்காத அமைதி. பேச்சுக் குரலின் சிறு அசைவுகூட அந்த நிசப்தத்தில் கல்லெறிந்தது போல் கெடுத்துவிடலாம்.
இருபுருவங்களுக்கிடையில் நெற்றிப் பள்ளத்தில் பார்வையை நிறுத்தினார். ஓடைக்கரை தெரிந்தது. ஓடைக்கரை மேல் பருவத்திப் பூத்த ஏடை மரம். வெண்குஞ்சங்கள் பின்னிய குடைகள் அடுக்கி வைத்தது போல் பூப்பூத்த நாலடுக்கு ஏடைமரம். பூக்கள் மின்னிய ஏடை மர உச்சியில் உருவு தெரிந்தது. நெற்றிப் பள்ளத்துக்கும் ஏடை மர உச்சிக்குமாக ஒளிப்பாய்ச்சலாய் உருவு வருவதும் போவதுமாக இருந்தது.
"உருவு தெரியுது" தன் புலப்பமாய் வந்தது.
அவரோட ஐயா குருவங்கலை (வேப்பங்குலை) மாற்றிக் கொடுக்கிறபோது, சீனிகுருசாமிக்கு வயது பத்தொன்பது. பரம்பரைக் கணக்கு ஒன்று அதன் பின்னால் இருந்தது. அதை வைத்துத்தான் மாற்றிக் கொடுத்தார். கன்னியாலம்மன் கோயிலில் வைத்து நடந்தது. ஊர் முழுதும் கூப்பிட்டு சாப்பாடு போட்டார். நாலு திசைகளுக்கும் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பியிருந்தார். நாலு ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், எல்லோருக்கும் சாப்பாட்டுத் திருப்தி முகத்தில் தெரிய, அறிவார்த்தமான ஆட்களெல்லாம் திரண்டிருந்தார்கள். எல்லா கன்னியாலம்மன் கோயில்களுக்கும் முன்னால் வழமையாய் நிற்கும் சூரிமரம் தளதளவென்று பசுமை ஒளியில் சாட்சியாய் நின்றது. தீபாராதனை காட்டி சாமி கும்பிடு நடத்தி குருவாங்குலை மாற்றிக் கொடுத்தார்.
தருமகாரியத்தை ஒப்புக்கொண்ட பிறகு அதை நிறைவேற்றுவதில் கவனம் கொள்ளவேண்டும். ஒழுக்கச் சிதைவு கூடாது. இளவட்ட ஆட்டதை ஒடுக்கிவைத்து விடவேண்டும். துப்புரவாக அதை துடைத்துக் தெளிவாய் பக்தி நிலை பூணவேண்டும். அப்போது உள்சுரப்பு வரும். தெய்வ உரு கிடைக்கும். மூடிய கண்கள் வழியாக பாய்கிற உருவை நெற்றிப் பள்ளத்துக்குள் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அதுதான் நல்ல பார்வை.
சிவலார்பட்டி தாய்க்கிராமம். அதை இட்டுத்தான் சுத்துப்பட்டு கிராமங்கள் முளைத்தன. சவலைப் பிள்ளையாய் தாயின் முந்தானையைப் பிடித்தபடி கிடந்த சுத்துப்பட்டு கிராமங்கள் அதிசயம்போல் சுறுசுறுப்பாக எழுந்து நடமாடிக் கொண்டன. ஈன்ற கன்றுக்குட்டி போல தம்மீது படர்ந்திருக்கிற சோம்பல் கசடுகளை நீக்கிவிட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றன. படிப்பு, வேலை, வியாபாரம் என்று சேய்க்கிராமங்கள் முந்திக்கொள்ள, வயசாளி போல தாய்க் கிராமம் தவங்கி விட்டது. அய்யா வடக்கே மாடுபிடிக்கப் போனார் ஜோடி 25 ரூபாய். அன்றைக்கு வசமான மாடுகள் சிக்கின. சிவலார்பட்டியில் ஒரு விவசாயி ராத்திரிப் பொழுதில் மாட்டுக்குக் கூளம் பறிக்க படப்புக்குப் போயிருக்கிறார். படப்படியில் கிடந்த ஒரு பாம்பு "படக்" கென்று கொத்தியது. நல்ல பாம்பு. விஷம் சிரசுக்கேறி, தள்ளாடிக் கீழே சாய்ந்தார். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரைக் கயிற்றுக் கட்டிலில் போட்டிருந்தார்கள். உள்ளூர் மருத்துவன் உள்மருந்துகள் கொடுத்துப் பார்த்தும், அசையாமல் கட்டைமாதிரிக் கிடந்தார். சாயந்தரமானபோது, தேர்கட்டி மயானத்திற்கு எடுத்துப் போனார்கள்.
மாடுகளுடன் அய்யா சிவலார்பட்டிக்குள் நுழைந்தபோது, ஊர் மௌனத்தில் உறைந்து கிடந்தது. காற்றசைவு இல்லை. மயானம் ஊருக்குள் மாறி உட்கார்ந்து விட்டதுபோல் தெரிந்தது. ஒரு பாம்பு, ஊர் மொத்தத்தையும் அரட்டி வைத்துவிட்டிருப்பது தெரிந்தது. அய்யா, கிடு, கிடுவென்று சுடுகாடு நோக்கி நடந்தார். கட்டைகள் அடுக்கிக் கிடத்திய உடல் எருவாட்டிகள் மூடி மூட்டத்திற்குத் தயாராய் இருந்தது. முகம் மீதி வைக்கப்பட்டிருந்தது. சாய்ந்தர இருட்டுக் கவிவைச் சுற்றிலும் அழுது திகைக்கிறவர்களின் முகங்கள் இன்னும் விரைவுபடுத்தியிருந்தன.
அய்யா போனதும் கூட்டம் விலகியது. முகத்துக்கு நேரே காதுகள் வைத்துக் கவனித்தார்.
"ஆள் சாகலே ஊருக்குத் தூக்கிட்டுவாங்க"
எந்தப் படப்புக்கடியில் இருந்து நாகம் தீண்டியதோ, அந்த இடத்துக்கு எடுத்து வரச் சொன்னார். ஒரு குத்து வேப்பங்கொழுந்து, ஒரு கை துளசி இலை, கொஞ்சம் மிளகு, இஞ்சி அரைத்து வரச்செய்தார். கடைவாயை அகட்டி, கெட்டித்த பற்களைத் திறந்து அரைப்படிச்சாறு உள்ளே கொடுத்தார். மளமளவென்று தடையில்லாமல் இறங்கியது. உயிர்கழன்று விட்டதென்றால் அல்லது கழன்று போகிற தருணமாக இருந்தால் பால் விட்டாலும் உள்ளே இறங்காது, மூச்சுக்காற்று தொண்டைக் குழி திறந்து உள்ளே விழுகிறது. கையில் திறமாய் வேப்பங்குலை ஏந்தினார். குருவை நினைத்து வேப்பங்குலையை இரு கைகளிலும் நெற்றிக்கு நேரேவைத்து முருகா...வென்றார்.
"ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வாங்க" என்றார். கண்கள் நீரால் நெரிந்தன. சகல ஜீவராசிகளுக்கும் இரக்கப்பட்டு கருணையால் வாழ்வு எய்திச் செழிக்க வைப்பதாய் கண்ணீர் மளமள வென்று வழிந்தது. அவ்வளவு கண்ணீர் எங்கிருந்தது என்று தெரியவில்லை. வாய், அதக்கி அதக்கி கொட்டாவி பெருக்கெடுத்தது. இடது கையால் கண்களைத் துடைப்பதும், பிறகு அதே கையால் கொட்டாவியைச் சுண்டி விடுவதும் மாற்றி மாற்றி தாளலயமாய் நடந்தது. மந்திரிக்க மந்திரிக்க படப்புக்கு அடியில் ஒடுங்கியிருந்த பாம்பு இருப்பிடம் நீங்கி வெளியில் ஊர்ந்து வந்தது. ஒரு வெள்ளி அருணாக்கயிறு அசைவதுபோல் பாம்பு ஊர்ந்து வந்தது. "பெரிய பாம்பு... பெரிய பாம்பு" கூட்டம் அலறிப்புரண்டது. கட்டையாய்க் கிடந்தவனின் பெருவிரல் முனையில் வாய் பொருத்திய பாம்பு விஷத்தை திருப்பி உறிஞ்சியது. சுழலும் வேப்பங்குலையை நோக்கி தலை தூக்கி நின்றது.
பால் கிண்ணத்தை, அய்யா அதன் முன் வைத்தார். பாலைக் குடித்துவிட்டு அசைந்து அசைந்து கிழக்கு நோக்கி மறைந்தது. விஷம் இறக்க மட்டுமே தெரிந்த ஒரு பாம்பு, சொன்னசொல் கேட்கிற நல்ல பிள்ளையாய், வேப்பங்குலை மந்திரிப்புக்குள் அடங்கிக் கட்டுப்பட்டு நடந்த காட்சி, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பாம்புக்கடி பட்ட இடத்தை அய்யா பார்த்தார். பல் பதிவு தெரிந்தது.
பாம்பு பல் பதிக்கிற கோணம் முக்கியம். அலகு சாய்த்துக் கொத்தினால் சக்தி கூடுதல். நேரே கொத்தினால் வீரியம் குறைவு கொத்துப்பட்ட சிவலார்பட்டி சம்சாரிக்கு பாம்பின் பல் நேரெ பதிந்திருந்தது. மூன்று பல் மட்டும் தான். நான்கு பல் பதிந்ததென்றால் ஆள் உயிரைக் காலியாக்கி விடும். நல்ல பாம்பு, விரிசங்கட்டை (விரியன் பாம்பு) இரண்டும் பாம்பு வகைகளிலே விஷம் கூடுதலானவை. அந்த சம்சாரியைக் கொத்தி மரணத்திற்குள் அனுப்பியது நல்ல பாம்பு வகை.
மரணத்துக்குள் போன விவசாயியின் உயிரை மீட்டெடுத்துக்கொண்டு வந்த அய்யாவை சிவலார்பட்டி கிராமமே திரண்டு, வண்டிகட்டி, ஊர்வலம்போல் வந்து ஊரில் வந்து விட்டுப்போனார்கள். அவர்களுடன் இரண்டு கோட்டை கம்பம் புல்லும் ஒரு பால்மாடும் வந்தது. அய்யா இறந்தபிறகு அவருடைய சமாதியில் ஒவ்வொரு வருசமும் சிவலார்பட்டிக்காரர்கள் ஊரோடு வந்து குருபூசை நடத்திப்போனார்கள்.
கைக்குள் அடங்கிச் சுற்றிய வேப்பங்குலையில் வேகம் மெல்ல மெல்லக் குறைந்தது. ஓட்டப் பந்தயக்காரன் எல்லையை மிதித்த பிறகு கொஞ்ச தூரம் ஓடி நிற்கிற காட்சிபோல் தென்பட்டது.
"ஒரு குத்து குருவங்குலை" - சீனிகுருசாமி வேப்பிலையைப் பறித்து அம்மாவின் கையில் கொடுத்தார். அதே மாதிரி கையளவு துளசி இலை, பாகற்கொடி பூவுங் கொளுந்துமாய் அரைத்துச் சாறு எடுத்து உள்ளே கொடுக்க வேண்டுமென்றார். "இந்தக் கணக்கிலேயே ஒரு வாரம் கொடுங்க, பிறகு நா வந்து பார்க்கறேன்" என்றார். செண்பகதேவி அர்த்தமுள்ள புன்னகை செய்தாள். இதழ் பிரியாமல் சிரிப்பை உள்ளடக்கினாள். "என்ன சிரிப்பை மிழுங்குறே?" கனகு கேட்டபோது "இல்லே, ஒன்னுமில்லே" என்றாள்.
மந்திரிக்கிறது மட்டுமல்ல! உள்மருந்தும் கொடுக்கிறார் சுற்றி இருப்பவர்கள் பார்வை பார்ப்பதினால் மட்டுமே நோய் வாசியாகிறது என்று நம்புகிறார்கள். நம்பிக்கையை மட்டுமே கொண்டு அவர்கள் காலத்துக்குள் நகர்கிறார்கள். உடலுக்கு நேருகிற விஷக்கடி மட்டுமல்ல, வாழ்வின் எந்த விஷக்கடியும் இன்றில்லாவிட்டால் நாளை தீரும் என்ற நம்பிக்கையோடு வாழ்வுக்குள் நடக்கிறார்கள். அம்மாவுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. பார்வைக்காரரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"பாப்பாவுக்கு இப்ப தூரமா?" பார்வைக்காரர் கேட்டார்.
"இன்னைக்கு மூனாவது நாள்" அம்மாவின் வாய்ச்சொல் ரகசியம் போல் மெல்லக் கசிந்தது மாதவிடாய் ஆன பருவத்தில் பார்வை வைத்தியத்துக்கு நோயின் மேல் அதிகாரம் கிடையாது. அதைச் சொல்லிரணுமால்லே என்றார். முடிந்ததுக்குப் பிறகுதான் உள்மருந்து எடுக்க வேண்டும். ஒரு செண்பகதேவிக்கு மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த செண்பகதேவிகளுக்கும் தெரிந்துகொள்வற்கான சேதியாக இருந்தது.
"எல்லோரும் கேட்டுக்கோங்க என்றார்"
சேலைக்குள் பதுங்கியிருந்த கால்களின் நடையில் வித்தியாசம் தெரியவில்லை. கால்கள் பத்திரமாக இருக்கின்றன. "கால் எப்படியிருக்கு?" முதல் விசாரிப்பாக அதைக் கேட்க வேண்டுமென்று நினைத்தார் பார்வைக்காரர். கேட்டு அறிந்து கொள்ளத் தயக்கமிருந்தது. நேரடியாகக் கேட்காமல், பார்வையிலேயே தெரிந்துகொள்ள முடியும்.
பார்வை உதவாத இடத்தில் மட்டுமே வார்த்தைகள் உதவமுடியும் கணுக்காலுக்கு மேல் ஆடை கொஞ்சம் தூக்கிக் கொண்டால் போதும்; கண்டு கொள்ளமுடியும் கண்டுகொள்ளும் ஆவலில், கேட்டு அறிந்துகொள்ளும் நினைப்பை மடக்கி உள்ளே வைத்தார்.
"எத்தனை பிள்ளைக?" பார்வைக்காரர் கேட்டார்.
"ரெண்டு"
பள்ளிக்கூடம் போகுற வயசா?"
"ஆமா, போகுதுங்க"
"எப்ப கல்யாணம் நடந்திச்சி"
பார்வை வைத்தியம் பார்த்து முடித்த அடுத்த வருசமேகல்யாணம் நடந்திருக்கிறது. கல்யாணத்துக்கு கால்கள் தடையாயிருந்திருக்காது. எந்த சொஸ்திக் குறைவுமில்லாததால், கால்களை முன்னிட்டு கல்யாணம் நின்று போகவில்லை என நினைத்தார். ஒரு கத்தைக் காகிதங்களை பையிலிருந்து எடுத்து "இதப்பாரும்மா?" என்றார். "விலாசமெல்லாம் சரியாத்தான் இருக்கு"
"எனக்குத்தான் நிகால் பிடிபடலே." "போன் நம்பர் குறிச்சிருக்கீங்க.
போன் பண்ணியிருந்தா அவருக்குச் சொல்லி கூப்பிட்டு வரச் சொல்லியிருப்பனே"
வெயில் சுருண்ட புழுப்போல் இடம் கண்டுபிடிக்க அலைந்து வதங்கிவிட்டிருந்தார்.
ஒரு விலாசத்தை காட்டி தன் சொந்தக்காரர் இருப்பதாகவும் அங்கே போய் தங்கிக்கொள்ள முடியும் என்றார்.
"ஏன் இங்க தங்கலாம்? அவரு சாயந்தரம் வருவாரு"
பார்வைக்காரருக்கு அது ஒப்புதல் இல்லை. கால்களைப் பற்றி ஐயமறத் தெரிந்து கொள்ளாதபோது, தங்குவது என்ற முடிவு சரியாக வராது. மனசு ஐக்கியப்படாமல் தங்குவது சாத்தியப்படாது. கால்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன. மனிதனின் மொத்த வாழ்க்கையையும் எடுத்துச் செல்வதாக கால்கள் இருக்கின்றன. கால்களின் நடமாட்டம்தான் மனிதன் இயங்குவதை அடையாளப்படுத்துகிறது. மூளை மண்டலம்கூட, கால் நட மாட்டத்தை வைத்தே அசைவுகளைத் தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது.
சில நேரத்தில் கால்கள், வாழ்க்கையில் உறுதிப்பட தூண்களாக இருக்கலாம், கோபம் கொள்ளும், நேரங்களில் கால் ஒரு துடைப்பம் போலவும் விரியலாம்.
அவர் சாப்பிடுகிற தோரணையைக் கண்டு செண்பகதேவி ஆச்சரியப்பட்டாள். கூர்ந்து கவனித்தாள், சாப்பிடுகிறபோது மன்னன்மாதிரி உட்கார்ந்திருப்பாரே. அவர் இப்போது தென்படவில்லை. விரலால் நோண்டி நோண்டித் தாளித்த கருவேப்பிலை சோற்றில் கிடக்கும் சீரகம், கடுகு எல்லாவற்றைம் நுணுக்கு நுணுக்கி எடுத்து வைத்துவிடுவார். அவர் கழித்து வைத்தது மட்டும் ஒரு குத்து (கையளவு) வரும். இப்போது தென்படுகிறவர் எதையும் கழிக்காத மளமளவென்று உணவை உள்ளே தள்ளுகிற ஒரு புதிய மனுசர்.
அவருக்குள்ளிருந்த பழைய கம்பீரம் கழன்று வெகுநாட்களாகியிருந்தன. வளமான சொல், எடக்கு முடக்காய் பேசும் பேச்சு என சகலமும் காணாமல் போயிருந்தன. அவரிடமிருந்து தொலைந்து போனவைகளில் முக்கியமான பொருள் எந்நேரம் எங்கிருந்து பார்த்தாலும் இருட்டையும் பளிச்சென வெளிச்சமாக்குகிற முகம்.
புறப்படுகிற போது சொன்னார். பரிதாபமாக இருந்தது.
"ஏதாவது ஒரு வேலை இங்ஙன பாக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு தாயீ""
"என்ன வேலை?"
"கடையில, ஒட்டல்லே கணக்கெழுதுற வேலை"
ஏற்கனவே சில இடங்களில அந்த வேலை பார்த்திருக்கிறார். சொந்தக்காரர் வீட்டு முகவரி கொடுத்தார். அந்த விலாசத்தில் தான் இருப்பதாகவும், சொல்லியனுப்பினால் உடனே புறப்பட்டு வந்து விடுவேன் என்றும் சொன்னார். அவருடன், செண்பகதேவியும் கீழிறங்கிய போது தடுத்து விட்டார். "வேண்டாம் நா போய்க்கிறேன்" என்றார். கடைசிப் படிக்கட்டில் நின்றபடி தனக்கு மேலே படிக்கட்டுகளில் இறங்கிவரும் கால்களைப் பார்த்தார்.
வீதியில் இறங்கிய பார்வைக்காரர் கேட்டார் "அவரு ஒனக்குச் சொந்தமா?"
"ஆமா" அவள் சிரித்த சிரிப்பில் ஏன் அப்படிக் கேட்டீங்க என்ற கேள்வி வெளிப்பட்டது.
விஷக்கடி நீர் ஏறி வீங்கி பனை நிறத்தில் இருந்த அந்தக்கால் தன் முகத்தில் ஒங்கி ஒரு உதைவிட்டது போலிருந்தது, இரண்டு வழிகளில் மட்டுமே அந்தப் பெண்ணுக்கு சாபவிமோசனத்தின் கதவுகள் திறந்திருக்க முடியும். ஒன்று சொந்தக்காரன் என்பதால் திறக்கப் பட்டிருக்கலாம். அல்லது ஏராளமான சீர்வரிசை, சொத்து, ரொக்கம் ஆகியவைகளால் கறுத்து வீக்கமான அந்தக் கால் மறைக்கப்பட்டிருக்கும்.
பார்வைக்காரரின் கால்கள் மண்ணில் உறுதியாகப் பதியாமல் தளர்ந்தன. எதையோ தொலைத்து விட்டவர்போல் கூனிக்குனிந்து நடந்து போனவரை செண்பகதேவி வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--

சிறுகதைகள்


கனவுப் பூதம்

சோகமே உருவாக அமர்ந்திருந்தான் அரசி மதுவந்தி. அகண்ட அவள் விழிகளில் துயரம் தேங்கிக் கிடந்தது. சமீப காலமாக அவளை ஏதோ கவலை பிடித்து ஆட்டி வந்தது. அடிக்கடி, சோர்ந்த முகத்துடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்து விடுகிறாள்.

"உள்ளே வரலாமா அரசியாரே?"

குரலைக் கேட்ட மாத்திரத்தில் அரசியாரின் முகம் மாறியது. "வா கனகதாரா" என்றாள். வந்தது அமைச்சர் வித்யார்த்தியின் மனைவி கனகதாரா. அரண்மனையிலேயே, சொல்லப்போனால் அந்த பிரத்யுக தேசத்திலேயே மதுவந்திக்கு மிகவும் நெருக்கமானவள் கனகதாராதான்.

"ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தீர்கள் போலிருக்கிறது........ இடையூறு செய்துவிட்டேனோ?"

"ம்ம்ம்......அதெல்லாம் ஒன்றுமில்லை." சேடிப் பெண்டிரை வெளியேறுமாறு சைகை செய்தாள் மதுவந்தி.

"நான் சரியான இக்கட்டு ஒன்றில் மாட்டிக்கொண்டு விட்டேன் கனகதாரா. அதிலிருந்துவெளியேற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் யோசனை" வருத்தமுடன் சொன்னாள்.

"அப்படியென்ன அரசியாருக்கு இக்கட்டு?"

சிலகாலம் முன்பு க்ருஷ்ய தேசத்திலிருந்து சட்ஷயன் என்ற மாந்திரீகன் அரசனைக் காண வந்தான். அரசன் அநிருத்யபாலனுக்கு மாந்திரீகம் தொடர்பான விஷயங்களில் மட்டு மீறிய ஆவலும் ஈடுபாடும் இருந்து வந்தது. ஒரு திங்கள் சட்ஷயனை அரண்மனையில் தங்கவைத்து ராஜ உபசாரம் செய்தான் அரசன். தினமும் பலமணி நேரம் அரசனும் சட்ஷயனும் மாந்திரீகம் சம்பந்தமாக ரகசியமாக உரை யாடினர். சட்ஷயன் அரசனுக்குப் பல மாந்திரீக விஷயங்களைக் கற்றுத்தந்ததாகவும் அரண்மனையில் பேச்சு. அரசனது உபசரிப்பால் மனம் குளிர்ந்த சட்ஷயன், கிளம்பும்போது தன்னிடம் குற்றேவேல் புரிந்து வந்து பூதங்களில் ஒன்றை அரசனுக்குப் பரிசாகத் தந்துவிட்டுச் சென்றான்.

சட்ஷயன் அரசனுக்குப் பரிசாகத் தந்த பூதத்தின் பெயர் கனவுப் பூதம். அடுத்தவரது கனவில் நுழைந்து அவரறியாமல் அவர் காணும் கனவை அப்படியே கண்டுவந்து சொல்லக் கூடியது. பூதம் இரவில் மட்டுமே பூதத்திற்குண்டான குணங்களைக் கொண்டு விளங்கும். பகலில் அது அரண்மனை விதூஷகனைப் போன்ற உருவத்தில் அரசமண்டபத்தில் காணப்படும். அதன் சிருங்கார ரசம் சொட்டும் பேச்சை அரசன் மிகவும் விரும்பிக் கேட்பான். அவையில் பலருக்கு அதன் பேச்சு அருவருப் பூட்டியது. அரசனுக்குப் பயந்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டாமல் மறைத்து வந்தார்கள். அது மட்டுமன்றி அந்த விதூஷகன் தான் கனவுப்பூதம் என்று எல்லோரும் அறிந்திருந்ததால் எங்கே தங்கள் கனவில் புகுந்து தம்மை மீறி வெளிப்படும் பாதகமான எண்ணங்களை ஒற்றறிந்து அரசனிடம் அது சொல்லிவிடுமோ என்ற பயப்படவும் செய்தனர்.

அரசன் அநிருத்யபாலன் தீவிர உறங்காநோயினால் பாதிப்புற்றிருப்பதாகவும், இரவுகளில் உறங்காமல் உப்பரிகையில் உலாத்திக் கொண்டிருக்கும் அவனால் இனி ஒருபோதும் உறங்க முடியாதெனவும், உறங்க இயலாத காரணத்தால் இனி தன் வாழ்வில் எப்போதும் அவனால கனவு காணமுடியாதென்றும், அதனாலேயே அடுத்தவரது கனவை ஒற்றறியும் பூதத்தைக் கொண்டு அடுத்தவரது கனவுகளைக் கண்டு தனது கனவு ஏக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்வதாகவும் அரண்மனையில் ரகசியமாகப் பேசிக்கொண்டனர்.

கனவுப் பூதம் கனவுகளை ஒற்றறிந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தக் கனவுகளுக்குத் துல்லியமாகப் பலன்களைக் கணிப்பதிலும் திறமை பெற்றிருந்தது. இப்படித்தான் அது அநிருத்யபாலனின் தளபதி மௌத்திகவாசனது திட்டத்தைக் கண்டறிந்து அரசனிடம் சொன்னது. கனவுப் பூதம் மௌத்திகவாசனது கனவில் நுழைந்த போது விழுதூன்றிப் படர்ந்து கிடந்த ஆலமரமொன்றின் கிளையொன்றை யாருமற்ற இரவில் அவன் மறைந்திருந்து ரகசியமாக வெட்டுவதாகக் கண்ட கனவை ஒற்றறிந்து அரசனிடம் சொன்னது. அக் கனவின்படி மௌத்திகவாசன் பிரத்யுக தேசத்தின் ஒரு பகுதியைத் தந்திரமாகக் கைப்பற்ற மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகப் பூதம், கனவுக்கு வியாக்யாணமும் சொன்னது. அரசன் அநிருத்யபாலனும் மௌத்திகவாசனை ரகசியமாகக் கண்காணிக்கும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டான். கனவுப் பூதம் சொன்னது போலவே படையினரில் ஒரு பிரிவை கைக்குள் போட்டுக் கொண்டு திடீர்ப்புரட்சி மூலம் தேசத்தின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்ற அவன் ரகசியத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தக்க நேரத்தில் தளபதியை பிடித்து சிறையிலடைத்து நிகழவிருந்த புரட்சியை ஒடுக்கினான் அரசன்.

இப்படிப் பலரது கனவிலும் புகுந்து ஒற்றறிந்து சொன்ன கனவுப் பூதம் ஒரு நாள் விளையாட்டாக பட்ட மகிஷி மதுவந்தியின் கனவிலும் புகுந்தது. அன்றைக்குப் பார்த்து தன் கனவில் அவள் அவித்யுக தேச அரசன் சாம்பவகேசனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். கனவுப் பூதம் இதை அரசனிடம் சொல்லவில்லை. தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டது.

ஒரு நாள் அரசனில்லாத வேளை அந்தப்புரத்தில் நுழைந்து அரசி மதுவந்தியிட்ம் அவள் கண்ட கனவைப் பற்றிச் சொன்ன்து. அரசி ஆடிப் போனாள். அவையில் நிற்க வைத்து ஆடைகளைக் களைந்தது போல நெஞ்சம் பதறி உடல் குறுகிப் போனாள்.

சாம்பவகேசன் மதுவந்தியின் இளவயது கனவுப் புருஷன். அவளது தந்தையின் நாடான வசுத்யாயபுரியின் அண்டைநாடுதான் அவித்யுக தேசம். மதுவந்தியை சாம்பவகேசனுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலேயே பேசி முடித்திருந்தது. மணநாளை நோக்கிய ஏக்கத்துடன் பரஸ்பரம் எதிர்பார்ப்புடன் இருவரும் காத்திருந்த வேளையில் தான் வசுத்யாயபுரி பிருகத்ஷானர்களது படையெடுப்புக்கு ஆளானது. தன்னைக் காத்துக்கொள்வதற்கே பெரும் பிரயத்தனம் புரிய வேண்டியிருந்த அவித்யுக அரசன் சாம்பவசேகனால் மதுவந்தியின் தந்தைக்கு உதவ முடியாத நிலை.

எனவே பிரத்யுக மன்னன் அநிருத்யபாலனுக்கு, உதவிகேட்டு அவசரத் தூது அனுப்பப்பட்டது. பிரத்யுக தேசத்துப் படைகளை வசுத்யாயபுரிக்கு ஆதரவாகப் போரிட அனுப்புவதற்குப் பிரதிபலனாக மதுவந்தியை தனக்கு மணமுடித்துத் தரக் கேட்டான் அநிருத்யபாலன். மனமின்றி மகள் மதுவந்தியை அநிருத்யபாலனுக்கு மணமுடித்துத்தர வாக்களித்தார் வசுத்யாயபுரி மன்னர். அநிருத்யபாலனின் படைகள் பிருகத்ஷானர்களை விரட்டியடித்து வசுத்யாயபுரியை ஆபத்திலிருந்தும் காத்தன.

சண்டை முடிந்த பின் தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டு அநிருத்யபாலனை மணந்தாள் மதுவந்தி. அநிருத்யபாலனுக்கு அப்போது அகவை அறுபத்து மூன்று. ஏற்கனவே அவனுக்கு மூன்று மனைவியர். ஒருவருக்கும் புத்தியர பாக்கியம் இல்லை. பிரத்யுக தேச வழக்கப்படி அரசனுக்கு வாரிசை ஈன்று தருபவளே பட்டத்து மகிஷியாவாள். திருமணமான மறுவருடமே மதுவந்தி ஒர் ஆண் மக€வைப் பெற்றெடுத்தாள். பட்டத்து அரசியும் ஆனாள். ஆனால் அவள் மனதில் ஒரு மூலையில் எங்கோ சாம்பவகேசன் மீதான காதல் அவளறியாமலே துளிர்விட்டபடி இருந்திருக்கிறது. அதுதான் அன்று கனவில் அப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கனவை வெளியில் யாரிடமும் சொல்லாமல் வேண்டாமென கனவுப் பூதத்திடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டாள். பூதம் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தது. நீ கண்ட கனவை நான் யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒருமுறை நீ என் ஆசைக்கு இணங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வெளியேறிச் சென்றுவிட்டது.

"மனதின் விந்தைதானே கனவு. எங்கோ ஆழத்திலிருக்கும் காலம் கடந்த நினைவுகளும் கனவாகக் கூடுமல்லவா? அப்படிப்பட்ட கனவுக்கு நாமெப்படிப் பொறுப்பாக முடியும் கனகதாரா?"

"நீங்கள் சொல்வது சரிதான் அரசியாரே, ஆனால் இதை அந்த பூதத்துக்கோ அல்லது அரசருக்கோ நம்மால் விளங்கவைக்க முடியுமா?" தனது தோழியின் இக்கட்டை அறிந்து கனகதாரவும் கவலை கொண்டாள். இந்த இக்கட்டிலிருந்து வெளியேறும் வழி அவளுக்கும்புலப்படவில்லை.

"இதோ பார் கனகதாரா, அரசரை மணமுடித்த நாள் தொட்டு இன்றளவும் நான் சிந்தனையிலும் சரி, செயலிலும் சரி, பதிவிரதையாகவே இருக்கிறேன். ஆனால் கனவு என்பது என் கட்டுப்பாடுகளை மீறிய ஒன்று. அதற்கும் என் பதிவிரதைத் தன்மைக்கும் எந்த சம்பந்தமுமில்லையே."

விதூஷகன் பேசுகிறான்.

"அரசே முப்பது தசாப்தங்களுக்கு முன் க்ருஷ்ய தேசத்தில் வாழ்ந்த சமஸ்கிருதக் கவியொருவன் பாடிப்போன கவிதையைச் சொல்வேன், கனிவுடன் கேட்பீர். கவி சொல்கிறான். "கன்னிப் பெண்கள் கலவியில் ஈடுபடுவது எதனாலென்றால் அதில் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால். வேசையருக்குக் கலவி ஒரு பொருளீட்டும் வழி. விதவையருக்கோ தங்கள் கடந்த கால நினைவுகளை வருடிப் பார்க்குமொரு சந்தர்ப்பம். மனைவியருக்கு ஒரு நாளில் பல்வேறு கடமைகளுள் கலவியும் ஒன்று. அகவே இவ்வுலகில் பெண்டிர் கலவியின் பூரண இன்பத்தையும் துய்ப்பது கள்ளப் புணர்ச்சியில்தான்."

"ஆஹா, பேஷ்" என்கிறார் அரசர்.

அரண்மனையில் உலவ ஆரம்பித்த நாள் தொட்டே கனவுப் பூதத்துக்கு அரசி மதுவந்தி மீது ஒரு கண். அது என்னவோ மதுவந்தியைப் பார்க்கையில் எல்லாம் தானொரு பூத கணம் என்பதையும் மறந்து அதற்கு காதல் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்துவிடும். அவள் அரசனின் மனைவி, அதுவும் பட்டத்து ராணி. தன் மனதிலிருப்பது அரசருக்குத் தெரியவந்தால். பெரும் விபரீதமாகிவிடும். இப்படியெல்லாம் தனக்குள்ளேயே அது சிந்தித்தாலும் தன் இச்சையை அடக்கும் வழி மட்டும் அதற்கு புலப்படவில்லை. நிலை கொள்ளாமல் அது தவித்துக் கொண்டிருந்த போதுதான் எதேச்சையாக ஒரு நாள் அரசி மதுவந்தியின் கனவுக்குள் புகுந்து பார்த்தது.

வழக்கமாக பூத கணங்கள் மானுடரோடு காதல் உறவு கொள்வதில்லை. இருந்தாலும் சில விதிவிலக்குகள் உண்டு. மானுடரோடு கூடும் பட்சத்தில் பூதங்கள் தமக்குரிய மாய இயல்புகளை இழந்துவிடும் அபாயமும் உண்டு. கனவுப் பூதத்துக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்று தோன்றியது. மதுவந்தியுடன் ஒரு முறை கூடியிருந்து அதனால் உயிரே போனாலும் பரவாயில்லையெனும் அளவுக்கு உன்மத்தம் அதைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி சென்று பணிந்தும் குழைந்தும் மிரட்டியும் மதுவந்தியை தன் ஆசைக்குப் பணியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

"அரசியாரே, பரிவிருட்ஷ மலையடிவாரத்திலிருக்கும் ரிஷி ஒருவரிடமிருந்து மூலிகையொன்று பெற்று வந்திருக்கிறேன். உங்களது இக்கட்டு தீர இம்மூலிகை உதவிகரமாக இருக்கும்."

"என்ன மூலிகை, எப்படி அது என் இக்கட்டு தீர உதவமுடியும் கனகதாரா?"

"இந்த விசேஷ மூலிகையை ஒருவர் முகர்ந்தால் அவருக்குத் தன் பழைய நினைவுகளனைத்தும் மறந்து போகும். பல வருடத்து நினைவுகளை சுத்தமாக அழித்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை இது. இதை எப்படியாவது அந்த கனவுப்
பூதம் முகரும்படி செய்துவிடவேண்டும்."

"நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த மூலிகை பூதங்களிடம் பலிக்குமா?"

முயன்றுதான் பார்ப்போம், எனக்கென்னவோ பலிக்கும் என்றுதான் தோன்றுகிறது."

"சரி கனகதாரா. எப்படியோ இந்த இக்கட்டு நீங்கினால் சரி. நாள் ஒவ்வொன்றும் யுகமாகக் கழிகிறது எனக்கு."

கனவுப் பூதத்தின் இச்சைக்கு இணங்க இசைந்துவிட்டதாக மதுவந்தி அதற்கு ரகசியமாக தகவல் சொல்லியனுப்பினாள். அன்றைய தினம் பிரத்யுக நாடெங்கும் பெருமழை பெய்துகொண்டிருந்தது. அதிகாலை தொடங்கியே ஓயாது மழை கொட்டிக் கொண்டிருந்தது. நலக்குறைவு எனச்சொல்லி அன்றிரவு அரசரை அந்தப்புரம் வரவேண்டாமென கேட்டுக் கொண்டிருந்தாள். கனவுப்பூதம் இரண்டாம் சாமம் கடந்து வருவதாக ஏற்பாடு.

கனகதாரா பச்சைப் பனையோலைப் பெட்டியில் வைத்துக் கொடுத்தனுப்பியிருந்த மூலிகையை மஞ்சத்துக்கு அருகிலேயே வைத்திருந்தாள். பூதத்தின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஒரே பதற்றமாக இருந்தது. பூதம் வந்ததும் என்ன செய்யவேண்டுமென்பதை பலமுறை மனதில் ஒத்திகை பா‘த்திருந்தாள்.

முறுவலுடன் பூதத்தை வரவேற்று நைச்சியமாகப் பேச வேண்டும். பேசியபடியே, "உங்களுக்காக ஆபூர்வ மலரொன்றை கொண்டு வந்திருக்கிறேன். முகர்ந்து பார்த்து என்ன மலரென்று சொல்லுங்கள் பார்ப்போம்" என்று பனையோலைப் பெட்டியை பூதத்திடம் தர வேண்டும். பூதம் பெட்டியை வாங்கித் திறந்து முகர்ந்து பார்க்கும். உடனே மயங்கி விழுந்துவிடும். மயக்கம் தெளிந்து எழும்போது அதன் நினைவுகளனைத்தும் அழிந்திருக்கும். ஒரு வேளை பூதம் மயங்கி விழவில்லையாயின் மதுவந்தி மயங்கி விழுந்தவள்போல் நடித்து உடல் நலமில்லையென்று சொல்லி பூதத்தை பிறகொருநாள் வரும்படி சொல்லி அனுப்பி விடவேண்டும். ஒத்திகை கச்சிதம்தான். நிஜத்திலும் அப்படியே நடந்து விட வேண்டும். பூதம் மயங்கி விழுந்து அதன் நினைவுகள் அழிந்து போகவேண்டும்.

மதுவந்திக்கு நிலைகொள்ளவில்லை. இன்னும் இரண்டாம் சாமம் கடக்கவில்லை. திடீரென அவளுக்கு ஒரு ஐயம். பனையோலைப் பெட்டியில் மூலிகை நல்லவிதமாக இருக்கிறதா, அது தன் வேலையைச் சரியான விதத்தில் செய்யுமா? பனையோலைப் பெட்டியைக் கையிலெடுத்து மெதுவாகத் திறந்தாள். உள்ளிருந்த மூலிகையின் நெடி அவள் நாசியைத் தாக்கியது. அப்படியே மயங்கி மஞ்சத்தில் சரிந்தாள். அவள் நினைவு தப்பியது.

மழையில் நனைந்தபடி அந்தப்புரத்தை அடைந்த கனவுப் பூதம் ஒருக்களித்திருந்த கதவைத் திறந்தது உள்ளே நுழைந்தது. விளக்கு மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சிரமத்துடன் கண்களால் துழாவியபடியே அரசி மதுவந்தி மஞ்சத்தில் நிலைகுலைந்து கிடப்பதைக் கண்டது. காத்திருந்த களைப்பில் அரசியார் உறங்கிவிட்டிருக்க வேண்டும் என நினைத்த கனவுப் பூதம் உன்மத்தத்தின் விளிம்பில் நின்றது. அவளைத் தொட அதன் கைகள் பரபரத்தன. அவளது கால்களைத் தொட்டு மெதுவாக அசைத்து "மதுவந்தி" என்றது.

மயக்கம் நீங்கி எழுந்த மதுவந்திக்கு அந்தக் குறை வெளிச்சத்தில் எதிரில் ஒர் ஆடவன் நிற்பதை உணர சிறிது அவகாசம் பிடித்தது. அவள் முகம் ஒரு பூவைப் போல மலர்ந்தது. செல்லச் சிணுங்கலுடன் அவள் சொன்னாள்.

"ஏன் சாம்பவகேசரே இத்தனை தாமதம். பாருங்கள் காத்திருந்த களைப்பில் நான் உறங்கியே போய்விட்டிருக்கிறேன். ஆமாம் இன்று என் தந்தைக்குத் தெரியாமல் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தீர்கள்?"

கனவுப் பூதத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதிர்ச்சி நீங்காமலேயே அது அவசரம் அவசரமாக அந்தப்புரத்தைவிட்டு வெளியேறியது. கனத்த அதன் பாதச் சுவடுகளை மழை பின்தொடர்ந்து அழித்தபடியே வந்தது.

அன்றிலிருந்து இரவுகளில், உறக்கம் வராமல் அரண்மனை உப்பரிகையில் இரண்டு பேர் உலாத்துவதைப் பார்க்க முடிந்தது.

நன்றி: வார்த்தைப்பாடு
-----------------------------------------------------------------------------------

சிறுகதைகள்


எழுதி வைக்காதவை

கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா, சிகா என்று சொல்லவேண்டியதுதான். தாமதம், சிகாமணி உடனே புறப்பட்டு விடுவாள். நான் அவளை எங்கே கூப்பிட்டுக்கொண்டு போவேன் என்றும் அவளுக்குத் தெரியும். "வரும்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாமா" என்ற கேட்பாள். சட்டைப் பையைத் துளாவிக்கொண்டு பணம் இருக்கிறதா என்று பார்ப்பேன். "பர்ஸ் எடுத்துக்கிட்டேன்" என்று சிரிப்பாள்.

எத்தனை வருஷமாகச் சிகா இப்படியே சிரித்துக் கொண்டிருக்கிறாள். ஓரு கீரைத் தண்டைப் போலக் கணுக்கணுவாக முற்றி, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் அப்படியே இருப்பது இவளாகத்தான் இருக்கும். கனகராஜ் நல்ல குண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்பலவாணபுரத்திலிருந்து அம்பை ஆர்.எஸ் வரமிஞ்சிப் போனால், பஸ்ஸில் பதினைந்து நிமிஷம் ஆகும். அகஸ்தியர்பட்டி தாண்டி கோடரம்குளம்விலக்கு வருகிறவரை, ஒவ்வொரு தடவையும் எப்படிச் சொல்ல முடியாத ஒரு அமைதி வந்து நம்மிடம் சேர்கிறது என்று தெரியவில்லை. சிகாவும் இதை எத்தனையோ தடவை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி எல்லாம் தோன்றச் செய்தது எது. தூரத்தில் தெரிகிற மலைகளா, எங்கோ ஓடிக்கொண்டிருக்கிற ஆறா. இரண்டு பக்கமும் திறப்பாகக் கிடக்கிற வெளியா. "அழக் கூடாது மணி, பச்சை பிள்ளையா நீ " என்று பின் சீட்டில் இருந்து சிகாமணியின் அம்மா சொல்லிக் கொண்டே வந்தார்கள். சிகாவின் தங்கை பொன்னுக்குட்டியும் அழுது கொண்டிருந்தாள். இத்தனையிக்கும் பஸ் ஏறுகிற வரை அத்தானைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தவள் தான் அவள்.

கனகராஜ் இது எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதுபோலக் கைக்குட்டையால், முகத்தைக் துடைத்துக்கொண்டு, "ரவி அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமல்லவா" என்று கேட்டார். ஆமாம் என்ற சூட்கேஸ்களை எல்லாம் நகர்த்திக் கொண்டே சிகாவைப் பார்த்தேன். முன் பக்கத்துக் கம்பியில் குப்புறச் சாய்ந்து ரிஸ்ட்வாட்ச் கட்டின இடதுகையில் முகத்தை அழுத்தி சிகா அழுதுகொண்டிருந்தாள். பிச்சிப்பூ ஒரு ஒருமாகச் சரிந்து கிடந்தது. கனகராஜ் வீட்டில் எடுத்திருந்த கல்யாணச் சேலையைத்தான் கட்டியிருந்தாள். எனக்கு அந்தக் கலர் என்னவோ பிடிக்கவில்லை. சிகாவுக்குப் பிடித்ததோ என்னவோ, ஒரு பேச்சுப் பேசாமல் கட்டிக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தாள். சந்தோஷமில்லாமலா நலுங்கில உருட்டின தேங்காயை கனகராஜ் பிடுங்க முடியாமல் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அப்படி ஒரு சிரிப்புச் சிரிக்க முடியும், ஈறு தெரியச் சிரித்தால், சிகா மனதாரச் சந்தோஷமாக இருக்கிறதாகத்தானே அர்த்தம்.

ஆலமரத்தடியில் இருந்து அம்பாசமுத்திரம் ஸ்டேஷன் வரை சொல்லிவைத்தது போல சருகுகளாக உதிர்ந்து கிடந்தது. கனகராஜ் பூட்ஸ் சரக்சரக்கென்று மிதித்து நடக்க, சிகா ஒரு ஒல்லிப் பாச்சா போலக் கூடவே போய்க்கொண்டிருந்தாள். சிவப்புக் கலர் வெல்வெட் செருப்பு பளிச்பளிச்சென்ற மாறிக் கொண்டிருந்தது. பொன்னுக்குட்டி சேலைகட்டி அக்காவையிடப் பெரிய மனுஷி மாதிரி இருந்தாள். "ஏ" இந்தப் பையை வாங்கு" என்று பொன்னுக்குட்டியை சிகாவின் அம்மா தன்பக்கம் கூப்பிட்டுக் கொண்டதற்குக் காரணம் இருந்தது. கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வருவதற்குள்ளேயே தனத்துச்சித்தி, "பேசாமல் பொன்னுக்குட்டியை கட்டி வச்சிருங்க. அவதான் பொருத்தமா இருக்கா வளர்த்தியும் சதையுமா" என்று, சொல்லிவிட்டாள். கைக்கு ஏழெட்டுத் தங்க வளையல் போட்டிருக்கிறவள். சொன்னால் எல்லோரும் சும்மா இருப்பார்களா? நிசந்தான் என்று சொன்னார்கள். சிகா கனகராஜைவிட ரொம்ப மெலிவுதான். ஆனால் சிகாவின் அழகு வேறுயாருக்கும் வராது. கீற்றுப்போல ஒரு தடவையும் ஈறு எல்லாம் தெரிகிறதுபோல இன்னொரு தடவையிம் சிரிக்கிறது. எல்லாவற்றையும் விட, சிகாவின் முகத்தில் இருக்கும் ஈரம் முக்கியமானது. அது லேசில் அமையாது. சிலேட்டைத் தொடுகிற மாதிரி ஒரு குளிர்ச்சி, சதா அவளுடைய பார்வையில் இருக்கும். ரயில் இதையெல்லாம் சொல்வது மாதிரி "கூ" என்று ஊதியது. தண்டவாளங்கள் தாண்டி பிரம்மதேசம் அம்மை முத்து முதலியார் ஜவுளிப் பொட்டலத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தார். கார்டு பச்சைக்கொடி அவருக்காகவே காத்திருந்தது. ரெயில்வே ரெஸ்டாரண்ட் நாயனா ஏதோ கிண்டலாகத் சொன்னார். சிகா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரயில் புறப்படும்போது நானும் ஏறினேன். "என்ன ரவி" என்றுக் கேட்டுக் கொண்டே "வண்டி நகர்ந்துட்டுது, இறங்கு என்றாள். பொன்னுக்குட்டியைப் போல எனக்கு அழ முடியவில்லை. "ஜங்ஷன் வரைக்கும் வாரேன்" என்று சொன்ன என்னைப் பார்த்த கனகராஜ் "உட்காருங்க ரவி" என்றார். ஆற்றப் பாலத்தைத் தாண்டும் போது சிகாமணியைப் பார்த்தேன். சிகா ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு சற்று உள் ஒடுங்கி பாறைகள் முளைக்க ஓடிக் கொண்டிருந்தது.

அந்த ஓட்டம் எங்கே நின்றது. நிற்கிற ஓட்டமா அது. அப்படி எல்லாம் இருந்தால், கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு சிகா இருக்கிற இடம் பார்க்க ஓடிவரத் தோன்றுமா?

"ஏன் ரவி வேலையை விட்டே? மில்லூல பெர்மனண்ட் ஆச்சுண்ணா நல்ல சம்பளம்லா" சிகா ரொம்ப அக்கறையோடுதான் கேட்டாள். பாலிடெக்னிக் படித்துவிட்டு ஒரு வருஷம் சும்மா இருந்தபின், ஒர்க்கராகச் சேர்ந்து சைக்கிளும் தூக்குச்சட்டியுமாக வந்து கொண்டிருக்கும்போது, சிகா, சிகாவின் அம்மா, லீவுக்கு வந்திருந்த அக்கா பிள்ளைகள் எல்லாம் தாய்சீனிஸில் சினிமா பார்த்துவிட்டு நடந்து வருகிறார்கள். சிகாவிடம் என்ன மாயமிருந்தது. அக்காவுடைய இரண்டு பையன்களும் சிகாவின் கையைப் பிடித்து என்னென்னவோ பேசிக் கொண்டு வருகிறார்கள். அவள் பக்கத்தில் போனாலே இப்படி ஆகிவிடும். இத்தனைக்கும் சில பேரைப் போல, கையைப் பிடித்துக் கொண்டோ, தோளைத் தொட்டுக் கொண்டோ எல்லாம் பேசுவதே இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. பொன்னக்குட்டியைப் பார்த்து சிகா சத்தம் கூடப் போடுவாள். "அதென்ன பழக்கம். எப்ப பார்த்தாலும் தொட்டுத் தொட்டு பேசிக்கிட்டு" என்று. பின் எப்படி சூரிய வெளிச்சம் மாதிரி ஒவ்வொருத்தரையும் அவளால் பளிச்சென்று ஆக்கிவிட முடிகிறது.

"உன்னை மாதிரிக் கிறுக்கன் உண்டா, உள்ளூர்ல கிடைச்ச வேலையை விட்டுட்டு, மெட்ராஸ்லே வேலை கிடைக்குமென்று ஓடிவார புத்திசாலி நீதான்" - சிகா தட்டில் சாதத்தைப் போட்டுக்கொண்டே சொன்னாள். சிகாவின் கைகள் எந்த மாறுதலும் இன்றி அப்படியே மெலிவாக இருந்தன. இரண்டு வெள்ளைக் கல்லும் ஒரு நீலக்கல்லும் வைத்த மோதிரம் எண்ணெய் இறங்காமல் அதே மினுமினுப்புடன் இருந்தது. குனிந்து பரிமாறும்போது காரை எலும்பு இன்னும் தென்னிக்கொண்டுதான் இருந்தது.

"ட்ரை பண்ணும்வோம் ரவி" என்று கனகராஜ் சொன்னார், ஒரு டர்க்கி டவலை உடம்பு முழுவதும் மறைக்கிற மாதிரி அவர் போட்டிருந்ததை எடுத்து, "துடைச்சுக்கோ" என்று, கைகழுவிவிட்டு வந்த எனக்குச் சிகா கொடுத்தாள். கையைத் துடைத்த பிறகு அந்தக் துண்டை இன்னும் முகர்ந்து பார்க்கத் தோன்றியது. ஒருவித கிளர்ச்சியுடன் அதைச் சிகா தோளில் போட்டேன். சிகாமணியின் தோளில் அந்தத் துண்டுக் கனம் இறங்கும்போது பளிச்சென்று ஒரு விநாடி பார்த்துவிட்டு, கனகராஜ் பிசைந்து கொண்டிருக்கிற தட்டில் மோர் ஊற்றினாள். அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து மறுபடி அவள்மேல் வீச வேண்டும்போல இருந்தது. சிகா அவ்வளவு அழகாக இருந்தாள்.

"நம்ம ஊர் துரைப்பாண்டி ஸார்வா இங்கேதான் இருக்காங்க" சிகா என்னிடம் சொன்னாள்.

"யாரு நம்ம கணக்கு ஸார்வாளா" - எனக்கு நம்ப முடியவில்லை. சிகா தலையை அசைத்தாள்.

"டிரில் வாத்தியாரா இருந்தானே அவரு பையன், அவரு கூட இருக்கிறதாக அல்லவா சொன்னாங்க"

"ஆமா மயில்சாமி கூடத்தான். இங்கே தானே, இருக்கான் அவன்"

"மயில்சாமி எனக்கு ஒரு வருஷம் சீனியர். நான் எட்டுப் படிக்கும் போது அவன் ஒன்பது படிச்சான். ஸ்போர்ட்ஸ்ல வருஷா வருஷம் ப்ரைஸ் வாங்குவான் அப்பவே"

"தெரியும் தெரியும்" சிகா ஒரு மாதிரியாகச் சிரித்தாள். சிகாமணி போகிற இடமெல்லாம் மயில்சாமி கொஞ்சநாள் அலைந்து கொண்டு இருந்தான். டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போகிற நேரம் பார்த்துச் சரியாக மூணுலாம்பிற்கு நேர் எதிரே ஒரு லாலாக்கடை இருக்குமே அதற்குப் பக்கத்தில் நிற்பான். தினசரி விடியற்காலம் ஆறுமணிக்கு என்ன அல்வாவா சாப்பிடமுடியும். அது எல்லாம் காய்ச்சல் அடித்துக் குணமாகிற மாதிரி தன்னாற் போல சரியாகிவிட்டது.

காரைக்குடிக்குப் போய் டிரில் வாத்தியார் வேலைக்குப் படித்து விட்டு வந்து சமயம் ஆளே மாறிப் போய்விட்டான். வெள்ளை அரைக்கால் சட்டையும் கான்வாஸ் காலணியுமாக சைக்கிளில் பந்து விளையாட போகும்போது சிகா வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தால். வீட்டுச் சுவரில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மயில்சாமி பேசுவான் என்றுதான் சிகாமணி நினைத்தாள். கிணிங் என்று அவள் பக்கத்தில் வரும்போது ஒரு பெல் கூட அடிக்கவில்லை. சிலபேர் எப்படி இப்படி மாறிவிடுகிறார்கள். பாபநாசம் ரோட்டு மருதமரம், அதில் ஒட்டப்படுகிற கலைக்கோவில் சினிமா போஸ்டரும் பொந்தில் இருக்கிற கிளிகளும் மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றன.

இவ்வளவு தெரிந்தபிறகு துரைப்பாண்டி ஸாரை பார்க்காமல் இருக்கமுடியுமா. மயில்சாமி வீட்டை சிகாவும் நானும்தான் நடந்து போய்க் கண்டுபிடித்தோம். கொஞ்சம் தூரம்தான். போகவரவே அரைமணிநேரம் கிட்டதட்ட ஆகிவிடும். மயில்சாமி சம்சாரம் அருமையான மனுஷி. பேச ஆரம்பித்தால் மடியில் தூக்கிவைத்துக் கொள்கிறமாதிரித்தான் இருந்தது. முதல் தடவையாக மயில்சாமி வீட்டிற்குப் போயிருக்கும்போது மயில்சாமியும் இல்லை. துரைப்பாண்டி ஸாரும் இல்லை.

"இவ்வோ இன்னும் வரலை. மாமா ட்யூஷன் எடுக்காஹ. வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்காஹ. பொழுது போகணும்லா, எம்புட்டு நேரம் சும்மாவே ஈஸிசேரிலே பேப்பர் படிச்சுட்டுக் கெடக்கிறதுங்காஹ, இதை சொல்லும்போது ஒரு தட்டில் கொழுக்கட்டையும் தண்ணீரும் வந்தது.

"நமக்கே குத்த வச்சு ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியலே. இதிலே அந்தக் காலத்து ஆட்கள் எப்படி இருப்பாஹ? - மயில்சாமி சம்சாரம் பேச்சை நிறுத்துகிறதாக இல்லை. ஆவுடையானூர்க்காரி என்பது சரியாகத்தான் இருந்தது. என்ன பிரியம். என்ன திருத்தம் ஒவ்வொண்ணிலும்.

என்றைக்கு வெளியே போகவேண்டும் என்று தோன்றினாலும் எனக்கும் சிகாவுக்கும் துரைப்பாண்டி ஸார் வீட்டிற்குத்தான் போகத் தோன்றும். இப்போதாவது என்னென்னவோ பேச்சு வந்துவிட்டது. ரேஷன் கடையில் கூட நான் கனகராஜ் இல்லை என்று தெரிந்து கொண்டே, "கனகராஜ் ஸாருக்கு கோதுமைக்கு பில் போட்டாச்சா" என்று கேட்டபடி என்பையில் கோதுமையை அளந்து போட்டிருக்கிறார்கள்.

"மண்ணெண்ணெய் கேன் டீச்சர்கிட்டே இருக்கா ஸார் என்று தள்ளி நிற்கிற சிகாமணியை காட்டிக் கேட்டிருக்கிறார்கள். சிகா டீச்சர் இல்லை. வேலைக்கு போகவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்ததைத் தெரியாது போலப் பேசுகிற கெட்டிக்காரத்தனம்தானே இப்போது செல்லுபடி ஆகிறது

இதற்கு எல்லாம் முந்தி நாங்கள் மூன்று பேருமே நடந்து, பெருமாள் கோவில் தாண்டி, போலீஸ் ஸ்டேஷன் பக்கமாய்ப் போய், ஏரிக்கரையில் நடந்து, நடுவில் பட்டம் விடுகிறவர்களைச் சற்றுப் பார்த்து, சர்வ சாதாரணமாக நடக்கிற சாராய வியாபாரத்தைக் கண்டுகொள்ளாமல் விலகி, ஒரு நீண்ட விசில் சத்தத்தின் கேலி ஒலிக்க - ( இப்போது நான் சற்றுக் கோபமாக நின்று திரும்பிப் பார்க்க, "போவோம்" என்று கனகராஜ் தோளில் கைவைப்பார். சிகா மடங்கிக் கீழே குனிந்து ஒரு நத்தைக் கூட்டைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பாள்) வேலிக்காத்தான் செடிகளுக்கு அப்புறமாகப் போய் ஸார் வீட்டை அடைந்தபோது, அன்றைக்கு கணக்கு ஸார் வீட்டில் இருந்தார்கள்.

கணக்கு ஸார் எவ்வளவு அருமையான மனிதர். எங்கள் பள்ளிக் கூடத்தின் சொத்தே அவர் அல்லவா. உலகம் என்ன என்ன முடிச்சை எல்லாம் எங்கெங்கு போடுகிறது. என்னுடைய தாத்தாவும் அவருடைய அப்பாவும் எஸ்டேட்டில் ஸ்டோர் கீப்பராக இருந்தார்களாம். ஏதோ ஒரு முக்கியமான சிறு உதவியை எங்கள் தாத்தா செய்திருப்பார் போல. " அவர் பொருத்திவச்ச விளக்கு அல்லவா எங்க வீட்டில் இன்றைக்கும் எரியுது" என்று என்னுடைய அப்பாவிடம் ஸார் சொலலிக் கொண்டிருந்தார்.

பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா போனபிறகு அன்றைக்கு ஸார் எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்டங்கள் பற்றியும் அட்டைக்கடி பற்றியும், பள்ளிக்கூடம் போகிற வழியில் வேல்கம்பால் குத்தித் தூக்கி மரத்தில் உயிரோடு இருப்பதுபோல் கட்டி வைத்திருந்த சிறுத்தைப் புலி பற்றியும் சொன்னார். அந்தப் பக்கத்தில் இருந்த சர்ச்சின் மணி சப்தம் எப்படி இருக்கும் என்று ஸா‘ சொல்லும்போது மனி சப்தம் கேட்டது. குளிர்ந்த ஓடைகளும் பெரணிச் செடிகளுமாக இருக்கிற அவருக்குப் பிடித்த ஒரு பாறையைப் பற்றிச் சொல்கையில், நான் அந்த ஓடையில் இருந்து கூழாங்கற்கள் பொறுக்கினதுண்டு.

ஒரு சமயம் இங்கிலீஷ் பீரியட் ஸார்வா வராதபோது துரைப்பாண்டி ஸார் வந்து "இங்கிலீஷ் பொயட்ரி" எடுத்தார். ஒரு படுகை பூராவும் மலர்ந்திருக்கிற ஒரு மலரைப் பற்றிய அந்தக் கவிதையைச் சொல்லிக் கொடுப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பது அவர் பேசின மற்றப் பேச்சிலிருந்தே எனக்குதெரிந்தது. எனக்கும் கூட சமபங்கு கணிதமும் வேண்டியிருந்தது. இதுபோல சொல்லிக் கொடுக்கப்படுகிற கவிதையும் வேண்டியிருந்தது. நான் பாலிடெக்னிக்கில் சேருவதற்குப் போதுமான கணக்கையும், சிகாமணியைக் கண்டடைவதற்கான மெல்லுணர்வையும் அவரிடமிருந்துதானே பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் மூன்று பேரும் போன தினத்தில் சிகாவிடமும், என்னிடமும், ஊருக்குப் போனீர்களா, சமீபத்தில் மழை உண்டா, பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் எப்படி, மில்லில் ஆள் எடுக்கிறார்களா, எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஹைஸ்கூலில் போனவருஷம் எத்தனை சதம் தேறினார்கள். கணக்கில் சென்ட்டம் எத்தனைபேர், சொரி முத்தையன் கோவிலுக்கு இப்போது ஆடி அமாவாசைக்கு முன்னைப் போலக் கூட்டம் வருகிறதா. காணிக்குடியிருப்பில் ஸ்கூல் ஒண்ணு உண்டே. அது நல்ல பெருசா வளர்ந்துட்டுதா, இப்போ ஸ்ட்ரெங்த் எவ்வளவு இருக்கும் என்று எல்லாம் சற்று நேரம் கேட்டவர், ஒரு கேவலைப்போல நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, இதுவரை பேசாமல் கவனித்து கொண்டிருந்த கனகராஜைப் பார்த்து.

"உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று கேள்விப்பட்டேன்" என்று அவருடனான தன் முதல் உரையாடலைத் துவக்கினார். அவர்கள் பியானோ இசையைப் பற்றி அப்புறம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கனகராஜ் ஒரு கட்டத்தில் பியானோ வாசிப்பதையே போன்று தன் பத்து விரல்களையும் ஒரு இசைவுடன் அசைத்துக் கொண்டு, காற்றில் சில நிமிடங்கள் அந்தரத்தில் கைகளை நிறுத்திக் கண்களை, மூடிக்கொண்டபோது, துரைப்பாண்டி ஸார் தன் பக்கத்தில் இருந்த சிகாமணியின் கைகளில் ஒன்றை எடுத்துத் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டார். சிகாவின் மெலிந்த கையின் மேல், வழுவழுப்பு நிறைந்த சேலை நினைத்து நினைத்துச் சரிந்து இறங்கியது.

அப்புறம் நாங்கள் எத்தனையோ தடவை போயிருப்போம். ஒரு சில நெகிழ்வில் உள்ளங்கைக்குள் புரண்டு கொடுக்கிற கற்பனையான வைரக்கற்களைப் போல, மனிதர்களுக்குள்ளும் நிகழ்ந்து விடத்தானே செய்கின்றன. எல்லாம் காதுக்கு வந்த பிறகு மயில்சாமியின் மனைவி ஒரு சிறு வித்யாசம் கூடப் பாராட்டாதது எப்படி என்று இன்னும் புரியவில்லை. நானும் சிகாவும் போயிருக்கும் போது, இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு மயில்சாமி ஒரு தடவை சொன்னான்.

"உங்க ரெண்டு பேரையும் கண்டிச்சுக் சொல்லணும் போலவும் இருக்கு. சொல்லவும் முடியலை". இதற்கு மேல் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எப்படி அவனால் நிறுத்திக் கொள்ள முடிந்தது. அவன் வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோம். "சிகா, உனக்குக் கார்ட்டுன்ஸ் பிடிக்கும் என்று சொன்னாயே" என்று சொல்லி காஸெட்டைப் போடுகிறான்.

"ரவி மீன் சாப்பிடுவியா நீ" என்று அவன் மனைவி வந்து கேட்டுவிட்டுப் போன சிறிது நேரத்தில் அம்மி தட்டுகிற சத்தம் கேட்டது.

"அம்மி தட்டுகிற சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு" சிகாமணி உட்பக்கம் எழுந்து போகிறாள். திரையில் பூனை எலியிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க மயில்சாமி அப்படிச் சிரிக்கிறான். சின்னப்பிள்ளை மாதிரி. சொல்ல முடியாத ஒரு கணத்தில் எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டும் எங்கேயாவது போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது.

"மயில் அப்ப நான் வர்ரேன்"

"ச்சூ. இருந்து சாப்பிட்டுப் போகலாம் ரவி"

இல்லை போறேன்" - எனக்கு என்னைத் தூக்கி யாராவது எறிந்து நொறுக்கிவிட மாட்டார்களா, சுக்கல் சுக்கலாகி, யார் காலிலும் குத்தாமல், மண்ணோடு மண்ணாகிவிட மாட்டேனா என்று இருக்கிறது. கனகராஜ் எதிரே வந்து விடக்கூடாது. துரைப்பாண்டி ஸார் வந்துவிடக்கூடாது. வெயிலின் கீற்றில் கரைந்து அரூபமாகி, ஏரிக்குள் பறக்க விடுகிற பட்டம் மாதிரி உச்சிக்கு எவ்வி எவ்வி உயிர் அறுந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும்.

"சிகா சாப்பிட்டுட்டு வரட்டும். நான் போறேன்" எழுந்திருந்தேன்.

"இந்த பாரும்மா. ரவி போறானாம்" - அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் வெளியே வந்தேன். ஹிண்டு பேப்பர் தரையில் சருகியது. நாய் கட்டிப் போட்டிருந்த இடத்தில் சூட்டு வாடை அடித்தது. தபால் பெட்டில் யாரோ டூத் பிரஷ் காலி டப்பாவைச் செருகியிருந்தார்கள். கருநீலமாகப் பூக்கள் அசைந்தன. மரக்கதவில் கனத்து விழுகிற இரும்புப்பட்டை நாதாங்கி. சிந்திக்கொண்டே போகிற தண்ணீர் லாரி. சைக்கிள் ரிக்ஷாவின் ஓரத்தில் இருந்த நீல பீக் ஷாப்பர் பையில் பசேல் என்று காராமணிக் கொத்து.

"என்ன ஆச்சு ரவி" - சிகா வந்து கையைப் பிடித்தாள். மேலும் பிடித்தபடியே என்னுடனே நடக்க ஆரம்பித்தாள். மெலிந்த அவளுடைய கைகள் எனக்கு நிரம்பவும் வேண்டியிருந்தது. சேலையின் விசிறல் பக்கவாட்டில் நகர்ந்தபடி வந்தது. சிகாமணி சேலைத்தலைப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். "நல்ல வெயில்" என்றாள்.

எதிரே துரைப்பாண்டி ஸார் வந்து கொண்டிருந்தார். முழுக்கைச் சட்டையுடன் ஒரு கை உயர்ந்து குடையைப் பிடித்திருந்தது. தோளில் சாய்ந்த குடையில் அவருக்குப் பின்னால் உள்ள பாதை மறைந்து மறைந்து விலகியது. முக்கியமாக, ஒரு வீட்டுக்குள்ளிருந்து தெருப்பக்கம் சரிந்திருந்த செவ்வரளிப் பூக்கள் பார்வையிலிருந்து விலகுவதும் தெரிவதுமாக இருந்தது. தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

துரைப்பாண்டி ஸாருக்கு எல்லாம் தெரியும்.

"என்ன இந்த வேனா வெயிலில?"

"நம்ம வீட்டுக்குத்தான் ஸார்" - சிகா சொன்னாள்

"சாப்பிட்டீங்களா" - மரத்தடிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. அவர் ஒரு மரத்தடிக்கு நகர்வது மூலம் எங்களையும் நிழலுக்கு உட்படுத்திக் கொண்டார். வெயிலை விட்டு எப்படி எல்லாம் நகர்த்திக் கொள்ள முடிகிறது.

மணி ஒண்ணரைதானே ஆகுது"

"ஒண்ணரை மணிக்குச் சாப்பிடக் கூடாதுன்னு என்ன எழுதியா வச்சிருக்கு?" -ஸார் எங்களைப் பார்த்தார்.

நாங்கள் நின்றிருந்த வேலிக்கருவை மரம் நிறையக் காய்த்திருந்தது. குஞ்சம் குஞ்சமாகப் பூத்திருந்தது. ஊதினால் மகரந்தம் பறக்கும்போல. ஏற்கெனவே ஒடிந்த கிளை காய்ந்து முட்கள் துருத்திக் கொண்டு இருந்தன. நிழல் இருந்தது போதுமான அளவு. சிகாவும் நானும் பேசாமல் ஸாருடன் நின்றோம். ஸார் குடையை வலது தோளிலிருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டார்.

மறுபடியும் கேட்டார் - "எழுதியா வச்சிருக்கு"

சிகா தலையை ஆட்டினாள்

"எழுதி வைக்கலையில்லா?" - இப்போது என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இல்லை என்று தலையை ஆட்டினேன்.

"பின்னே?" - இதைச் சொல்லிவிட்டு துரைப்பாண்டி ஸார் முன்னால் நடந்தார். நாங்கள் பின்னால் வருவோம் என்று அவருக்குத் தெரியும்போல.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link






No comments:

Post a Comment