Thursday, 14 March 2013

TAmil kathai

சிறுகதைகள்


திரும்பி வந்த அம்பு

இயற்கை பச்சைப் பாய் விரித்து அழைக்க காலைக்கதிரவன் விளக்காக இயற்கை மகள் இருகை நீட்டி அழைக்கிறாள்.
டிங்டாங்... டிங்டாங்...
என கடிகாரம் ஏழு முறை அடித்து ஓய துயில் கலைந்தான் ரமேஷ். எழுந்து கண்களைக்கசக்கி அறையைப் பார்த்தான். நந்தினியும், குழந்தைகளும் அங்கு இல்லை. படுக்கையை உதறி வெளியில் பால்கணியை நோக்கினான். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
"அம்மா பால்" என பால்காரன் ஒருபுறம் கூவினான்.
"கத்தரி... முருங்கை... கீரை... அம்மா" ... என காய்கறி விற்பவள் கூவினாள்.
கனவில் வந்த இயற்கை காட்சியை மனதில் ஒரு முறை நினைத்து உவகை கொண்டான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.
குழந்தைகள் ஸ்ருதியும், சுவாதியும் படித்துக் கொண்டிருந்தனர். நந்தினி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு செய்தித்தாளைப் புரட்டினான்.
"சே! வர வர மனிதத் தன்மையே செத்துப் போயிடும் போலிருக்கு" - ரமேஷ்
"எதைக் கண்டு இப்படிக் காலைலயே இப்படி அலுத்துக்கிறீங்க".
"இங்க பார் நந்தினி ஒரு யானை பாகனை அந்த யானை துவம்சம் செய்றதை ஒருத்தன் புகைப்படம் எடுத்து பேப்பர்ல போட்டிருக்கிறான். இதை செய்ற நேரம் அவனைக் காப்பாத்தி இருக்கலாம் அல்லவா"
"மனுஷத் தன்மைனா என்னப்பா"
அப்பாவியாய் கேட்டாள் மூன்றாவது படிக்கும் மூத்தமகள் ஸ்ருதி.
"சொல்றேண்டா செல்லம்" என குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, "மனுஷத் தன்மைன்னா யாராவது ஆபத்திலே உதவியில்லாம இருந்தா உதவி செய்யனும். பசின்னு யாராவது கேட்டா சோறு போடனும். மொத்தத்துல இல்லாதவங்களுக்கு உதவி செய்யனும்.
"ஆமா டாடி நேத்து எங்க க்ளாஸ் லில்லி மயங்கி விழுந்துட்டா டீச்சர் எங்கிட்டதான் தண்ணி வாங்கி கொடுத்தாங்க" என்று உற்சாகமாக சொன்னாள் இளையவள் ஸ்வாதி.
"வெரி குட் அப்படித்தான் எல்லாருக்கும் உதவனும்".
"சரி... சரி... ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க" என்று குரல் கொடுத்தாள் நந்தினி.
அடுத்த அரைமணி நேரம் வரை எல்லோரும் சாவி கொடுத்த இயந்திரமாக சுழலத் தொடங்கினர்.
"எங்க என் ஸ்கூட்டர் சாவி சீக்கிரம் கொண்டு வா"
"நான் இங்க குழந்தைகள கவனிக்கிறதா உங்கள கவனிக்கிறதா நீங்களே வந்து எடுங்க தினமும் இது ஒரு வேலையாப் போச்சு.
பல்லைக் கடித்துக் கொண்டு வந்து ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு அதை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினாள்.
பல முறை முயன்றும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. சிறிது நேரம் நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்தான்.
அப்போது -
எதிரில் ஒரு சிறுவன் மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவன் அழுக்கு படிந்த கந்தல் ஆடையும், மழையில் நனைந்த சணல் போல் திரிந்து கிடந்த அவன் தலைகேசமும் கையில் நெளிந்து இருந்த ஈயத்தட்டும் அவன் யாசகன் என்று கூறாதே விளங்கிற்று.
"ஐயா... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு பசிக்குது... ஏதாவது போடுங்க சாமி...
" ஆமா வர்ற ஆத்திரத்துல ரெண்டு போடத்தான் போறேன். காலங்கார்த்தாலேயே உன் முன்னாடி முழிச்சிட்டு போனா விளங்குன மாதிரி தான்".
"ஐயா... ரொம்ப பசிக்குதுய்யா" என்றான் கொஞ்சம் கிட்ட நெருங்கி.
"விட்டா தலைமேலேயே ஏறுவ போலிருக்கே ச்சீ.. போடா" என்று அவனை தள்ள பக்கத்தில் இருந்த கதவில் பட்டு அவன் கந்தல் சட்டை மேலும் கிழிந்தது. அவன் சட்டையின் கிழிசல் அளவை ஒரு முறை வெறுமையாகப் பார்த்தான் பின் பேசாமல் போய்விட்டான். ரமேஷ் அதைக் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டான்.
"என்ன ரெடியா..." உள்நோக்கி குரல் கொடுத்தான்.
"இதோ வந்திட்டோம் டாடி..." குழந்தைகள் ஓடி வந்தன. ஏற்கனவே இருந்த கோபத்தில் வண்டியை தன் மனைவியாக பாவித்து ஒரு உதைவிட்டான். உடனே ஸ்டார்ட் ஆகியது.
டாட்டா... மம்மி என குழந்தைகள் கை அசைக்க கிளம்பினான்.
டாடி எல்லோருக்கும் உதவி செய்றது தான் மனித நேயம்ன்னு சொன்னீங்க நீங்க மட்டும் ஏன் அந்த பையனுக்கு சோறு குடுக்கல... அப்ப நீங்க மனுஷன் இல்லையா... " என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாள் ஸ்வாதி.
"ஷட்-அப்" என்று பொரிந்தான்.
ஸ்கூலில் குழந்தைகளை விட்டு விட்டு அலுவலகம் வந்து வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் யூனியன் லீடர் வந்தார்.
"ரமேஷ் சார்... தீபாவளி போனஸ் இந்த வருஷம் கிடையாதுன்னு எம்.டி சொல்றாரு நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க"
"அப்படியா... சரி என்னன்னு கேட்டு நான் போனஸ் கிடைக்க ஏற்பாடு செய்றேன். நீங்க நிம்மதியாப் போங்க. நாளைக்கு நல்ல பதிலா சொல்றேன்"
மாலை 5 மணிக்கு எம்.டி அறைக்குள் நுழைந்தான்.
"சார் ... போனஸ் ... இல்லைன்னு சொன்னீங்களாமே"
"வேற என்ன மிஸ்டர் சொல்றது. போன தடவை லாபம் இரட்டிப்பு மடங்கு வந்ததால் இரண்டு பங்கு போனஸ் கொடுத்தேன். இப்ப முதலுக்கே மோசம்" என்றார்.
அவருடன் அரை மணி நேரம் வாதாடியும் பயனற்றுப் போகவே கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சே... போனஸ் வாங்கி கொஞ்சம் கடன் அடைக்கலாம் என்று இருந்தேனே என்று யோசனை பண்ணியபடி வரும் வேளையில்...
"க்ரீச்" என சத்தம் கேட்டது அடுத்த நிமிடம் சாலையில் உருண்டான் ரமேஷ்.
அவன் கண் விழித்தான். இருட்டி இருந்தது தான் ஏதோ மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான். பக்கத்தில் நந்தினியும், குழந்தைகளும், கூடவே... அவன்.
அவன்... அவன் ஏதோ முனகினான்.
"ஆமாங்க காலைல அடிச்சு வெரட்டினீங்களே அந்த பையன் தான்"
"சார்... நீங்க அந்த மோட்டார் பைக்கில வந்திட்டு இருந்தீங்களா அப்படி அந்த கடை வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து இருந்தாங்க. நீங்க தெரியாம வண்டிய அதில விட்டவுடனே வழுக்கிடுச்சு" என்றான் அந்த சிறுவன். அவன் வெற்று உடம்பை கைகளால் மறைத்த படி நின்றான்.
"நீங்க விழுந்ததைப் பார்த்துட்டு இவன் ஓடி வந்து பார்த்தப்ப உங்க தலைல இரத்தம் வழிஞ்சுகிட்டு இருந்திருக்கு. அப்புறம் தன் சட்டையை கழற்றி உங்க தலைக்கு கட்டுப் போட்டு உங்கள இங்க சேர்த்துட்டு எனக்கு வந்து சொன்னான். அப்புறம் தான் நான் வந்தேன்." என்றாள் நந்தினி.
சிறுவனின் கிழிசல் சட்டையைப் போலவே தன் மனதும் கிழிந்ததை உணர்ந்தான். அப் பத்து வயது பாலகனின் குழந்தைத் தனமான பண்புகளில் தனக்கு இல்லாத மனிதப் பண்பைக் கண்டு, கண்ணீர் மல்க அவன் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான். குழந்தைகள் புரியாமல் விழித்தனர். நந்தினி மட்டும் பொருள் பொதிந்த பார்வையை அவன் மேல் நாட்டி புன்னகைத்தாள்.

No comments:

Post a Comment