Thursday 14 March 2013

TAmil kathai

சிறுகதைகள்


என்ன இந்த வாழ்க்கை

நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போகும் தினசரிக்காலண்டராய் இளைத்துப் போன தேகம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையை ஆசைத்தீரச் சேர்த்து கடைவாயில் அதப்பும் தாம்பூலம். வாய் அசைபோட அசைபோட தாம்பூல எச்சிலில் குளித்த கருஞ்சிவப்பு உதடுகள். மழைகாணாமல் விருவோடிக் கிடக்கும் கரிசல் நிலமாய் எண்ணெய் தடவாத பரட்டைத் தலையுடன் விறகு பொருக்கப் புறப்பட்டாள் வீராயி.
மணி பதினொன்றிருக்கும். இரண்டு ஜென்மமாய் பூமியில் வாழ்ந்து தோசைத் தடிமனாய்த் தேய்ந்து போன இரப்பர் செருப்பை மாட்டிக் கொண்டு வீராயி நடந்த நடையில் ஒரு வெறித்தனம் இருந்தது. வேகமான நடைக்கு ஒத்துவராததால் முழங்கால் தெரிய சேலையை தூக்கிச் சொருகிக் கொண்டாள்.
அரிவாளையும் கயிரையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு ஊரைத் தாண்டி, ஊத்தோடை தாண்டி, வேடியப்பன் கோயில் தாண்டி இருபது நிமிச நடைக்குப் பிறகு கொத்துக் கொத்து முள்ளோடு குலுங்கி நிற்கும் கருவேலங் காடு புகுந்து, திசையெல்லாம் தன் கண்ணொளியை வீசினாள். கண்ணில் பட்டு, கையில் கிடைத்த மஞ்சனத்தி, கருவேலஞ்சுள்ளிகளை கணிசம் பார்க்காமல் பொருக்கிக் குவித்தாள்.
கயிரை இரண்டு கொடியாக விரித்து, விறகுக் குச்சிகளை அற்புதமாய் ஒழுங்குபட அடுக்கி, நீளமான கட்டுக்கட்டி நிமிர்ந்த போது, இனம் புரியாத திருப்தி ஒன்று தன் நெஞ்சில் குடிபுகுந்ததாய் உணர்வு ஏற்பட்டது வீராயிக்கு.
விறகுக் கட்டைத் தூக்கிவிட ஆள்தேடி சுற்றி பார்வையை வீசினாள். தூரத்தில் கூலியாட்கள் சிலர் களைபறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை கூப்பிடவும் பயம். "ஒரு வேளை தோட்டக்காரன் பார்த்துவிட்டால் கண்டபடி திட்டுவானே" என்ன செய்வது?" என்று சிறியதொரு சிந்தனைப் போராட்டம் நடத்தினாள்.
எப்படியாவது தூக்குவதென்று முடிவு செய்தவளாய் காலை அகல விரித்து, ஒருக்களித்து நின்று, உயிரையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஒரு நரம்புக்குள் செலுத்துவதாய் தன் தேகத்திற்கு வலிமையேற்றினாள். பெருங்காற்றை உள்ளிழுத்து நுரையீரல் நிரப்பிக் கொண்டாள். விறகுக் கட்டை செங்குத்தாய் நிறுத்தி கட்டின் பாதியில் குனிந்து தன் தலை பொருத்தி, இருகப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள். தலைக்கேறியது விறகுக் கட்டு.
சுட்டெரிக்கும் நெருப்புக் கோடாரியை கையில் வைத்துக் கொண்டு மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது மத்தியான வெயில். வரண்ட தாகம் தொண்டையைச் சுரண்டிக் கொண்டிருந்தது. தலைமேல் இருந்த பாரம் பிடரித்தலையை நெரித்துக் கொண்டிருந்தது. விரைந்து வீடு செல்லும் வேட்கை கால்களுக்குச் சிறகு முளைக்க வைத்தது. ஓடுவதைப் போல நடந்தாள்; வீராயி எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டும் பூமியை புல்லரிக்கும்படி செய்து புழுதியைக் கிளப்பியது. எடுத்த காலைப் பதிக்கும் முன் இன்னொரு காலை எடுத்து வேகமாக நடைபோட்டாள்.
திடீரென செருப்பையும் மீறி குதிங்காலில் நறுக்கென்று இறங்கியது கொடூர முள்ளொன்று. கண்ணுக்கு மட்டும் இருட்டியதாய் ஒரு கருப்பு நிறம் தோன்றி மறைந்தது. உச்சியில் யாரோ ஓங்கி அடித்து விட்டது போன்ற பிரம்மை. தேகத்தில் மின்சாரம் தீண்டியதாய் மிரட்சி, காலில் குத்திய ஒரு முள் உடம்பெல்லாம் குத்தியதாய் சொல்லமுடியாத வலி.
"அய்...யய்யோ அம்மா" - என சக்தியை ஒன்ற கூட்டி ... குரல்வளை... திடப்படுத்தி... வீராயி கதறி அலறிய போது, அந்தக் காடெல்லாம் எதிரொலித்தது.
"என்ன இந்த வாழ்க்கை" என வீராயி சலிப்படைந்து முணுமுணுத்த வார்த்தைகள் அந்த எதிரொலியில் கரைந்துகொண்டிருந்தது.

No comments:

Post a Comment