Thursday 14 March 2013

Tamil Kathai

சிறுகதைகள்


வேலை வா(ஏ)ய்ப்பு

மழை அரிசியை, விதி, அவன் வீட்டுக் குடிசைச் சல்லடையில் சலித்துக் கொண்டிருந்தது. மழை காலங்களில் அவன் வீடுமட்டுமல்ல, அவன் கண்களும் குளமாகித்தான் போகும். ஓட்டைக் குடிசையோடு சேகரும் சேர்ந்து அழுவான். ஏதோ கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார் ராஜலிங்கம் அவர் இறந்ததிலிருந்தே, அவரது குடும்பமும் நொடித்துப் போனது. குடும்பத்தை நடத்தும் பணி சேகர் கையில் ரொம்பவே சுமையாக கனக்கிறது.
வீட்டில் பார்த்த பொருளையெல்லாம், தாயம்மாள் விற்றுத் தான் சேகரைப் படிக்க வைத்தாள். பாவம் அவள். படிக்க ஆர்வமாயிருக்கும் மகன், மனநிலை சரியில்லாத மகள், நிறைய வறுமை இந்தச் சொத்துக்களைத் தான் ராஜலிங்கம் தாயம்மாளுக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார். வறுமையில் படித்தாலும் நல்ல மதிப்பெண்களோடு தான் சேகர் பட்டம் பெற்றான். ஆனால் என்ன செய்வது, "தெரிந்த முகம் பார்த்துத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை விட மந்திரிகளின் எழுத்துக்களுக்குத் தான் மதிப்பு அதிகம்."
சேகரும் விடுவதாய் இல்லை. அவன் கால்களுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால், அவன் நடந்து சென்ற இண்டர்வியூகளின் மரண வாக்கு மூலங்களைச் சொல்லும். ஒவ்வொரு இண்டர்வியூவிற்கு அவன் செல்லும் போதும் மனநிலை சரியில்லாத தன் தங்கையின் பஞ்சுமிட்டாய் சிரிப்புத் தான் அவனைப் பயமுறுத்தும். அன்றும் அப்படித்தான் வேலை காலி இல்லை என்ற வாசகங்களை மட்டும் பார்த்துப் பார்த்து விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருந்த அவன் கண்கள், அந்தக் கம்பெனியின் முகப்புப் பலகையை மேய்ந்தன. அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
"ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை" சேகர் ஊனமுற்றவன் அல்ல. விதி அவனுக்குப் பாதகமாவே இருந்தது. இதைப் படித்தும் அவன் அந்த இண்டர்வியூவை சந்தித்தான். அவன் கண்களில் ஏதோ நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தது. தனக்கு இந்த வேலை கிடைத்தால்... சராசரி மனிதனைப் போல் அவன் கற்பனைகளில் மூழ்கிப் போனான். வழக்கம் போலவே இதுவும் தோல்வியாகும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். ரொம்பவே உடைந்து போனான் சேகர். இந்த வேலையும் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கூட இல்லை. ஊனமுற்று இருக்கும் ஒருவருக்குத் தான் வேலை என்று கூறி இவன் சான்றிதழ்களை அந்தக் கம்பெனியின் M.D. தூக்கியெறிந்த பிறகு அவன் கண்கள், குளமானது.
இதே விரக்தியோடு வீட்டுக்குக் கூடச் செல்லாமல் அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்துக்குச் சென்றான். அந்த அறிவிப்புப் பலகையும், M.D யின் வார்த்தைகளும் அவன் காதில் மங்கலாய் விழுந்து கொண்டே இருந்தது. அவனுக்குள் அது ஏதோ செய்வதாய் இருந்தது. உடனே அவன் சற்றும் யோசிக்காமல், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, வெறி பிடித்தவனைப் போல் தனது இடக்கையை வெட்டிக் கொண்டு கத்தினான். இனி நானும் ஊனமுற்றவன், இனி நானும் ஊனமுற்றவன். ஆறாய்ப் பெருக்கெடுத்த இரத்தத்தோடு மயங்கி விழுந்தான்.
அவன் வாழ்ந்தானா? செத்தானா? தெரியாது.

No comments:

Post a Comment