Thursday, 14 March 2013

Tamil kathai

சிறுகதைகள்


உறவுப் பாலம்

"வாங்கம்மா... பூ வாங்கிட்டுட்டுப் போங்க முழம் 2 ரூபாய் தான் பூ... பூ... "
" அம்மா... தாயே ... குழந்தை சாப்பிட்டு இரண்டு நாளாகுது ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா..."
"ஆரஞ்சு ... பைனாப்பிள் ... கிரேப்... ஆரஞ்சு"
இந்த வசனங்களெல்லாம் பத்மாவிற்குப் பழக்கப் பட்டவை தான் இருந்தாலும் அனைத்தையும் காதில் வாங்கிய படி அவர்களைக் கடந்து போனாள். எட்டு மணி இளம் வெய்யில் அவள் முகத்தையும் தேகத்தையும் செல்லமாய் வருடிப் பார்த்தது.
வெள்ளிப் பிள்ளையார் கோவிலைக் கடந்த பொழுது கற்பூர ஆராதனை நடப்பது தெரிந்து விரக்தியாய் ஒரு முறுவல் கொண்டாள். ஆம் இதுவே பள்ளிக்குத் தனியாய் இச்சாலையில் நடக்க ஆரம்பித்த காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையில் எத்தனை முறை இக்கோவிலைக் கடந்து இருப்பாள் ஒவ்வொரு முறை கோவிலைக் கடக்கும் பொழுதும் இறைவனை தரிசித்து விட்டுதான் செல்வாள். இன்று...
சிந்தித்துப்பார்க்கும் நேரமில்லை காரணம் இவள் செல்ல வேண்டிய பேருந்து சிறிது தொலைவில் அளவுக்கு சற்று அதிகமான கூட்டத்தை பெருக்கிக் கொண்டு வந்தது. ஓடிச் சென்று ஏறினாள்.
இயந்திரத் தனமாக மூன்று மணி நேரம் ஓடியதே தெரியவில்லை.
" கல்யாணி... கல்யாணி... " பக்கத்தில் உள்ள தையல் மிஷினில் துணி தைத்துக் கொண்டிருந்த கல்யாணியை தோழி வசந்தா கூப்பிடும் சத்தம் கேட்டு பத்மாவும் இயல்பு நிலைக்குத் திரும்பி மணி பார்த்தாள் 11 அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. வசந்தாவைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகையை வீசினாள். வசந்தா பதிலுக்கு புன்னகைத்தாலும் முகத்தில் சிறு கவலை மண்டியிருந்தது தெரிந்தது.
"என்ன வசந்தா... ஏன் இப்படி பேயரஞ்ச மாதிரி இருக்க?" கல்யாணி கேட்டாள்.
" ம்... பேய்தான் ஆனால் என்னை அறையவில்லை உன்னை அறைய வந்திருக்கு" - வசந்தா.
" என்னடி உளர்ற "
" அங்க பார் உன் ஆத்து குடிமகன் உன்னை நாடி ஓடி வந்திருக்கார்"
வசந்தா கிண்டலாக சொன்னாலும் தோழியின் நிலை பற்றி உண்மையான கவலை இருந்தது. இப்பொழுது கல்யாணியின் முகத்தில் கலவரம் படர்ந்தது.
இந்நிகழ்ச்சிகள் பத்மாவிற்குப் புதிதல்ல கல்யாணியின் கணவர் வருகை அவளுக்கு இன்று 1 ம் தேதி என்பது ஞாபகத்திற்கு வந்தது. மாதம் முதல் தேதி அவள் கணவர் வருவதும் இவள் சம்பளத்தை ஜேப்படி செய்து குடிக்கச் செல்வதும், மறுத்தால் அனைவர் முன்னிலையில் இவளை தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பதும், யாராவது தடுக்கச் சென்றால் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் அதற்குப் பயந்து கல்யாணி அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவதும் மாதாந்திர நிகழ்ச்சிகள்.
பத்மா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய போது நீண்ட அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது.
அனைவரும் மேனேஜர் அறைக்கு சென்று தங்கள் ஊதியத்தைப் பெற்று வரும் போது வசந்தா பத்மாவிடம் கேட்டாள்.
"என்னடி மாமியார் வீட்டுக்கா.. வாயேன் சேர்ந்து போகலாம்".
பதில் சொல்லாமல் தொடர்ந்தாள். பேருந்து பயணம் பத்து நிமிடத்தில் முடிந்தது. வசந்தா விடை பெற்றுச் சென்றால்.
அதோ - அந்த நான்காவது வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தான் பார்த்து இரசித்த வீடு. ஆசையாய் வளர்ந்த தோட்டங்கள் வரைந்த கோலங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு இவ்வீட்டில் மருமகளாக நுழைந்து இந்நந்தவனத்துச் சூழலே நம் உலகம் என்று முடிவு செய்து அவ்வாறே பல கலர்கனவுகளுடன் வளைய வந்ததெல்லாம் ஒரு வாரத்தில் வடிந்து போனது. காரணம்...
ராஜா!
பெயருக்கேற்ற குணமில்லை. கல்லூரியில் பெரிய படிப்பு முடித்தாலும் ஏற்பட்ட காதல் தோல்வியால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவனுக்கு வடிகாலாக வந்தாள் பத்மா. பெண்களின் மேல் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்பு இவள்மேல் வடிந்தது. அவளை சித்திரவதை செய்தான். ஆனாலும் அப்பாவிகளான அவன் பெற்றோருக்காகவும் அவர்களின் கண்ணீருக்காகவும் அவனை சமாளித்தால்.
அந்த நரக வாழ்க்கை கூட பத்மாவிற்கு வாழக் கொடுத்து வைக்காமல் அவன் ஒருநாள் வேறொரு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டான்.
இரண்டு மாதம் கழித்து அவன் சாலை விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது. சில நாட்கள் துக்கத்தில் கழித்தாலும் தேற்றிக் கொண்டாள்.
வீட்டில் இவள் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் இவளை தன்னுடன் அழைத்துக் கொண்டனர். இருந்தாலும், அந்த வயதான பெற்றோரை நிராதரவாக விட மனமில்லை. எனவே தையல் பயிற்சி மேற்கொண்டு ஆறு மாதத்தில் டெக்ஸ்டைல் கம்பெனி ஒன்றில் பணியில் அமர்ந்து ஐந்தாயிரம் வருமானம் வருகிறது.
மாமியார் அவளை வரவேற்றாள். சிறிதுநேர உபசரணங்களுக்குப் பின் அவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் தந்தாள். நடுங்கும் கைகளால் அதைப் பெற்றுக் கொண்டாள் மாமியார்.
அம்மாடி இதெல்லாம் உனக்கு திருப்தி அளிக்கலாம் ஆனால் எங்களுக்கு மனம் வலிக்கிறது. உன் வாழ்க்கை தரைமட்டமாக காரணமான பாவிகள் நாங்கள். நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கக் கூடாது.
அம்மா உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு தாய் தந்தையர் கிடைத்திருக்கிறீர்கள். என் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று பூத்து முடிந்த சோலை இன்று காய்த்து குலுங்கி கனிய ஆரம்பிக்கும் வேளையில் மரத்தை வெட்டி வேறிடத்தில் செடியாய் மறுபடியும் வளரச் சொன்னால் என்னால் முடியாதம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி விடைபெற்று தன் பெற்றோரை நோக்கிச் சென்றாள்.
இந்த உறவுப் பாலம் நிலைக்கும் என்றும் இடியக் கூடியதல்ல, என்று நினைந்து பொங்கி வர முயற்சிக்கும் கண்களை மகிழ்வுடன் துடைத்தாள். வழி தெளிவாகத் தெரிந்தது வாழ்க்கையும் தான்.

No comments:

Post a Comment