Thursday 14 March 2013

kathai

சிறுகதைகள்


புதிய சருகு

காவல் நிலையத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சிகள் முருகேசனின் உதட்டில் புன்னகையை நிரப்பியிருந்தன. உண்மையிலேயே, இத்தனை வருடங்கள் நேர்மையாகப் பணியாற்றியவர் இன்ஸ்பெக்டர் முருகேசன். இன்றோடு அவர் பணி முடிகிறது. பஜாஜ் பல்சரில் 60 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தார். முருகேசனுக்குப் பின்னால், மாலையுடன் முன்னாள் எஸ்.ஐ., பாண்டியன் உட்கார்ந்து இருந்தார். பாண்டியன் முருகேசனைவிட இரண்டு வயது மூத்தவர். முன்னரே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருவரும் நீண்டநாள் நண்பர்கள்.
"ஹூம்..." என்ற பெருமூச்சுடன் பாண்டியன் பேச ஆரம்பித்தார்.
"என்ன, முருகா... இனிமே காலைலயிருந்து சாயந்தரம் வரைக்கும் சும்மாவேதான் இருக்கணும். ஒன்னு பண்ணு! பேசாம நம்ம "யூனியன் கிளப்"புல வந்து சேர்ந்துடு. நம்மள மாதிரி ரிட்டயர்டு கேஸீக ஒரு நாலஞ்சு அங்க இருக்கு. காலைல ஆறு மணிக்கு ஜாகிங்... ஏழு மணிக்கு பேட்மிட்டன்... எட்டு மணிக்கு வீட்டுல மருமக கையால சாப்பாடு, பத்து மணிக்கு திரும்ப "கிளப்"புக்கு வந்துடு. பகல் பூராம் கேரம் போடு... ரம்மி... நல்லா பொழுதுபோகும். என்ன சரியா?"
"சான்ஸே இல்ல அண்ணாச்சி... சும்மா ஒக்காந்து அரட்டை அடிக்குறது, நேரத்தப் போக்குறதெல்லாம் எனக்குப் புடிக்காது, என் போலீஸ் வேலைக்குத்தான் ரிட்டயர்டு. வேற ஏதாவது வேல இருந்துக்கிட்டேதான் இருக்கும்... பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்..." என்றார் முருகேசன்.
பேசிக்கொண்டே வந்த முருகேசன், கடைசி நேரத்தில் டிராபிக்கின் சிவப்பு விளக்கைப் பார்க்க, தடுமாறி நின்றார் முன்னால் நின்று கொண்டிருந்த டூவீலரில் லேசாக மோதி நின்றது பைக்... "மன்னிச்சுக்கோ தம்பி" என்றார் முருகேசன்.
இடிபட்டவனது டூவீலர் புத்தம் புதிது போலும். மிகவும் கோபமாக கத்த ஆரம்பித்தான்.
"கண்ண எங்கய்ய" வச்சிருக்க... வயசாயிருச்சுன்னா கண்ணாடி போட வேண்டியதுதானே... ஒழுங்காப் போயா ரோட்டுல" என்றான்.
அங்கிருந்த டிராபிக் கான்ஸ்டபுள் வேகமாக வந்தான்.
முருகேசனுக்கு "சல்யூட்" அடித்துவிட்டு, இடிபட்டவனிடம் திரும்பினான்.
"டேய் வண்டில ஏதும் உடையலைல பேசாமாகப் போ" என்று அதட்டினான்.
பச்சை விளக்கு விழ இடிபட்டவன் பேசாமல் முறைத்துக் கொண்டே சென்று விட்டான். டிராபிக் காண்ஸ்டபுள், முருகேசன் ஓய்வு பெற்றதைப் பற்றி விசாரித்து, வழியனுப்பினான்.
"பாத்திங்களா அண்ணாச்சி... ரிட்டயர்டு ஆனாலும் அந்த மரியாத குறையுதான்னு... நான் எப்பவும் இப்படியேதான் இருப்பேன். நீங்க வேணாப் பாருங்க..." என்றார் முருகேசன்.
வீட்டிற்குள் முருகேசன் நுழைந்ததும், மீண்டும் மாலை... மீண்டும் வாழ்த்து...
முருகேசனின் மகன் ரமேஷ் அருகில் வந்தான்.
"அப்பா... இங்க பாருங்க...இனிமே நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது... (முருகேசன் மறுத்துப் பேச வர, அவரைப் பேசவிடாமல் நிறுத்தினான்.) ம்.... எதுவும் பேசக் கூடாது.
நல்லா ரெஸ்ட் எடுக்கணும்... வீட்டு வேல எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். உங்க பைக்க மட்டும் எடுத்துக்கிறேன். ஓகேவா?"
கடைசி வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தார் முருகேசன். கையிலிருந்த "பைக்" சாவியை வாங்கிக் கொண்டு ரமேஷ் கிளம்பினான். அவரால் எதையும் பேச முடியவில்லை.
மறுநாள், காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, ஈஸிச் சேரில் அமர்ந்து கொண்டு செய்தித் தாளுக்காகக் காத்திருந்தார். காலை ஏழு மணிவரை பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். வீட்டில் மற்ற எல்லோரும் வேலைக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவரால் அதற்கு மேல் பொறுமையாக அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து ஏதாவது வேலை இருக்கிறதா என்று அங்குமிங்கும் பார்த்தார். செடிகளுக்குத் தண்ணீர் இன்னும் ஊற்றப்படாமல் இருந்தது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு குடத்தில் தண்ணீர் தூக்கப் போனார்.
அவசரமாக கிளம்பும் நேரத்தில் ஏதாவது வாக்குவாதம் வருவது இயல்பு. அந்தக் கோபத்தில் ரமேஷ், வெறுப்பாக வந்து கொண்டிருந்தபோது, தண்ணீர் குடத்தோடு வந்த முருகேசன் அவன் மீது இடித்து விட்டார்.
"ஏம்ப்பா... பேசாம ஒக்கார வேண்டியதுதான? கண்ணுமண்ணு தெரியாம வந்து மோதுறீங்க" என்றான் ரமேஷ்.
முருகேசன் அதிர்ந்து போனார். டிராபிக் சிக்னலில் இடிபட்ட இளைஞன் திட்டியவார்த்தைகள் ஒருமுறை நினைவிற்கு வந்தது. தனக்கு, "எது நடக்கக் கூடாது" என நினைத்தாரோ அது நடக்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு.
காலை பத்துமணி, இருப்பு கொள்ளாமல் முருகேசன் எழுந்து சாலையில் நடக்கத் தொடங்கினார். அந்த டிராபிக் சிக்னலின் கான்ஸ்டபுல் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு முன்னால் நடந்து சென்றார். கான்ஸ்டபுள் அவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்துவிட்டு, மீண்டும் வேலையில் ஈடுபடத் தொடங்கினான். அந்தப் புன்னகையில் "நடிப்பு" இருப்பதுபோன்று அவருக்குத் தோன்றியது.
பாண்டியனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது முருகேசனுக்கு. "யூனியன் கிளப்" புக்கு சென்றார். பாண்டியன் கேரம் போர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தார். முருகேசனைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவரை அழைத்துச் சென்று தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றவர்களாகவே இருந்தனர்.
முருகேசன் மெதுவாகக் கேட்டார், "ஆமா... இங்க மெம்பராவதற்கு எவ்வளவு கட்டணும்". எதார்த்தமாகக் கேட்பது போல நடித்தார். பாண்டியன் அவரைக் குத்திக்காட்ட விரும்பவில்லை. அவருக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று! அவரும் ஓய்வு பெற்றவர் தானே!
காற்றடித்த போது, மரம் ஒன்றிலிருந்து புதிதாக ஒரு சருகு உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அங்கே ஏற்கனவே மண்ணோடு பதிந்த நிலையில் நிறைய சருகுகள்... புதிய சருகு விறைப்பாக நின்றது. காற்றுக்கு அங்குமிங்கும் ஓடியது. ஒரு காலடி வந்து அதை மிதித்தபோது அதுவும் மண்ணோடு பதிந்தது.

No comments:

Post a Comment